
புத்தகங்களுடன் இதமாக இருப்பதுபோல் என்னால் மனிதர்களுடன் இருக்க முடிவதில்லை. புத்தகத்தின் அடிப்படை என்பது வாசிப்பு தரும் அனுபவம்தான். ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு விதமான அனுபவத்தை கொடுக்கும். நான் உலகில் பல நாடுகளுக்கு சென்றிருக்கிறேன்; ரஷ்யாவுக்கோ சோவியத் யூனியனுக்கோ சென்றதில்லை. ஆனால், அந்த மக்களின் வாழ்க்கை, அங்கே இருக்கும் சூழல் பற்றி எனக்கு நான் சென்ற நாடுகளைவிட ஓரளவு அதிகம் தெரியும்.
தி. ஜானகிராமன் படைப்புகளில் வருபவர்கள் நிஜமான மனிதர்கள்தானா என்ற வியப்பு அவரை படித்தபோது இருந்தது. ‘மோகமுள்’ படித்துவிட்டு நானும் பாலகுமாரனும் கும்பகோணத்தில் அந்த தெருவை தேடிப் போயிருக்கிறோம். தி.ஜா. சொல்லியிருக்கிற அடையாளங்களை மனதில் வைத்துக்கொண்டு, அளி போட்ட வீடுகளை எல்லாம், இதற்குள் யமுனா இருப்பாளா என பார்த்துக்கொண்டே சென்றோம்.
ஜெயகாந்தனும் என் மேல் பெரிய தாக்கம் ஏற்படுத்தியவர். கதையில் தர்க்கத்துக்கு ஒரு இடம் உண்டு என கற்றுக்கொடுத்தவர் அவர்தான்.
ஆங்கில வாசிப்பில் சாமர்செட் மாமின் ‘The Razor’s Edge’ எனக்குள் ஒரு பெரிய பாதிப்பை உண்டாக்கிய நாவல். அந்த தலைப்பு உபநிஷத்தில் இருந்து பெறப்பட்டது. ‘தேடல் என்பது கத்தியின் மீது நடப்பதை போன்றது’ என்று உபநிஷத்தில் ஒரு வரி இருக்கிறது. அதை எடுத்துக்கொண்டுதான் ‘Razor’s Edge’ என்று சாமர்செட் மாம் வைத்தார். மேலும் இங்கே வந்து ரமண மகிரிஷியைப் பார்த்தார்; அவருடன் உரையாடினார். ரமண மகிரிஷியை சுவாமி கணேஷா என்றொரு பாத்திரமாக இந்த நாவலிலும் சித்தரித்துள்ளார். சாமர்செட் மாமும் இந்த நாவலில் ஒரு பாத்திரமாக வருகிறார். இந்த நாவலின் முக்கிய பாத்திரமான லாரியுடன் பேசுகிறார்.
ஆண்டன் செகாவ் எழுத்துகள் எனக்கு மனிதர்களின் மனங்களை, மனிதர்கள் எப்படி ஒரு கன நேரத்தில் பிறழ்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள மிகவும் உதவியாக இருந்தது.
அமெரிக்க எழுத்தாளர்களில் ஜேம்ஸ் பால்வின், ஏர்னெஸ்ட் ஹெமிங்வே எனக்கு மிகவும் பிடித்தவர்கள். நான் அமெரிக்காவில் படித்தபோது, ஹெமிங்வே வழக்கமாக ஐஸ்க்ரீம் சாப்பிட செல்லும் இடத்தை தேடிப் போய் பார்த்தேன்.
முழுமையான பேட்டியை பார்க்கவும் படிக்கவும்
https://wowtam.com/ta_in/3-book-talk-malan/10597/
