செல்லப்பாவின் சுதந்திரதாகம்/ப.சகதேவன்

டால்ஸ்டாயின் ‘போரும் வாழ்வும்’ நாவலோடு ஒப்பிடத்தக்க அளவுக்கு முக்கியப் படைப்பாகத் தான் கருதிய ’சுதந்திர தாகம்’ நாவலை சி.சு.செல்லப்பா 1997-ல் வெளியிட்டார். (பதிப்புத்துறையில் நீண்ட காலம் இருந்த அவர் தனது புத்தகம் வெளியிடப்பட்ட ஆண்டு எது எனக் குறிப்பிட மறந்து போனார்) 1998-ல் மறைந்தும் போனார்..மூன்று தொகுதிகளாக 1640 பக்கங்கள் கொண்ட இந்நாவலில் அவர் சொல்லியிருக்கக் கூடிய செய்திகளை அதிக பட்சமாக ஒரு சிறு நாவல் வடிவிலேயே சொல்லியிருக்கலாம். மிகுந்த நெருக்கடிக்குள்ளாகும்போது மனிதமனம் கொள்ளும் பல்வேறு உணர்வுச் சிக்கல்களைப் பற்றியும், அச்சிக்கல்கள் மனித விழுமியத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள் பற்றியும் டால்ஸ்டாய் ஒரு வரலாற்றுப் பின்னணியில் சொன்னார்..ரஷிய நாட்டின் மீது நெப்போலியன் தொடுத்த போரின் பின்னணியில் எழுதப்பட்டது அது… காலனியாதிக்கத்தின் காரணமாக புறவயமாகவும், அகவயமாகவும் இந்தியர்களுக்கு ஏற்பட்ட தீவிரமான மன நெருக்கடிகளுக்கு ஒரு தீர்வாக மகாத்மா காந்தி முன் வைத்த சில திட்டங்களைப் பற்றியது இது. டால்ஸ்டாயின் நாவல் இன்றும் வாழ்கிறது.. ‘சுதந்திர தாகம்’ பற்றி அப்படிச் சொல்ல முடியுமா எனத்தெரியவில்லை..
இந்திய விடுதலைப் போராட்டத்தின் சில கட்டங்களை (1927-34) மையப்படுத்தி தேசீயப்பின்னணி கொண்ட ஒரு பிராமணக்குடும்பத்து வாலிபனின் பார்வையில் சொல்லப்படும் கதை விடுதலைப்போராட்டம் என்பதைத் தாண்டி சாதீயப்பிரச்சினைகளைப் பற்றியும் பேசுகிறது. ஆனால் சத்தியாக்கிரகம், ஓத்துழையாமை,அகிம்சை என்னும் மூன்று போராட்ட உத்திகளைப்பற்றி ஒரு சமூக, வரலாற்றுப் பின்னணியில் சுய அனுபவங்களோடு பேசும் ஒரு நாவல் என்ற நிலையில் தமிழ்ப்புதின வரலாற்றில் ஒரு தனித்த இடத்தைப் பெறுகிறது… இப்போதிருக்கிற சூழலில் இப்படியொரு நாவல் எதிர்காலத்தில் வருமா என்பதை இந்தாவலின் முக்கியத்துவத்தை அதிகரிக்கச் செய்கிறது..ஈழத்தமிழ்ப்போராளிகள் இத்தகைய போராட்ட முறைகளைக் கையிலெடுத்திருந்தால் என்னவாகியிருந்திருக்கும்?
நாவ;லில் ஒரே ஐயர் வாடை..கதையில் முக்கியக் கதாபாத்திரங்களாக வரும் மூன்று வாலிபர்களில் இரண்டு பேர் பிராமணர்கள்.. மூன்றாமவன் சைவ முதலியார்.. (அசைவத்திற்கு இடமேயில்லை) அந்தப் பையனும் அவ்வப்போது பரிகாசத்திற்கு உள்ளாகிறான்..சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை, அகிம்சை என்ற மூன்றும் பிராமணர்களை ஈர்த்திருப்பதற்கு அவர்களிடம் இயல்பாக அமைந்திருக்கும் சாத்வீகக் குணங்களா? இது தமிழ் நாட்டுக்கு மட்டும் பொருந்தக் கூடியதா அல்லது விவிலியம் முதலிய புனித நூல்கள் முன் வைத்த சித்தாந்தத்தின் தொடர்ச்சியா?
செல்லப்பா பல இடங்களில் காந்தியைப் பேச வைத்திருக்கிறார்.. ஓரிடத்தில் காந்தி சொல்கிறார்: ‘பிராமணர்களை அழிக்க முடியாது.. அழிக்கவும் கூடாது.. அவர்கள் தன் சுயதர்மத்தை காப்பாற்றும் வரையில்..நான் சனாதனத்தை வெறுப்பவன் அல்ல..அவர்களாக தம் ஆசாரத்தை அழித்துக்கொள்வது என்பது வேறு விஷயம்..அழிக்க வேண்டியதில்லை..அதனால் நீங்கள் நினைக்கிற பிரச்சினைகள் தீர்ந்து விடாது..அவரவர் தன் மனசாட்சியுடனும், மனிதாபிமானத்துடனும் நடந்து கொண்டு சமூக சீர்திருத்தத்தைப் புகுத்துவது தான் சரி..’ (சுதந்திர தாகம், பாகம்:2, பக்கம் 345)
நான் 1970-களில் சித்தூர் கல்லூரியில் படிக்கும்போது செல்லப்பா அவர்களைச் சந்தித்திருக்கிறேன்..சென்னையிலும், பெங்களூரிலும் அவர் வீட்டில் சாப்பிட்டிருக்கிறேன்.. காந்தி குறிப்பிடும் மனிதாபிமானம் மட்டுமல்ல… மனித நேயமும் அவரிடம் இருந்திருக்கிறது.. தமிழர்கள் மறக்கக் கூடாத ஆளுமை செல்லப்பா..

One Comment on “செல்லப்பாவின் சுதந்திரதாகம்/ப.சகதேவன்”

  1. சுதந்திர தாகம் அற்புதமான படைப்பு. ஆனால் இதுவரை அதற்கான சரியான மதிப்பீடு கிடைக்கவில்லை. இத்தனூண்டு ‘வாடிவாசல்’ புகழ் பெறுவதற்கே 50 வருடங்கள் தேவைப்பட்டது. சுதந்திர தாகத்துக்கு இன்னும் 50 வருடம் தேவைப்படலாம்.

Comments are closed.