திருக்குறள் சிந்தனை 1

17.06.2018

அழகியசிங்கர் 


நேற்று (16.06.2018) – சனிக்கிழமை –  திருக்குறளும் நானும் என்ற தலைப்பில் சி ராஜேந்திரன் ஐஆர்எஸ் அவர்கள் பேசினார்கள்.  கிட்டத்தட்ட 1.30 மணி நேரம் பேசினார்.  இன்னும் சில தினங்களில் அவர் பேசியதை ஒளிப்பதிவில் அளிக்க உள்ளேன்.  இதில் முக்கியமான விஷயம் கலந்துகொண்ட அனைவரும் ஒவ்வொரு திருக்குறளைக் கூறி ஏன் அந்தக் குறள் பிடிக்கிறது என்பதைக் குறிப்பிட்டார்கள்.  
நான் ஒரு முடிவுக்கு வந்தேன்.  தினமும் ஒரு குறளைப் படிப்பது என்று.  பின் அது குறித்து கருத்து எதாவது தோன்றினால் எழுதலாம் என்று நினைக்கிறேன்.  
இதோ நான் இன்றிலிருந்து ஆரம்பிக்கிறேன்.


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவான் முதற்றே உலகு.


இதற்குக் கருத்துரை வழங்கியவர் இரா இளங்குமரனார்.  அவர் என்ன கூறியிருக்கிறார் என்றால் எழுத்துக்களுக்கு எல்லாம் அகரமே முதல்.  அதுபோல் பகுத்து வழங்கிய ஆற்றலே உலகுக்கு முதல் என்கிறார். இந்தக் கருத்துரை சரியா என்பது சந்தேகமாக உள்ளது.  வள்ளுவர் ஆதி பகவான் என்று கூறி உள்ளார்.  இந்தக் கருத்துரையில் அது வரவில்லை என்று படுகிறது.  ஆதிபகவான் முதன் முதலாக உலகத்தில் தோன்றியதுபோல் எழுத்துக்களுக்கெல்லாம் அகரமே முதல் என்று இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.