எண்ணம் /ஆர் வத்ஸலா

தனது குட்டி மகளுக்கு
மதிய உணவு
எடுத்துப் போகையில்
பார்ப்பாள் தினமும்
அக்கிழவரை

தள்ளாத வயதில்
கிழிந்து தைத்த
சட்டையும்
நைந்த வேட்டியுமாய்
முடியாமல் மிதிவண்டி மிதித்து வருவார்
டப்பாக்களில்
முறுக்கு கமர்கட்
மாலாடுடன்
மனைவி செய்தது போலும்

பள்ளிக் குழந்தைகள் பட்டாளம்
அவரை ‘முறுக்கு தாத்தா’ என்றழைத்து மொய்க்கும்

இவள் வாங்கித் தரமாட்டாள்
மகளுக்கு
தான் செய்வது மட்டுமே சுத்தமானது என்று முழு நம்பிக்கை
இவளுக்கு

அவரிடம் அனுதாபம் உண்டு
நினைத்துக் கொள்வாள்
அடிக்கடி
‘அவருக்கு ஒரு வேட்டி சட்டை வாங்கித் தரணும்’
நினைத்துக் கொண்டே இருந்தாள்
ஒரு நாள் அவர் வருவது
நின்று விட்டது

One Comment on “எண்ணம் /ஆர் வத்ஸலா”

Comments are closed.