தோழன்/ அனங்கன்

மிதிபடுவதில் உன்னைப்போல்தான் நானும்…
இந்தகிழவனின் மிதிக்கு
நீயோ முன்னுக்குநகர்ந்துவிடுகிறாய்..

நானோபலர் மிதிக்கமிதிக்க
உழண்டுபோன சேறாய் அலைகிறேன்…
உன்னோடு பேசிக்கொண்டு
செல்கையில் பிறர் என்னை
பார்க்கும் பார்வையின் மதிப்பீடு நீயும் அறிந்ததுதான்.
வேறுயார்தான் உன்போல் என்பேச்சைப் பொறுமையாய்
கேட்பார்கள்…நல்லதோழன் நீ.

எனது குழந்தைகளை நான்
ஆளாக்கிப் பயனென்ன…நீதான் என்னை
இன்னும் தூக்கிச்சுமக்கிறாய்…
எனது ஒருவேளை உணவுகூட உன்னால்தான்…

உன்மேல் இருக்கும்போது உயிர்போனால்கூட நல்லதுதான்…
ஏற்றத்தில் உன்னை மிதிக்கவும் முடியாமல்..தள்ளவும் முடியாமல் திணறுவதுபோல்தான் இருக்கிறது வாழ்க்கை.

எனக்குப்பிறகு நீ எடைக்குத்தான்….உன்னால்
எதாவது கிடைக்கும்…
என்னைப் புதைக்கவா…எரிக்கவா செலவுக்கு
சண்டைதான் நடக்கும்.