வளர்ச்சி/முபீன் சாதிகா

அவனுக்குப் பிடித்தப் பொருட்கள் தேவை என்றால் உடனடியாக அவனது கை மீக நீளமாக வளர்ந்துவிடும். அந்தப் பொருளை எடுத்துக் கொண்டு பழையபடி மீண்டும் முன்பிருந்த நிலைக்கே வந்துவிடும். அதே போல் அவன் திருடியதைப் பார்த்து யாராவது துரத்தினால் கால்கள் நீண்டு வளர்ந்துவிடும். மலையைக் கூடத் தாண்டிச் சென்றுவிடுவான். ஒரே இடத்தில் இருந்து திருடினால் அடையாளம் காணப்படுவான் எனப் பல இடங்களுக்கும் சென்று திருடிக் கொண்டிருந்தான். ஒரு நாள் ஒரு குழந்தை ஒரு கடை முன் அழுது கொண்டு நின்றிருந்து. அதனிடம் சென்று என்ன வேண்டும் எனக் கேட்டான். எதிரில் இருந்தக் கடையைக் காட்டி அங்கிருந்த ஒரு பொம்மையைத் தொட்டுப் பார்க்கவேண்டும் என்றது. இது என்ன பெரிய காரியம் என வழக்கம் போல கையை நீட்டி அந்தப் பொம்மையை எடுத்து அந்தக் குழந்தையிடம் கொடுத்தான். அது தொட்டுப் பார்த்துவிட்டுக் கொடுத்துவிட்டது. அந்தப் பொம்மையை அந்தக் குழந்தையிடமே கொடுத்து வைத்துக் கொள்ளச் சொன்னான். அப்படிச் செய்வது திருட்டுத்தனம். வாங்கிக் கொடுத்தால் வைத்துக் கொள்வதாக அந்தக் குழந்தைச் சொன்னது. அப்போதுதான் அவனுக்குத் தன்னுடைய திருடும் புத்தியால் அந்தக் குழந்தையிடம் பட்ட அவமானம் பெரிதாகத் தோன்றியது. அத்துடன் இனி திருடக் கூடாது எனவும் தன்னுடைய வளர்ச்சியை நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்தவேண்டும் எனவும் நினைத்தான். அப்போது ஒரு மரத்திலிருந்து பறவை பெரிதும் கத்திக் கதறியது. அதனுடைய குஞ்சை ஒரு பருந்து தூக்கிக் கொண்டு பறந்துகொண்டிருந்தது. உடனடியாக இவன் தன்னுடைய கையை நீளமாக்கி அந்தப் பருந்தைப் பிடித்து அதன் வாயிலிருந்த குஞ்சை எடுத்து அந்தப் பறவையின் கூட்டில் வைத்தான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த பலர் அவனைப் பெரிதும் பாராட்டினர். ஒரு சிறிய நல்ல காரியம் செய்தால் கூட இத்தனைப் பாராட்டுகள் கிடைக்கின்றனவே என நினைத்துப் புளங்காகிதம் அடைந்தான். ஆனால் அவனுக்கு என்ன வேலை செய்யவும் பிடிக்காமல் இருந்தது. சோர்ந்து ஒரு பள்ளிக்கு எதிரில் அமர்ந்துவிட்டான். அப்போது அந்தப் பள்ளியின் மேற்கூரையில் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. அதைப் பார்த்தவுடன் ஓடிவந்து அங்கிருந்த குழந்தைகளைத் தன் நீண்ட கைகளால் லாவகமாகத் தூக்கித் தூக்கி வெளியில் போட்டு அனைவரையும் காப்பாற்றிவிட்டான். அவர்களின் பெற்றோர் வந்து அவன் செய்த உதவிக்குக் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். அந்தப் பள்ளியின் விடுதி காப்பாளராக அவனுக்கு வேலையும் கிடைத்தது. அவ்வப்போது எங்காவது வெளியில் சென்றால் தன் திருடும் தொழில் நினைவுக்கு வந்தது. கட்டுப்படுத்திக் கொண்டு வேலையில் தொடர்ந்தான்.

…………………….