ஞானக்கூத்தன் மறைவுக்கு அஞ்சலி/கால சுப்ரமணியன் 

(ஜூலை 28, 2016 ல் எழுதப் பட்டது )

தீபம் இதழில் 1973 ஆரம்ப மாதங்களின் இதழ் ஒன்றில் நான் படித்த ஞானக்கூத்தனின் முதல் கவிதை இது.

(தலைப்பற்ற கவிதை)

தெருக்களில் திரிந்தேன்

வானக்

காட்டிலே காலைப்போதின்

குழப்பத்தில் சிக்கிக்கொண்டேன்

நான் நின்றால்

தானும் நின்று

நான் சென்றால்

தானும் மேலே

தொடர்கிற நிலவைப் பார்த்தேன்

வானத்தில் வர்ணக்கோலம்

விசிறிடத்

திகைத்த மீனைப்

போய்க் கொத்தும் பறவை போல

ஒரு கேள்வி மனசுக்குள்ளே

என்னடா செய்வாய் தம்பி

பெரியவன் ஆன பின்பு

என்றொரு கேள்வி கேட்டார்

இளமையில் சிலபே ரேன்னை.

அன்று நான் அதற்குச் சொன்ன

பதிலொன்றும் நினைவில் இல்லை

இன்று நான் என்ன சொல்வேன்

அதைக் கேட்க அவர்கள் இல்லை. – ஞானக்கூத்தன்

இதிலிருந்துதான் ஞானக்கூத்தன் அறிமுகம். நான் அப்போது கோவையில் பட்டப்படிப்பில் நுழைந்திருந்த முதலாண்டு. இரவு பகல் குழப்பம் இருந்தாலும், அன்று விசித்திரமாக யாப்பமைதியுடன் விநோதமாகத் தென்பட்ட கவிதை என்பதால் தொடந்து இது ஞாபகத்தில் இருந்தது.

இதற்குப் பிறகு அடுத்ததடுத்த ஒரு தீபம் இதழில் ‘சூரியனுக்குப் பின்பக்கம்’ என்ற ஒரு கவிதை. இந்தக் கவிதை பின்பு வந்த எந்தத் தொகுப்பிலும் இல்லை என்றே நினைக்கிறேன். ‘சூரியனுக்குப் பின்பக்கம்’ என்ற பெயரில் ஒரு கவிதைத் தொகுப்பு வெளிவந்தபோதும் இந்தக் கவிதை அதில் இருந்ததில்லை. கவிதைத் தலைப்பை மட்டும் புத்தகத்தலைப்பாக்கியதோடு சரி.

சம்பந்தமற்று தர்க்கப்பொறுத்தமற்று இருந்தாலும் (எனவேதான் சேர்க்கவில்லை போலும். தலைப்பை மட்டும் மறுபடியும் ஒரு அபத்தத் தன்மைக்காக சேர்த்தார் போலும்) இதுவும் ஒரு விசித்திர விநோதக் கவிதைதான்.

சூரியனுக்குப் பின்பக்கம்

———————————–

யாரைப் பார்க்க உனக்காசை?

என்றால் உடனே

நான் சொல்வேன் :

அனைத்தும் வல்ல இராட்சதரை.

எதனால் என்றால்

அவரில் சிலரைக்

கனாப் பொழுதில்

அவர்கள் தொகையால்

எண்ணற்று

ஒன்றாய்க் கூடி

சூரியனைப் பாறை கொண்டு தூளாக்கிக்

கையால் இழுக்கும் வண்டிகளில்

அடுக்கிக் கொண்டு சென்றார்கள்

எதற்காம் இந்தப் பாளங்கள் என்றேன்

சொன்னான் ஓரரக்கன்

இன்றைக் கெங்கள் உணவுக்கு.

உடம்பும் பொலிவும் ஒருசேரச்

சோரும் அந்தச் சூரியனை

அள்ளிக் கொண்டு பலர் சென்றார்

நெல்லைத் தூக்கும் எறும்பைப்போல்

யாரைப் பார்க்க உனக்காசை?

என்றால் சொல்வேன் :

இராட்சதரை.

எதனால் என்றால் சூரியனை

யார் இடித்தார் உணவுக்கு? – ஞானக்கூத்தன்.

முன்றில் பெரிய அளவில் 80களின் தொடக்கத்தில் நடத்திய இலக்கியக்கூட்டத்தில்தான் மேடையில் இருந்த ஞானக்கூத்தனை, அழகியசிங்கரிடம் கேட்டு, முதன்முதலில் பார்த்தது. பின்பு பல கூட்டங்களில் மட்டும் பார்த்தும் பேச்சைக் கேட்டுமிருக்கிறேன். அவரைக் கடுமையாக விமர்சித்துப் பிரமிள் எழுதிய கட்டுரைகளை லயத்திலும் லயம் வெளியீடுகளிலும் கொண்டுவந்திருக்கிறேன். நேரில் நெருங்கிப் பேசிப் பழகியதில்லை.

ஞானக்கூத்தன் மறைவுக்கு எனது அஞ்சலிகள்.

பிரமிள் ஃபைலில் இருந்த புகைப்படங்களில் இருந்து….

முதல் 3 படங்களில் மௌனி, சிதம்பரசுப்ரமணியன், பிரமிள், சச்சிதானந்தம். அடுத்தவற்றில் பிரமிள், சச்சிதானந்தம், மற்ற ஒருவர் (முதலிலும் இடையிலும்? இருவர்? – இவரை அடையாளம் தெரிந்தோர் கூறவும்) கடைசியில் பிரமிள் ஆகியோருடன் ஞானக்கூத்தன்.

Like

Comment

2 Comments on “ஞானக்கூத்தன் மறைவுக்கு அஞ்சலி/கால சுப்ரமணியன் ”

  1. மௌனி வீட்டில் எடுத்த புகைப்படங்கள். மௌனி, ந.சிதம்பரசுப்ரமணியம், பிரமிள். ஞானக்கூத்தன், கி.அ.சச்சிதானந்தன், மௌனியின் உதவியாளராக இருந்தவர் (துர்வாஸ ஜே.வி.நாதனாக இருக்கலாம்). பிரமிள், ரங்கநாதன் (ஞா.கூ.) எல்லாப் படங்களிலும் இருக்கிறார்கள். (கா.சு.)

Comments are closed.