கம்பன் கவியமுதம்—3/வளவ.துரையன்


மதிலுக்கு உவமைகள்

மேவ அரும் உணர்வு முடிவு இலாமையினால்
வேதமும் ஒக்கும் விண்புகலால்
தேவரும் ஒக்கும் முனிவரும் ஒக்கும்
திண்பொறி அடக்கிய செயலால்
காவலின் கலைஊர் கன்னியை ஒக்கும்
சூலத்தால் காளியை ஒக்கும்
யாவரும் தன்னை எய்துதற்கு அரிய
தன்மையால் ஈசனை ஒக்கும் [102]

கம்பன் கோசல நகரத்து மதிலுக்குப் பல்வேறு உவமைகளை அடுக்குகிறான். முதலில் அம்மதில் வேதத்தைப் போன்றதாம்; ஏனெனில் வேதமானது நம்முடைய அறிவினால் முடிவு காண முடியாது. அதேபோல அம்மதிலின் முடிவையும் காண முடியாதாம். அம்மதிலானது மேல் உலகம் வரை செல்வதால் விண்ணுலகில் வாழும் தேவரைப் போன்றதாகும். பல்வேறு பொறிகளைத் தன்னுள்ளே அடக்கி வைத்திருப்பதால் அம்மதில் ஐம்பொறிகளை அடக்கி வைத்திருக்கும் முனிவரைப் போன்றதாகும். மேலும் அது நகரத்தைக் காக்கின்ற துர்க்கையைப் போன்றதாகும், ஏனெனில் வேறு யாரும் படையெடுத்து வராமல் அது காத்து வருகிறது. அது தன் மேல் இடிதாங்கியான சூலத்தைத் தாங்கி நிற்பதால் சூலம் கையில் பொருந்தி இருக்கும் காளியைப் போன்றதாகும். யாருமே அம்மதிலை எளிதில் அடைய முடியாத அரிய தன்மையைப் பெற்றது அது. அதனால் எவராலும் எளிதில் அடைய முடியாத கடவுளைப் போன்றதாகும்.

வானம் வரை உயர்ந்தது என்பதால் உயர்வையும், துர்க்கையைப் போன்றது என்பதால் உறுதியையும், முனிவரையும் கடவுளையும் போன்றது என்பதால் பெருமையையும் பெற்றது அம்மதிலாம்.