
ஈருருளை இவனின் ஒவ்வோர் உருளலும்…
எனக்கோர் பருக்கையாகிப் பசியாற்றும்…
வண்டி உயர வாண்டாயிருந்த போதிருந்து…
வாழ்விறுதி வரை வரும் தோழன்…
குதித்து ஏறிக் குரங்குப் பெடலிட்டு…
குண்டுகுழியெல்லாம் விழுந்தெழுந்து…
நாளாக நாளாக, நானாகவேச்
சீராகச் செலுத்த முடியுமென்ற…
வாழ்க்கைப் பாடத்தை,
வார்த்தையின்றிச் சொன்ன ஆசான்…
கைகளுக்குள் சிறை பிடித்து…
கால்கள் உரச உரச, கதகதப்பில்…
கழுத்து வியர்வை மணத்தில்…
காதலில் மயங்கி, காமத்தில் கிறங்கி…
முன்னமர்த்தி அவளை…
முத்தமிட்டுக் கொண்டே…
வாழத் துணிந்ததும்
வாகனமாகிய இவனில் தான்…
என்னைச் சுமந்து, அவளைச் சுமந்து…
என் பிள்ளைகள் சுமந்து…
ஒருநாளும் அலுத்ததில்லை…
ஓய்வெல்லாம் கேட்டதில்லை…
சிறிது எண்ணெய் கேட்கும்,
செல்லச் சிணுங்கல்கள் அவ்வளவே…
ஏறி உட்கார்ந்தால் எங்களுக்குள் என்றும் இளமை தான்…
மிதிக்க மிதிக்க என்னை,
மதித்து என்னுடனே வருமிவனை…
பழசென்று நான் இதுவரை
பகடி பேசியதில்லை; இவனும் தான்…
இன்றும் உலை கொதிப்பது
இவனை நான் மிதிப்பதால் தான்…


மிகவும் நன்றாக வந்திருக்கிறது
பாராட்டுகள்
பழசென்று நான் இதுவரை
பகடி பேசியதில்லை; இவனும் தான்…
ஆஹா..👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽
வாழ்க்கைப் பாடத்தை
கவிதையாக சொல்லி விட்டீர்..👏🏽👏🏽👏🏽
அருமை.