சுவர்/முபீன் சாதிகா

அந்த அறையில்தான் எப்போதும் இருக்கிறாள் அவள். அந்தச் சுவர்களுக்கு அவளைப் பற்றி எல்லாம் தெரியும். அந்தச் சுவர்கள் மட்டுமே அவர்களுக்குத் துணை என எண்ணிக் கொண்டிருந்தாள். அதை நினைத்து அப்படியே உறங்கிவிட்டாள். இரவு மிகவும் இறுக்கமாக இருந்ததால் எழுந்து பார்த்தாள். சுவர்கள் அவளை நெருங்கி வந்துவிட்டிருந்தன. ஏன் இப்படி நெருங்கி வந்திருக்கின்றன என்று கேட்டாள். அவளைக் கொல்வதற்காக என்றன. என்ன காரணம் என்றாள். அவளை அந்தச் சுவர்கள் வேவு பார்ப்பதை வெளியே சொல்லித் திரிகிறாள் மற்றும் அப்படி வேவு பார்ப்பதைக் கண்டுபிடித்துவிட்ட இறுமாப்புடன் இருப்பதாகவும் கூறி அதற்காகத்தான் கொல்ல முடிவெடுத்திருப்பதாகக் கூறின. இறுமாப்பைக் கைவிட்டால் கொல்லாமல் இருப்பது சாத்தியமா என்று கேட்டாள். புறத்தில் இருப்பவர்கள் சொல்வதை வைத்தே அதைக் குறித்து முடிவு செய்ய முடியும் என்றன. அரணாக நிற்கும் சுவர்கள் புறத்தில் இருப்பவர்களின் பேச்சைக் கேட்டு நடப்பது அழகல்ல என்றாள். புறத்தில் இருப்பவர்களுக்கு அவை விசுவாசமாக இருப்பதாகவும் அதனால் அவர்களின் பேச்சுதான் முக்கியம் என்றும் கூறின. தன்னுடைய செயல்களை மட்டுமே அவைகளால் வேவு பார்க்க முடியும் தான் சிந்திப்பதை வேவு பார்க்க முடியாதே என்றாள். இந்த ஒரு காரணத்திற்காக அவளைக் கொல்லாமல் இருக்க முடியுமா எனக் கேட்டுச் சொல்வதாகக் கூறின. சில மணித்துளிகள் கழித்து கொல்லாமல் விட்டுவிடப் போவதாகவும் ஆனால் இப்படி நெருக்கிக் கொண்டே இருக்கப் போவதாகவும் இந்தக் குறுகிய இடத்தில்தான் இனி அவள் வாழவேண்டும் என்றும் கூறிவிட்டன. வெளியே போக அனுமதி உண்டா என்றாள். அவை ஆமோதித்தன. அப்போது வெளியே வந்தவள் இதுவரை சுவர்களுக்கு நடுவில் வாழ்வதைக் கைவிட்டாள்.

………..