மூன்று கவிதைகள்/லக்ஷ்மி மணிவண்ணன்

1

குரு துறந்து
தந்தையை பார்த்தால்
அவர்
வெறும்
அதிகாரி
ஆவார்

புனிதமின்றி புணர்வீராயின்
புணர்ச்சி முடிவு
பீக்குழியாகும்

ஒன்பது துளையிலும்
பீளை

அன்பை அகற்றி
உலகை கண்டால்
காண்பதெல்லாம் போர்களமாகும்
முகமெங்கும்
ஆயுத பிரயோகம்
காணக் கிடைக்கும்

உள்ளும் புறமும்
ஒரே
தளம்

எதை எடுத்துக் கொள்கிறாயோ
அப்படி அப்படி

எந்த அகப்பையில்
வாரியெடுத்தாலும் என்ன ?
வருவதெல்லாம்
உனது
மாமிசம்

ஈர்ப்பு அகன்று போகுமிடத்தே
தாயொரு
முதுமை
நோயாளி

எனக்கு அன்னை பகவதி பிரஜாபதி
பூப்பு ரசம்

உனக்கு சுதைச் சிற்பம்

2

ஆளில்லாத கடையில்
ஆளில்லை
பையன் வந்து அமர்ந்திருக்கிறான்
அப்போதும்
ஆளில்லை என்றே
சொல்கிறது கடை
பொருட்களை வாங்க வருவோர்
ஆளில்லையா
எனக் கேட்கிறார்கள்
ஆளில்லை
என்கிறது கடை

பையன் அமர்ந்திருக்கிறான்
இல்லாத ஆளின் இருப்பை
ஓங்கி
கத்திக் கொண்டிருக்கிறது கடை
இல்லாத ஆள் ஏன் இருந்தான்
என்பதனையும்
சேர்த்து

3

பறவையை ஏன் வணங்குகிறீர்கள்
எனக் கேட்டார் ஒருவர்
பறவை எனக்கு பகவான்

சரி
தீயை ?
சூக்கும சரீரம்

நீர் ?
மாமிசமானது
பஞ்சபூதங்கள்

விலங்குகளை பூஜிக்கிறீர்கள் ?
அவை ஊர்ந்து நகரும்
எண்ணங்கள்

கல்லை ஏன் வணங்குகிறீர்கள் ?
பகவான்
பிறப்பற்று போய்
முடியும்
இடம்

எல்லாம் இருக்கட்டும்
அப்படியானால் என்னை எதற்காக
வணங்குகிறீர்கள் ?
நீங்கள் தானே அன்பே
பகவானின்
பரிசோதனைக்
கூடம் ?

2 Comments on “மூன்று கவிதைகள்/லக்ஷ்மி மணிவண்ணன்”

Comments are closed.