தெரியாத ஏரியாக்காரன் /ஞானக்கூத்தன்

என்னை நீங்கள் பார்த்ததே இல்லை என்கிறீர்களா?
பார்த்திருக்காவிட்டால் என்ன?
அதனால் நீங்கள் சற்றும் குறைந்துவிட மாட்டீர்கள்
தினசரித் தாள்களை நான்காய் விரித்துப் பாயாகப் பாவித்து
கிழிந்து போன கோஆப்டெக்ஸ் போர்வையில் குளிரும் பட்டணத்திரவைக் கழிப்பவன் நான் அதுவும் எங்கே? நடைபாதையில் நீங்களோ நடைபாதையை கவனித்துப் போகும் பார்வை உடையவரில்லை சொல்லப் போனால் நடைபாதையின் அகலத்தைக்
குறைத்துவிடப் பரிந்துரை செய்த கமிட்டியின் உறுப்பினராகக் கூட ஒருவேளை நீங்கள் இருக்கலாம்
தெருவில் போவோர் வருவோரிடம் ‘திராவிடர் உடைமையடா’ என்று பாட்டுப் பாடி கையை நீட்டிக் காசு கேட்பவன் நான் நீங்கள் நாணயங்களைத் தொடாதவர் அழகாக சீவி உறிஞ்சு குழல் செருகி கொடுக்கப்பட்ட இளநீரைக் காரில் இருந்தபடி வாங்கிக் கொண்டு காசைக் கடாசுபவர் நீங்கள்
கீர்த்தனைகள் பாடிக் குழுவாகப் போகும் குருட்டுப் பிச்சைக்காரர்கள் பின்னே வெறுமனே தொடரும் என்னை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்
ஆனால் ஒருமுறை என்னைப் பார்த்தீர்கள் உங்கள் காரின் முன் சக்கரத்தில் அடிபட்டு மாண்டு போன எருமைக் கன்றுக்குட்டி கார் முன்பு திடீரென்று வந்ததாக சாட்சி சொல்ல ஒருவன் தேவைப்பட்டபோது என்னை நீங்கள் பார்த்தீர்கள்
என்னைப் பலநாளாய்த் தெரியும் என்றீர்கள் ஒரு தினத்தை ஒரு சம்பவத்தைக் பொய் சொன்னீர்கள்
பழைய ஆனால் கிழியாத இன்னமும் உடுக்கத் தகுந்த சுடிதார், நைட்டிகளை என் பெண்ணுக்குத் தருவதாய் வாக்களித்தீர்கள். என் மனைவிக்கும் கமலஹாசன் சினிமாவுக்கு டிக்கட் வாங்கித் தருவதாய்க் கூறினீர்கள்
காரின் முன்பு எருமைக் கன்றுக் குட்டி தானாகவே விழுந்ததென்று சாட்சி சொல்ல
அன்புடன் கேட்டுக் கொண்டீர்கள்
நானும் சிரித்தேன். ஆனால் இசைந்தேன் எனக்கு சிரிக்கத் தோன்றிய போது எனக்கு என்னைத் தெரிந்தது நன்றாய் பார்க்காதவர் பார்த்தீரே என்று இனிமேல் ஒருமுறை பார்க்க முடியுமோ என்று மஅறுபடி என்னைப் பார்க்க நேர்ந்தால் கன்றுக் குட்டிகள் சாகாமல் இருக்க வேண்டுமே சாமி என்று.

முகநூல் பதிவு : எச்.முஜீப் ரஹ்மான்