
அந்த அருங்காட்சியகத்தில் கண்ணாடியாலான சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அந்த அருங்காட்சியகத்தைக் காண வந்த அவன் கண்ணாடியால் செய்யப்பட்ட ஒரு பெண்ணின் சிற்பத்தைக் கண்டவுடன் அங்கேயே நின்றுவிட்டான். அது போன்ற அழகான ஒரு பெண் தனக்குக் கிடைத்தால் எத்தனை அருமையான வாழ்க்கை அமையும் எனக் கனவு கண்டான். அந்தக் கண்ணாடிப் பெண்ணிடம் பேசிப் பார்க்க நினைத்தான். அவள் இருந்த பேழையின் அருகில் சென்று தன்னுடன் அவள் வர விருப்பமா என்று கேட்டான். அவள் அன்று இரவு அங்கு நடக்கும் விருந்துக்கு அவனை வரச் சொல்லி அழைத்தாள். இரவு அருங்காட்சியகம் மூடிவிடுவார்கள் என்பதால் அங்கேயே மறைந்து இருந்துகொண்டான். இரவு எல்லாச் சிற்பங்களும் அங்கு உயிர் பெற்றன. அங்கு பெரிய கொண்டாட்டம் தொடங்கியது. இவன் மறைந்திருந்து அதைக் கவனித்தான். அந்தக் கண்ணாடிப் பெண் மற்றொரு கண்ணாடி ஆணுடன் பாலே நடனம் ஆடினாள். அவர்கள் இருவரும் கொஞ்சம் ஒதுங்கி அமர்ந்து பேசத்தொடங்கினார்கள். இவன் அவர்கள் இருந்த இடத்தை நோக்கி மெதுவாக நகர்ந்தான். ஒருவன் தன்னுடன் வருமாறு அழைத்திருப்பதாக அவள் சொன்னாள். கண்ணாடி ஆண் அவனைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறாயா என்று கேட்டான். அவன் விரும்பினால் செய்து கொள்ளலாம் என நினைப்பதாகக் கூறினாள். அவனை ஒரு நாள் இந்த அருங்காட்சியகத்தில் சிலையாக வந்து நிற்கச் சொல் அதன் பின் முடிவெடு என்றான். ஏன் என்று கேட்டாள். இந்த அருங்காட்சியகத்தில் பலரும் வந்து உன்னைப் பார்க்கிறார்கள். உன் புகழ் உலகெங்கும் பரவுகிறது. அவனுடன் இருந்தால் அது ஒரு பெரிய சிறையாகிவிடும். அந்த வாழ்க்கை உனக்கு இனிக்காது. அதனால்தான் அவன் இந்த அருங்காட்சியக வாழ்க்கையை ஏற்பது கடினம் அப்படித்தான் அவனுடன் இருக்கும் வாழ்க்கையை ஏற்பது உனக்குக் கடினம் என்றான். கண்ணாடி ஆண் சொன்னது அவளுக்குச் சரியென்று தோன்றியது. அடுத்த நாள் அவன் வருவானா என்று காத்திருந்தாள். அவனோ ஒரு நாள் சிலையாகிவிட்டால் அதன் பின் மீள்வது சிரமமாகிவிட்டால் என்ன செய்வது என நினைத்து இனி அந்த அருங்காட்சியகம் பக்கம் போகவே வேண்டாமென்று முடிவெடுத்திருந்தான்.
