பீக் சீஸனில் குற்றாலமும், இருட்டுக்கடை அல்வாவும்/ராம் ஸ்ரீதர் 

(சிறிய பயணக்கட்டுரை)

அறிவு ஜீவி சுஜாதா வாசகர் குழு /ராம் ஸ்ரீதர் 

சில நாட்கள் முன்னர் அலுவலக வேலையாகத் திருநெல்வேலி சென்றபோது காலையில் நல்ல பிள்ளையாக குறுக்குத்துறை ஸ்ரீ சுப்ரமண்யரையும் பிறகு ஸ்ரீ நெல்லையப்பர் / காந்திமதி அம்மனையும் தரிசித்துவிட்டு, எதிர்பார்த்ததை விட போன வேலை எளிதில் முடிந்துவிட்டதால், குற்றாலம் செல்ல நண்பர் ஒருவர் மூலம் மறுநாள் கார் ஒன்றை ஏற்பாடு செய்துவிட்டு வேறொரு நண்பரோடு குற்றாலம் சென்றேன்.

கடந்த வாரம் வரை விடாது மழை பெய்ததாலும், கிட்டத்தட்ட 2 வருடங்கள் மேலாக கொரோனாவின் அட்டகாசத்தால் குற்றாலம் செல்லமுடியாத மக்கள் கூட்டம், மிகச் சரியாகத் திட்டம் போட்டு நாங்கள் சென்ற அன்றே பெருந்திரளாக வந்தனர்.

போதாதற்கு தென்காசி / குற்றாலம் எல்லாமே வெயில் கொளுத்தியது. முதலில் மெயின் ஃபால்ஸ் சென்றுவிட்டு, அங்கிருந்த கூட்டத்தைப் பார்த்த நண்பர், “ஐந்தருவி போகலாம் சார்” என்றார். உடனே அத்தனை பேர் காதிலும் அது விழுந்துவிட்ட மாதிரி அங்கேயும் கட்டுக்கடங்காத கூட்டம். இதுவரை குற்றாலம் சென்று குளித்து ஆனந்தப்பட்டது எல்லாமே இந்தக் கருமம் பிடித்த சீஸனில் அல்ல என்று எனக்கு அப்போது (தான்) உறைத்தது.

பேசாமல் திருநெல்வேலி திரும்பலாம் என்று தீர்மானித்து, எதற்கும் கடைசி முயற்சியாக இருக்கட்டும் என்று தென்காசி நண்பர் ஒருவரை அழைத்தேன்.

ஆளுங்கட்சியில் செல்வாக்கோடு இருக்கும் அவர், “ஏ, இம்புட்டு தொலவு வர்றதுக்கு முன்னாடி என் நெனப்பு வரலியாக்கும் உமக்கு?’ என்று கலாய்த்துவிட்டு, “ஏ, என்ன செய்யலாம்னு பாக்கேன்” என்று சொல்லி மொபைலைத் துண்டித்தார்.

சிறிது நேரத்தில் என்னை மொபைலில் அழைத்த ஒருவர் தன்னை இன்ஸ்பெக்டர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, “ஏ, இப்ப ஒரே சீஸன் தொந்தரவுலா?’ என்று அலுத்துக்கொண்டு, ‘ஏ அஞ்சருவி வாரும், நான் பாக்கேன்” என்று சொல்லி முடித்தார்.

மறுபடியும் ஐந்தருவி செல்லும் வழியெங்கும் வரிசையாக பழக்கடைகள் அமைத்து மலேசியாவின் ரம்புட்டான் போன்ற பழ வகைகள் வரை பெரும்பாலான பழங்ளும் இருக்கவே, கொஞ்சம் வாங்கி சாப்பிட்டுக்கொண்டே சென்றோம். எங்களுடைய கார் எண்ணை ஏற்கனவே தெரிவித்திருந்தபடியால் அந்த சாலையில் வண்டிக்கெல்லாம் நாற்பது ரூபாய் டோக்கன் போட்டுக்கொண்டிருந்த ஒருவர் உடனே மொபைலில் யாரையோ அழைக்க, இரண்டு போலீசார் அங்கே வந்து எங்களை இட்டுச் சென்றனர்.

அருவியில் எக்கச்சக்கமான கூட்டம். எங்களை அழைத்துச் சென்று அருவியருகே விட்டுவிட்டு ‘சார், ஒரு பத்து நிமிஷம் தான். ஏ ஒரே கூட்டம்ல” என்று சொல்லி அகன்றனர்.

கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அருவியில் அவசர அவசரமாக நீராடிவிட்டு நகர்ந்தோம். படிகளேறி மேலே வந்து போலீசாருக்கும், தென்காசி ஆளுங்கட்சி நண்பருக்கும் நன்றி தெரிவித்து காரில் ஏறிக் கிளம்பினோம்.

குற்றாலத்தில் திருப்பதி போல ‘ஜருகண்டி” கதை ஆகிவிட்டபடியால், திருநெல்வேலிக்குள் நுழைந்து, நேராக மறுபடியும் குறுக்குத்துறை சென்றோம். கூட்டமே இல்லாமல் தாமிரபரணி சலசலத்து ஓடிக்கொண்டிருக்க, முதல் நாளே முருகரை தரிசித்து விட்டதால், வெளியிலிருந்தபடியே முருகருக்கு மீண்டும் ஒரு சலாம் போட்டுவிட்டு, தாமிரபரணி ஆற்றில் இறங்கி ஏகாந்தமாக ஒரு அரைமணிக்கு மேல் குளித்து மகிழ்ந்தோம்.

சீஸன் சமயத்தில் தப்பித் தவறி குற்றாலம் இனி வரக்கூடாது என்று மனதிலேயே சூளுரைத்துக் கொண்டு, லோக்கல் நண்பரை அழைத்து உலகப்புகழ் இருட்டுக்கடை அல்வா வேண்டும் என்று சொல்லி, அவர் ஒரு மணி நேரத்தில் அல்வா கொடுக்காமல் இருட்டுக்கடை அல்வாவுடன் வந்ததால் நெல்லை எக்ஸ்பிரஸ்ஸில் ஏறிக் கிளம்ப, நெல்லை பயணம் இனிதே நிறைவேறியது.

t

One Comment on “பீக் சீஸனில் குற்றாலமும், இருட்டுக்கடை அல்வாவும்/ராம் ஸ்ரீதர் ”

  1. சார், மன்னிக்கவும். குற்றாலம்  பற்றிய பதிவு என் சமீபத்திய அனுபவம் / பதிவு. அது சுஜாதா எழுதியது அல்ல. தங்கள் விருட்சம் நாளிதழில் இந்த மாற்றத்தை தயவு செய்து செய்து விடவும். 

Comments are closed.