தலசீமியா என்னும் நோயால் பாதிக்கப்பட்டவர்/பாண்டியன் சுந்தரம்

மும்தாஜ் சூரியா உடலில் ரத்தச் சிவப்பணுக்கள் உற்பத்திக் குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்படும் தலசீமியா என்னும் நோயால் பாதிக்கப்பட்டவர். மருத்துவர்கள் இவருக்கு 15 வயது வரைதான் கெடு விதித்திருந்தார்கள்.

ஆனால் இன்று 33 வயதை நிறைவு செய்திருக்கும் இவர் திருமணம் செய்துகொண்டு ஒரு ஆண் குழந்தையை ஈன்றெடுத்து ‘இந்தியாவின் முதல் தலசீமியா தாய்’ ஆகியிருக்கிறார்!

சொந்த ஊர் திருப்பத்தூர்.தாய் தந்தையர் வழக்கறிஞர்கள். பள்ளியில் படிக்கும்போது உடல் நலக் குறைவு அடிக்கடி ஏற்பட்டுவிடும் இவருக்கு. . மெதுவாகத்தான் எழுவார்; நடப்பார்; எழுதுவார்!

இதர பிள்ளைகளைப்போல இயல்பாக இல்லாததை உணர்ந்த ஆசிரியர்கள், பெற்றோரை அழைத்து செய்தியைக் கூறினார்கள். உடனடியாக பெற்றோர் சென்னையிலுள்ள குழந்தைகள்நல மருத்துவமனைக்கு நான்கரை வயது
மும்தாஜ் சூர்யாவை அழைத்து வந்தனர்.

பல பரிசோதனைகள் எடுக்கப்பட்டன. குழந்தைக்கு தலசீமியா பாதிப்பு எனக் கூறினார் மருத்துவர். ‘வாழ்நாள் பூரா மாதம் ஒரு தடவை ரத்தம் ஏற்ற வேண்டும்.15 வயது வரை மட்டுமே குழந்தை உயிர்வாழும்’என்ற குண்டைத் தூக்கிப் போட்டார் மருத்துவர்.

“மாதம் ஒரு தடவை ரத்தம் ஏற்றுவதால், உடலில் இரும்புச்சத்தின் அளவு அதிகம் ஆகும். அது உடலின் உறுப்புகளில் படிந்து, அந்த உறுப்பையே செயலிழக்கச் செய்து விடும். இரும்புச்சத்து அதிகம் இருப்பதும் ஆபத்தே. அதைக் குறைக்க ஊசியால் ஒரு மருந்து செலுத்தப்படும். அதைச் சொட்டுச் சொட்டாக ஒரு நாளைக்கு ஏற்றி முடிக்க குறைந்தது 10 மணி நேரம் ஆகும்” என்றார் மருத்துவர்.

மிக வலியை ஏற்படுத்துவதோடு பக்க விளைவுகள் மிகுந்த மருந்து என்பதால் இந்தச் சிகிட்சையில் விருப்பமில்லை
பெற்றோருக்கு. மேலும் அதிக வருமானம் இல்லாத வழக்கறிஞர்களாக இருந்த காரணத்தால் அந்த மருந்துக்கு மாதம் ரூ.10,000 செலவு செய்ய முடியாத சூழல். இடையில், கர்நாடக மாநிலம் மங்களூர் ஓமியோபதி மருத்துவரிடம் மும்தாஜைக் காண்பித்தார்கள்

அலோபதி மருத்துவம் தான் கைகொடுக்கிற சூழ்நிலை கடைசியிலே ஏற்பட்டது. அக்கம்பக்கம் நண்பர்களிடம் கடன் வாங்கி மாதம் ஒரு முறை ரத்தம் ஏற்றினர். மருந்து ஒவ்வாமை மஞ்சள்காமாலை, மலேரியா என்று ஏதோவொரு சிக்கலைத் தந்துகொண்டே இருந்தது. ரத்தம் ஏற்றுகையில் மும்தாஜ் உற்சாகமாக இருப்பார். அதன் பின் 2 வாரங்களில் சோர்ந்து போவார்.

படிப்பில் எப்போதுமே முதல் மாணவி மும்தாஜ். ‘அப்பா அம்மா போல தானும் வழக்கறிஞராக வேண்டும். அதுவரை தனக்கு எதுவும் ஆகக் கூடாது’ என்று மனசில் நினைத்துக் கொள்வார். பள்ளி விளையாட்டு, கலை நிகழ்ச்சி எதிலும் மும்தாஜ் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார். அதனால் கூடுதல் நேரம் கிடைக்க, அந்த நேரத்தில் நூலகங்களில் புத்தகங்களை எடுத்துவந்து வாசிக்கத் தொடங்கினார். வாசிப்பு அவரை ஒரு பேச்சாளராக, சிந்தனையாளராக, துணிச்சல்காரியாக மாற்றியது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 423 மதிப்பெண்கள். ப்ளஸ் டூ படிக்கும்போது கடுமையான மண்ணீரல் வீக்க வலியோடு பரிட்சை எழுதி, 1029 மதிப்பெண்கள் பெற்றார். அடுத்து சட்டக் கல்லூரி நுழைவுத்தேர்வு எழுதினார். மாநிலத்தில் 7-ஆவது இடம்! சேலம் சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். ஆனாலும் உடல் உபாதைகள் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.

‘18 வயது பூர்த்தியானதால் இனி 2 யூனிட் ரத்தம் ஏற்ற வேண்டும். மண்ணீரலும், இதயமும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் இயங்கினால், இனி வாழ்நாள் பற்றிக் கவலைப்பட வேண்டாம்’ என்றார் மருத்துவர்.

உடலில் வலிகள் ஒரு பக்கம் இருந்தாலும் கல்லூரிக் காலம் இனிமை மிக்கதாகவே இருந்தது. கல்லூரித் தேர்வுகளில் மும்தாஜே எப்போதும் முதலிடம்.

எல்லோரையும் போல தானும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார் மும்தாஜ். உடல் இருக்கும் நிலையில் தனக்குத் திருமணம் ஆகுமா என்ற அச்சமும் இருந்தது.

ஒருவழியாக சட்டக் கல்வியை முடித்த மும்தாஜ் தன்னை வழக்கறிஞராக பார் கவுன்சிலில் பதிவுசெய்தார். ஒரு வழக்கறிஞராக முதன்முதலில் நீதிமன்றத்தில் கால் எடுத்து வைத்தார்.

2009-ஆம் ஆண்டு. டெல்லியில் சர்வதேச `தலசீமியா’ மாநாடு நடந்தது. அதில் பெற்றோருடன் சென்று கலந்து கொண்டார் மும்தாஜ். அப்போது அனைவரும் ஆக்ரா சென்றனர். தாஜ்மகால் முன்பு நின்று படம் எடுத்துக்கொள்ளும்போது தனக்கும் ஒரு ஷாஜஹான் கிடைக்க வேண்டும்; அடுத்த முறை கணவருடன் தாஜ்மஹாலைப் பார்க்க வர வேண்டும் என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டார் மும்தாஜ்.

ஒருநாள் எப்போதும்போல் ரத்தம் ஏற்றிக்கொள்ள மருத்துவமனைக்குச் சென்றார் மும்தாஜ். ரத்தம் ஏறத் துவங்கியதும் கை வலித்தது.2-ஆவது யூனிட் ஏற்றுவதற்கு முன்பாக சிறுநீர் கழிக்கச் சென்றபோது சிறுநீர் முழுவதும் ரத்தமாக வந்தது. பெங்களூரிலிருந்து வாங்கி வரப்பட்ட ரத்தம் அது. கெட்டுப் போயிருந்தது.

‘சிறுநீரகம் செயலிழக்கும் அபாயம் உள்ளது. உடனே சென்னைக்குக் கொண்டு செல்லுங்கள்’ என்று மருத்துவர்கள் கூறினார்கள். எல்லோரும் அதுதான் மும்தாஜின் கடைசிப் பயணம் என எண்ணினார்கள். ஆனால் மும்தாஜுக்கு மட்டும், ‘தான் நலமாகி மீள்வேன்’ என்ற நம்பிக்கை இருந்தது.

மும்தாஜின் சித்தப்பா ஒரு ஓமியோபதி மருத்துவர். அவரும் இவர்களோடு சென்னைக்கு வந்திருந்தார். அவர், சில ஓமியோபதி மருந்துகளைத் தந்தார். காலை 4 மணிக்கு அவசர சிகிட்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார் மும்தாஜ். அன்று ஞாயிற்றுக்கிழமை.காலை 9 மணிவரை எந்த மருத்துவரும் மருத்துவமனைக்கு வரவில்லை.

ஆனால், சித்தப்பா கொடுத்த மருந்து வேலை செய்தது. சிறுநீரில் ரத்தம் வருவது படிப்படியாகக் குறைந்து, நின்றது. கடைசிவரை மருத்துவர்கள் வரவேயில்லை. இருந்து பார்த்துவிட்டு அனைவரும் கிளம்பி பெங்களூரு வந்து விட்டார்கள். அங்கே ஒரு மருத்துவமனை ரத்தம் மும்தாஜுக்கு ஏற்றப்பட்டது. .

அதன் பிறகு மாதமொரு தடவை பெங்களூரு சென்று ரத்தம் ஏற்றி வந்தார் மும்தாஜ். இதர நாட்களில் நீதிமன்றப் பணிகளை கவனித்து வந்தார். அப்பாவின் உரிமையியல் வழக்குகள் சிலவற்றில் வாதாடி ஜெயித்தார்.

முதுநிலை சட்டவியல் படித்து பட்டம் பெற்றார். சென்னை உயர் நீதிமன்றத்தில் பணி செய்ய விருப்பம்
ஏற்பட்டது. ஒரு மூத்த வழக்கறிஞரிடம் இளம் வழக்கறிஞராகச் சேர்ந்தார் மும்தாஜ்.

மும்தாஜ் தூரத்து உறவு பொய்யாமொழி, திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தார். மும்தாஜ் உடல்நிலை மற்றும் வாழ்க்கை முழுக்க ரத்தம் ஏற்ற வேண்டிய நிலை பற்றி தெரிந்த பிறகும் தன் முடிவில் உறுதியாக இருந்து, திருமணம் செய்து கொண்டார்.

அந்த ஆண்டு டெல்லியில் நடந்த சர்வதேச தலசீமியா மாநாட்டுக்கு கணவன் மனைவி இருவருமாக இந்த முறை சென்றார்கள்.மாநாடு முடிந்து இருவரும் ஆக்ரா சென்று தாஜ்மகாலைக்
கண்டுகளித்தனர். ஷாஜஹான் கிடைத்த சந்தோசத்தில் அந்த இடத்தில் மும்தாஜ் கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தது.

திருமணத்துக்குப்பின் மண்ணீரல் வீக்கம் அதிகமானால் உயிருக்கு ஆபத்து என்பதால், மண்ணீரல் நீக்க அறுவை சிகிச்சை செய்துகொண்டார் மும்தாஜ். உயர் நீதிமன்றம், சென்னையிலுள்ள பிற நீதிமன்றங்களுக்கும் வழக்காடச் சென்று வந்தார்.

முதல் முறை நீதிபதி தேர்வு எழுதி வெற்றி கைநழுவ, இரண்டாவது முறையாக நீதிபதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றார் மும்தாஜ். பொதுப் பிரிவு என்பதால், வாய்ப்பு தவறியது.

அடுத்து குழந்தை பிறப்பின் மேல் ஆசை வந்தது மும்தாஜுக்கு. தனக்கென ஒரு குழந்தை பிறந்து அது தன்னை ‘அம்மா’ என்று அழைக்காதா? என்ற ஏக்கம் நாளாவட்டத்தில் ஏற்பட்டது.

மருத்துவர்களிடம் ஆலோசித்தனர் கணவன் மனைவி இருவரும். உடல் எடை 33 கிலோ மட்டுமே இருந்ததால், ‘கருவுறுவது மிக ஆபத்தானது’ என்று சொல்லி விட்டார்கள்.

வெளிநாடுகளில் வாழும் சில தலசீமியா பெண்களுக்குக் குழந்தை இருக்கிறது என்பதை அறிந்துகொண்டார் மும்தாஜ். அவர்களிடம் இணையம்வழியாகக் குழந்தைப்பேறு குறித்து அறிந்து கொண்டார்.

2015-ஆம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்றது தலசீமியா மருத்துவ மாநாடு. இதில் கலந்துகொள்ளச் சென்றார் மும்தாஜ். மாநாட்டில் இங்கிலாந்து, அமெரிக்காவிலிருந்து எல்லாம் மருத்துவர்கள் வந்திருந்தார்கள். அவர்களிடம் தலசீமியா பெண்களின் மகப்பேறு குறித்து நிறைய சந்தேகங்கள் கேட்டார். பல்வேறு நாடுகளிலிருந்தும் பங்கேற்ற 500-க்கும் மேற்பட்ட தலசீமியா பாதித்த பெண்களில் ஒரே ஒரு பெண் மட்டுமே தாயாகியிருந்தார் என்பது மும்தாஜுக்குத் தெரியவந்தது. அந்த ஒற்றைப் பெண் இவருக்கு நம்பிக்கை ஒளிக்கீற்றை வழங்கினார்.

அதே ஆண்டு நவம்பர் மாதம் மும்தாஜ் கருவுற்றிருப்பது உறுதியானது. ஒன்பது மாத கர்ப்பகாலமும் மிகுந்த மகிழ்வுடன் நகர்ந்தது. பிரசவத்துக்காக சேர்ந்தார் மருத்துவமனை. பிரசவவலி வேதனை தரவில்லை இவருக்கு. மாற்றாக மகிழ்ச்சியை அள்ளித் தந்தது.

சிறு வயதிலிருந்து மும்தாஜ் பட்ட கடும் வலிகளெல்லாம் மரணத்தை நோக்கியவை. ஆனால், இந்த வலியோ பிறப்பை நோக்கியது.

அறுவை சிகிச்சை செய்து, மும்தாஜ் ஆண் குழந்தைக்குத் தாயானார்.
மும்தாஜின் குழந்தையின் பெயர் அகரன் மும்மொழி.இப்போது நான்கு வயது.

மாதம் ஒரு முறை பெங்களூருக்குச் சென்று ரத்தம் ஏற்ற வேண்டிய நிலை தொடர்ந்தாலும், நாள்தோறும் கணவனை கவனிப்பது, குழந்தையைப் பள்ளிக்கு அனுப்புவது, சமையல் செய்வது, வழக்கறிஞர் பணியைத் தொடர்வது என ஆரோக்கியமான நாம் செய்யும் அனைத்து வேலைகளையும் தடங்கலின்றிச் செய்துவருகிறார் மும்தாஜ்!

எதற்கும் அச்சப் படாதீர்கள்! யாராலும் வாழ்க்கை இவ்வளவு நாள்தான் என்று கணித்துக் கூறிவிடமுடியாது; மகிழ்ச்சி ஒன்றை வாழ்க்கை முழுக்கக் கையேந்துங்கள்; அது உங்களை என்றும் கைவிடாது.. என்பதைச் சொல்லுகிறது மும்தாஜ் சூர்யாவின் வாழ்க்கை!