விட்டுக்கொடுத்தல்/ வளவ. துரையன்

  காலையில் தோட்டத்துச் சுற்றுச்சுவர் மீது காக்கைக்குச் சோறு வைத்தேன். வழக்கம்போல். “கா, கா” எனக் குரல் கொடுத்தேன். நாள்தோறும் வரும் காகம் வந்தது. உடனே உள்ளே வந்தேன். தோட்டத்திலிருந்து ”அம்மா, அம்மா, சீக்கிரம் இங்கே வாயேன்” என்ற கண்ணனின் குரல் கேட்டது. அவனுக்கு ஐந்து வயது இருக்கும். “என்னடா கண்ணா” என்று பதில் சொல்லிக்கொண்டே மீண்டும் தோட்டம் சென்றேன்.
   ”அதோ பாரும்மா, காக்காய்க்கு வைத்ததைக் குருவி வந்து தின்னுது” என்று காட்டினான். ஒரு தவிட்டுக்குருவி வந்து தின்று கொண்டிருந்தது. அது சாம்பல் நிறம் கொண்டது. இரு கால்களாலும் தத்தித் தத்திச் செல்லுமே அது. “ஏண்டா காக்கா தின்னலியா? எனக் கேட்டேன். “இல்லம்மா, காக்கா நாலு கொத்து கொத்தித் தின்னுட்டுப் போயிட்டுது” என்றான். ”அதுக்குப் போதும் போல இருக்கு” என்று கூறினேன். 
    தவிட்டுக் குருவியும் சிறிது தின்று விட்டுப் பறந்து போயிற்று. அதற்குள் அங்குக் காத்திருந்த அணில் ஒன்று வந்து தின்ன ஆரம்பித்தது. “குருவியும் போதும்னு போயிடுச்சும்மா. இப்ப அணில் வந்து தின்னுது, பாரு.” என்றான் கண்ணன். “நீ இன்னிக்குதான் பாக்கறே; நான் தெனம் பாக்கறேன்” என்றேன். “அப்படியாம்மா” என்றான்.
   ”ஆமாம். சரி; காக்காயும் குருவியும் ஏன் போயிடுச்சு?” என்று கேட்டேன். “அதுங்க போதும். இனிமே வாணாம்னு நெனச்சுக்கிட்டுப் போயிடுச்சுங்க” என்றான் கண்ணன். ”அதாண்டா கண்ணா, தனக்குப் போதும்னு காக்கா நெனச்சுக்கிட்டு, குருவிக்கு விட்டுக் கொடுத்துப் போயிடுச்சு. குருவியும் கொஞ்சம் தின்னுட்டுத் தனக்குப் போதும்னு அணிலுக்கு விட்டுக் கொடுத்துப் பறந்து போச்சு. கடைசியிலப் பாத்தியா? மூணுமே தின்னுடுச்சுங்க” ”ஆமாம்மா’
   ”அது போலத்தான் நமக்குப் போதும்னா அத்தோட நிறுத்திக்கணும். அப்பதான் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும்” என்று நான் அவனுக்குப் புரிய வைத்தேன். புரிந்து கொண்ட அவனும், “சரிம்மா அதான் நல்லது” என்று அவனும் பதில் சொன்னான்.