கம்பன் கவியமுதம்–—54/வளவ. துரையன்

கடல் போன்ற அகழி

ஏகுகின்ற தன்கணங்க ளோடுமெல்லை காண்கிலா
நாகமொன்[று] அகன்கிடங்கை நாமவேலை யாமென
மேகமொண்டு கொண்டெழுந்து விண்தொடர்ந்த குன்றமென்று
ஆகநொந்து நின்றுதாரை அம்மதில்கண் வீசுமே [108]

[கணங்கள்=கூட்டங்கள்; நாகம்=பாதாள உலகம்; நாமவேலை=அச்சம் தரும் கடல்; தாரை=மழைத்துளிகள்]

கம்பன் அயோத்தி நகரைச் சூழ்ந்துள்ள அகழியை வர்ணிக்கிறான். மேகமானது மழை பெய்ய எண்ணுகிறது. அதற்காக அது கடல் நீரை மொள்ள வேண்டும் அல்லவா? ஆண்டாளும், ‘ஆழிஉள் புக்கு முகுந்து” என்று பாடினாரே? அயோத்தியின் அகழியைப் பார்க்கிறது. தம் மேகக்கூட்டங்களை எல்லாம் அழைத்துக் கொண்டு வருகிறது. எல்லை காணமுடியாமல் பாதாள உலகம் வரை ஆழமாகவும், பரந்தும் காணப்படுகின்ற அந்த அகழியை அச்சம் தருகின்ற கடலாக எண்ணுகிறது. அதில் இறங்கி அந்நீரை உட்கொண்டு எழுகிறது. ஆகாயத்தைத் தொடுமாறு உயர்ந்து நிற்கும் மதிலை ஒரு மலையென எண்ணி தன் உடம்பு வருந்த அதன் மீது ஏறி மழை நீர்த்துளிகளை வீசுகிறது” என்று கம்பன் கூறுகிறான்.
இப்பாடலில் அகழியின் ஆழமும், பரப்பும், மதிலின் உயர்ச்சியும் தெரிகிறது. மதிலை மலையென எண்ணி அதன் மீது மழை பொழிவதால் இதை மயக்க அணி என்பர்.