ஜே.கிருஷ்ணமூர்த்தி கவிதை: (தமிழில் பிரமிள்)

       வாழ்வுப்பாடல் 

மலர் ஒன்று தன்னகத்தே
தனது சுகந்தத்தை
வைத்திருப்பதுபோல்
ஓ உலகே, உன்னை எனக்குள்ளே வைத்திருக்கிறேன்

நானே சுதந்திர நிலை
நீயுன் இதயத்துள்
என்னை, முடிவற்ற மகிழ்ச்சியினை, கொள்

பூமியின் ஆழத்தில் புதைந்துள்ள
ரத்தினம் போன்று நானுன் இதயத்துள் ஒளித்துள்ளேன்

என்னை நீ உண்ணாவிடினும் எனது மண்டலம்
உன்னாலேயே நிரம்பியிருக்கிறது
என்னை நீ நேசிக்காவிடினும் எனக்கு நீயே
மாறாத அன்பன்

என்னை நீ கோவிலில் மதாலயத்தில், மசூதியில்
எங்கு வழிபட்டாலும்
நான் உனக்கு
அறிமுகமற்றவன்
ஆயினும்
நீயே என்
முடிவற்ற தோழன்
பள்ளத்தாக்கினை
மழைமீது பாதுகாப்பது போன்று ஓ, உலகே
என் கரத்தின் நிழலினால்
உன்னை நான் காக்கிறேன்

வறண்ட பூமிக்கு வரும்
மழை போன்று உன்னிடம்
ஓ, உலகே
என் அன்பினைக் கொணர்கிறேன்

உனது இதயத்தை
பரிசுத்தமாய்
எளிமையாய் வைத்திரு
ஓ, உலகே
அதுவே எனக்கு வரவேற்பு
நானே உனது அன்பு, ஆசை

மனசைச் சாந்திப்படுத்து தெளிவாக்கு
ஓ, உலகே
அதுதான் விளக்கநிலையாகும்

நானே உன் விளக்கநிலை
நானே உன் அநுபவத்தின்
சுய முழுமையாவேன்

கோவிலில்
தெருவோரத்தில் அமர்ந்து
இடம் மாறி மாறி
நிழல்கள் நகர்வதைப்
பார்த்தபடியிருப்பவன்
நான்…