உடைமை/கோ.முத்துசுவாமி

மூன்று வயது பேரனுடன்
கடற்கரைக்குச் சென்றேன் ;

கரையோரக் கடையில்
சிறு பொம்மைக் கூடை
வாங்கிக் கொண்டான்!

மணலில் அமர்ந்தோம்;

கரையை முட்டி
விளையாடும் அலைகளைப்
பார்த்துக் கொண்டே
மணலை அளைந்து விளையாடினான்;

மணலில் விரவிக் கிடந்த
சிப்பிகளை பொறுக்கி
கூடையில் நிரப்பினான்;

தட்டியும் கொட்டியும்
இட்டும் விட்டும்
கூடைக்குள் சிப்பிகளை
கலகலக்க வைத்தான்;

அந்தி வானச் செம்மையை
முந்திருள் மடிக்குள் மூட,

“திரும்பலாமா? ” கேட்டேன் பேரனிடம்;

எழுந்தவன்
கூடையில் சேர்த்த சிப்பிகளை
மணலில் கொட்டினான்!

“வீட்டிற்கு கொண்டு போய்
விளையாடலாம் தானே! ” என்றேன்;

“தாத்தா!
சிப்பிகள் என்னோடதல்ல;
இந்த மணலோடது
என்று புன்னகைத்தான்!

மணலில் மிருதுவாய்
கால் பதித்து
என் விரல் பிடித்து நகர்ந்தான்!

One Comment on “உடைமை/கோ.முத்துசுவாமி”

Comments are closed.