
பேரங்காடி ஒன்றின்
அலமாரித் தட்டுகளில்
அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்
ஆயிரக்கணக்கான பொருட்களினிடையே ,
சலனமற்றதொரு
சாத்வீக பாவத்துடன்
சடமென வீற்றிருந்தது அந்த
சலவைக்கல் பொம்மை .
தள்ளு வண்டியுடன்
தனியே வந்த சிறுமி
தனது பெரிய கண்களால்
எதையுமே நோக்காதது போல ,
எல்லாவற்றையும் பார்த்தவாறு
வேண்டுமாயிருந்த
வீட்டு உபயோகப் பொருட்கள்
ஒன்றிரண்டை மாத்திரம்
வண்டிக்குள் வைத்தபடி நிதானமாக

நகர்ந்தவள்
அச் சிற்பத்தின்
சாந்த சொரூபம் கண்டு
சட்டென நிற்கிறாள் ;
வயதுக்கும் மீறி
வளர்ந்திருந்ததால் ,
எத்தனமின்றியே
எட்டி அதை எடுத்தவள்
முன்னும் பின்னுமாய்த்
திருப்பியொரு முறை
முழுதாய் பார்த்த பிறகு
நிறைவோடு கொண்டு போகிறாள்.
விலைப் பட்டியிலிடுமுன்
கையிருப்புத் தொகையை
மனதுக்குள் கூட்டிப் பார்த்தவள்
எதையோ நினைத்துக் கொண்டவளாக
திரும்பிச் சென்று ,
எடுத்த இடத்திலேயே அதை
விடுத்துப் போக ,
அதுகாறுமில்லாதவொரு
அநாதைத்தனம் வந்து
அப்பியிருக்கிறது
இப்போது
அப்பொம்மை முகத்தில் .
