தாய் – சுஜாதா

அறிவு ஜீவி சுஜாதா வாசகர் குழு மூலம் முகநூலில் பதிவிட்டவர் ராம் ஸ்ரீதர்


சுதாகர் கடிதம் எழுதியிருந்தான்.
அன்புள்ள திவா, இந்தக கடிதம் கண்டதும் உடனே நீ புறப்பட்டு வந்து அரம்மாவை அழைத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். எனக்கு ‘டெபுட்டேஷனில்’ செல்லும் சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது. பாலா கூட வரப்போவதால் அம்மாவைப் பார்த்துக்கொள்ள இங்கே ஆளில்லை. அதனால் இந்தக் கடிதம் கண்டவுடன் கூடிய சீக்கிரம் தவறாமல் புறப்பட்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் திரும்பி வந்ததும் அம்மாவை அழைத்துக்கொண்டு விடுவேன்.
அங்கு சித்ரா, குழந்தைகள் சௌக்கியம் என நம்புகிறேன்.
அன்புடன்
திவாகர் தன் மனைவியிடம் கடிதத்தைக் காட்டுவதற்குத் தக்க சந்தர்ப்பத்தை யோசித்தான். காலை சித்ரா ரொம்ப பிஸியாக இருப்பாள் குழந்தைகளைப் பள்ளிக்குத் தயார் பண்ண வேண்டும். இவனுக்கு எட்டரைக்குச் சாப்பிட்டுவிட்டுப் போக வேண்டும். அதற்குச் சமையல் மற்றும் ப்ளாஸ்கில் காப்பி; பிள்ளைகளுக்கு வெண்ணெய் தடவிய ரொட்டி; பாட்டிலில் தண்ணீர் அனைத்தும் காலை வேண்டாம். மத்தியானம் ஆபீசிலிருந்து மாடிவீட்டுக்கு போன் பண்ணிக் கூப்பிடலாம். ஆனால் மற்றவர் போனில் இந்த சமாச்சாரத்தை விவரமாகப் பேச முடியாது. மாலை குழந்தைகள் திரும்பி வந்து டிபன் கேட்டு அட்டகாசம். இரவு படுத்த நிமிஷமே அசதியில் தூங்கிப் போய்விடுவாள் எப்போதுதான் சொல்வது?
வெள்ளிக்கிழமை கோயிலுக்குப் போவார்கள் அப்போது சொல்லத் தீர்மானித்தான். அர்ச்சனை பண்ணிவிட்டுக் கற்பூர வெளிச்சத்தில் அம்மனிடம், “தாயே! இப்படியே வெச்சிரும்மா. போதும்” என்று மாங்கல்யத்தில் சித்ரா மஞ்சள் தொட்டுக் கொண்டபோது சொன்னான்;
“அண்ணா லெட்டர் எழுதியிருக்கான்”
“என்னவாம்? உங்கம்மா வை இங்கே ” ‘டம்ப்’ பண்ணப்போறார்…. அதுதானே “
அந்த வார்த்தை அவனுக்குக் கோபம் உண்டாக்கினாலும் சண்டை போட இது தருணமல்ல. இவள் ஒத்துழைப்பு வேண்டும்.
“அவன் ஃபாரின் போகப் போறானாம். டெபுட்டேஷன் முடிந்த கையோடு திருப்பி அழைச்சுகிறேன்னு”
துவஜஸ்தம்பத்தின் அருகில் நின்று திரும்பி அவனைப் பார்த்து, “ஒவ்வொரு வருஷமும் இதையேதான் சொல்லிண்டிருக்கார் உங்க தமையனார்.ஏதாவது ஒரு சாக்கு. அவர்தான் டெபுட்டேஷன்ல போறார். அவர் அவ டில்லிலதானே இருக்கப் போறா?”
‘அவளும் போறாளாம் கூட… “
“அதனால?”
“அம்மா வேற எங்கே போவா சித்ரா?”
“உங்க அம்மாவையும் ‘டெபுட்டேஷன்’ல கூட்டிண்டு போகச் சொல் லுங்கோ?”
“அது என்ன நடக்கிற காரியமா? ” என்றான் கோபத்தை விழுங்கிக் கொண்டு.
“எது எப்படியோ. உங்கம்மாவை அத்தனை சீக்கிரம் கூப்பிட்டு வெச்சுக்க நான் தயாராக இல்லை. வீட்டில் வேலை எனக்கு இடுப்பு ஒடியறது. அவர் வேறு வந்து ஒருநாள் கோதுமை சாதம், ஒரு நாள் பயத்தம் கஞ்சின்னு என்னால மன்னாட முடியாது. போய்ப் பதினஞ்சு நாள்கூட ஆகலை, உடனே என்ன அநியாயம்?”
“ஒண்ணரை மாசம் ஆச்சு சித்ரா”
“சரி! வருஷத்திலே ஒண்ணரை மாசம்தான் அந்த பாலாமணி வெச்சுப்பாளாமா? அப்புறம் அவா ஃபாரின் போய்டுவா நான் பதினொரு மாசம் லோல்படணும்
“இப்படியெல்லாம் ஒரு கணக்கா சித்ரா?”
‘பாருங்கோ! எனக்கு உங்கம்மாவை வெச்சுக்கறதுக்கு ஆட்சேபணை இல்லை. வருஷத்தில் ஆறு மாசம்னா சரி. வருஷம் முழுக்க இல்லை! இந்த ட்ரிக் அவா வருஷா வருஷம் பண்றா நீங்களும் அசமஞ்சம் மாதிரி ஒப்புத்துக்கறீங்க!”
இவன் மௌனமானான். யோசித்துப் பார்த்தால் பெரும்பாலும் அம்மா இவனிடம் இருந்திருக்கிறாள். இந்த டெபுட்டேஷன் அஸ்திரத்தை மூன்றாவது முறை பிரயோகிக்கிறான் சுதாகர்
சித்ரா சொல்வதில் உள்ள பாழாய்ப்போன நியாயம் தெரிகிறது ஆனால், அதற்கெல்லாம் இந்த உறவுப் பிணைப்புக்கு கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டுமா? அம்மா எத்தனை முறை சொல்லியிருக்கிறான்
“என்னை இப்படி அல்லாட வெக்காதீங்கடா! யாராவது ஒருத்தன். பர்மனண்டா இருந்துர்றேன். இன்னும் கொஞ்ச நாள்தான்ப்பா……”
“பாருங்கோ, இந்தத் தடவை கட் அண்ட் ரைட்டர் சொல்லிடுங்கோ.. இப்ப இல்லை! அவ்வளவுதான்! குடுகுடுன்னு போய் அழைச்சுண்டு வந்திடாதிங்க இருபத்துநாலு மணி நேரமும் சிஸ்ருஷை பண்ணத் திராணி இல்லை எனக்கு’
“என்ன சித்ரா நீ….அவா என்ன கேக்கறா”
“உங்களுக்குத் தெரியாது நீங்கபாட்டுக்கு ஆபிஸ் போய்டுவிங்க…..உங்கம்மா வரிக்கு வரி சொல்லிக் காட்டுவா. பாலாமணின்ன ஒஸ்தி. நைஸா வாழைப்பழத்தில் ஊசி ஏத்தறா மாதிரி என் குழந்தைகளைக் கிண்டல் பண்ணுவா! அன்னிக்கு விசிறிக்கட்டையை உங்கட்ட எடுத்துக் கொடுத்தா என்னை அடிக்கிறதுக்கு”
“பொய்”
“உங்களுக்கு பழசெல்லாம் ஞாபகமே இருக்காது. எதுக்கு தர்க்கம் பண்ணணும்? சொல்லிட்டேன்! ஜூன் மாசம் போனா இனிமே ஜனவரி மாசம் கூட்டிண்டு வாங்கோ வெச்சுக்கலாம்
இப்படிச் சொல்விட்டா எப்படி?” “இப்படித்தான்” அதற்கப்புறம் அவர்கள மௌனமாக வீட்டுக்கு நடந்தார்கள். மறுநாள் ஆபீசில் சுதாகரிடமிருந்து போன் வந்தது ‘லெட்டர் கிடைச்சுதா?” “என்ன லெட்டர்?” “அம்மாவை அழைச்சுண்டு போக” “அதுவா? அது இப்ப சௌகரியமில்லை, சுதா”, “என்ன சௌகரியமில்லை! நான் டெபுட்டேஷன்ல போகணும்பா ” ‘ஒவ்வொரு தடவையும் நீ இதையேதான் சொல்லிண்டிருக்கே” “திவா’ நாம் நம்ம பொண்டாட்டி பேச்சைக் கேக்க வேண்டாம் நமக்குள்ள இதை சார்ட் அவுட் பண்ணலாம் என்ன?” அவன் கோபம் ட்ரங்க்காலிலும் தெளிவாக ஒலித்தது. “இந்தத் தடவை நிச்சயமா டெபுட்டேஷன் லெட்டரே வந்திருக்கு அனுப்பட்டுமா?” “அதெல்லாம் வேண்டாம்” “எப்ப வர்றே” “பார்க்கலாம்” “நான் கொண்டு வந்துவிடணுமா சொல்லு?” “இல்லை.” “நீ என்ன பண்றே… உடனே சென்ட்ரல் போய்……
“பார்க்கலாம்” என்று போனை வைத்துவிட்டான்.
சற்று நேரத்தில் அது மறுபடி ஒலித்தது. “சார், உங்க பிரதர்.”
“என்ன, பதில் சொல்லாம வெச்சுட்ட? கட்டாய்டுத்தா?” அப்ப என்னிக்கு வர்றே. நான் வேணா டிக்கெட் வாங்கி அனுப்பவா. இங்கிருந்து ரிசர்வ் பண்ணலாம்”.
“வேண்டாம்.”
“அப்ப டிக்கெட் வாங்கினப்புறம் போன் பண்றயா. ஸ்டேஷனுக்கு வர்றேன்.”
சாயங்காலம் வீட்டுக்குப் போனபோது, “என்ன சொன்னார். உங்க பிரதர்?” என்றாள் சித்ரா.
“ஏன்?”
“அந்த ராணி -மேனாமினுக்கி – எனக்கு போன் பண்ணியிருந்தா மாடி வீட்டில்…. சித்ரா டார்லிங் ஒரு ரெண்டு மாசத்துக்குப் பார்த்துண்டா போதும் நான் திரும்பி வந்துடுவேன் வந்த உடனே அம்மாவை அனுப்பிச்சுடலாம்.. என்ன பொய்யி! போன தடவையும் இதேதான் சொன்னா. இதோ வந்துடுத்து ஆர்டர்.. இதோ இந்த நிமிஷம் கிளம்பறோம்னு. எல்லாம் பொய்யி! அண்ணா என்ன சொன்னார்?”
“இதேதான். நான் ஒண்ணும் பிடிகொடுத்துப் பேசலை.”
“பிடி என்ன பிடி? மாட்டேன் முடியாதுன்னு நேராச் சொல்றது!”
“எங்கே போவா சித்ரா? அர்த்தமில்லாம பேசறியே.. எங்க ரெண்டு பேரை விட்டா அவளுக்கு வேற யார் இருக்கா, சித்ரா! வயசான காலத்தில் அவளை இப்படி அல்லாட வைக்கறது ரொம்பத் தப்பு இல்லையா? என்ன இன்னும் கொஞ்ச நாள் இருக்கப் போறா…”
“நீங்க சொல்றது அத்தனையும் உங்க அண்ணாவையும் மன்னியை யும் கேக்க வேண்டியது! என்ன அப்படி டெபுட்டேஷன்? என்ன அவசரம். ஒரு நாலு மாசம் கழிச்சுப் போகட்டுமே இவ? இந்த டெபுட்டேஷன்கிறதே ஒரு ட்ரிக்கு! மறுபடி அம்மாவை நம்மகிட்ட அனுப்ப ஒரு ஏற்பாடு ! இந்தத் தடவை நீங்க மசியக்கூடாது! நான் மாட்டேம்பா”
“வேணும்னா ஓர் ஆள் போட்டுக்கலாம்.*
‘ஆளா! பணம் கொட்டிக் கிடக்கா இங்கே?”
அண்ணாவை அனுப்பச் சொல்றேன்.”
“உங்கண்ணாவா ? ஹ! ஆளும் வேண்டாம். தேளும் வேண்டாம். உங்க அம்மாவும் வேண்டாம்! இந்த ஏமாத்து வேலையை, தலையில் மிளகாய் அரைக்கிறதை அவா நிறுத்தியே ஆகணும்”.
திவாகருக்குச் என்ன செய்வது என்று தெரியவில்லை. அண்ணா கொஞ்ச நாள் பார்த்துவிட்டுச் சட்டென்று கொண்டுவிட்டு விடுவான் எப்படியாவது சித்ராவைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசிப் பேசிச் சம்மதிக்க வைக்க வேண்டும்.
அதற்கு வெங்கடேச மாமாதான் சரி என்று கோட்டைக்கு போன் செய்தான். “மாமா, வீட்டில் ஒரு சின்ன க்ரைசிஸ், சாயங்காலம் வர்றீங்களா?”
வெங்கடேசன் அம்மாவுக்குச் சற்றுத் தூரத்து உறவு. “தாராளமா! என்ன விஷயம் சொல்லு..”
“விவரமா வீட்டில் சொல்றேன். நான் கூப்பிட்டதாச் சொல்லாதீங்கோ சும்மா காஷுவலா வர்றாப்பல வாங்கோ.. என்ன?”
“சரிப்பா”
சாயங்காலம் க்வார்ட்டர்லி ரிப்போர்ட் முடிக்க வேண்டியிருந்தது. வீட்டுக்குப் போக ஏழரை ஆகிவிட்டது. போனதும்தான் வெங்கடேச மாமாவை அழைத்திருக்கிறோம் என்பது நினைவுக்கு வந்தது.
அவர் கூடத்தில் சோபாவில் உட்கார்ந்து, இருக்கிற பத்திரிகைகளையெல்லாம் படித்து முடித்திருந்தார். மேசையில் காலிக்கோப்பையும் தட்டும் வைத்திருந்தது. சித்ராவையோ குழந்தைகளையோ காணோம்.
“எங்கே அவாள்லாம்?”
“கோயிலுக்குப் போறேன்னு போயிருக்கா “
“உங்களைத் தனியா விட்டுட்டா?”
அதனால என்ன.. நீ ட்ரஸ் மாத்திண்டு வா!” திவாகருக்குக் கடும் கோபம் வந்தது. ‘இந்த மாதிரித்தான் பலவிதங்களில் தன் கோபத்தைக் காட்டுவாள். என் வீட்டு மனுஷர்கள் என்றாலே அலட்சியம்தான்’ “சமையலறையில் பிளாஸ்கில் காப்பி வெச்சிருக்காளாம்” என்றார் மாமா சகஜமாக. கைகால் முகம் கழுவி உடை மாற்றிக்கொண்டு. அவர் எதிரே வந்து உட்கார்ந்தான் “சித்ரா ஏதாவது சொன்னாளா அதைப்பத்தி’ “சொன்னாளே! சுதாகர் கடுதாசி எழுதி போன் மேல போன் போடறானாம். உங்கம்மாவை அழைச்சுண்டு போறதுக்கு…” “இவளுக்கு இஷ்டமில்லை மாமா? எப்படி களவின்ஸ் பண்றதுன்னே தெரியலை . பண்றதும் சரியில்லைதான். அம்மா எங்கே போவா? சொல்லுங்க ! அவன் பண்றதும் சரியில்லைதான். ஒரு மாசம் ஒண்ணரை மாசம் வெச்சுண்டு எங்ககிட்ட ஏதாவது சாக்கு சொல்லி அனுப்பிச்சுடறான். இவள் குழந்தைகளை என்னை, அம்மாவை எல்லோரையும் சமாளிக்க திணர்றா!” “தினா, உன் ப்ராப்ளம் இன்னிக்கு இந்தத் தேசத்தோட ஒவ்வொரு குடும்பத்திலயும் இருக்கு. இது இந்தச் சமூகத்தினுடைய மாறுதலால் ட்ரான்ஸிஷன் பிராப்ளம் இது. இந்தக் குடும்பம்கிறதுக்கு அர்த்தம் மாறிண்டிருக்கு கூட்டுக் குடும்பம்ங்கிறது அழிஞ்சுண்டு இருக்கு. இதுக்குப் பல்வேறு காரணங்கள். வீடுகள் அளவில் சின்னதாயிண்டிருக்கு. ஜனங்களுக்குப் பொறுமை குறைஞ்சிண்டிருக்கு சுயநலம் அதிகமாகி, பெரியவர்களுக்கு மரியாதை குறைஞ்சிடுத்து எத்தனையோ காரணங்கள்….ஆனா உன் கேஸ்ல, அதிர்ஷ்டவசமாப் பிரச்னைக்கு உள்னையும் உன் அண்ணனையும் மீறின ஒரு தீர்வு கிடைக்கும் போல இருக்கு” “என்ன சொல்றீங்க? புரியலை! “உங்கம்மா தனியா இருக்கத் தீர்மானிக்கலாம்.
“எப்படி? எங்கே?”
“எங்க வேணும்னா? ஒரு சமையற்காரி, ஒரு வேலைக்காரனைப் போட்டுண்டு ஒரு வீட்டை எடுத்துண்டு நிம்மதியா இருக்கலாம்.
“என்ன பேசறீங்க? அதுக்குப் பணம் எவ்வளவு ஆகும் தெரியுமா. மாசம்?
“ரெண்டாயிரமா? மூவாயிரமா? ஐயாயிரமா
“அம்மாவுக்கு ஃபேமிலி பென்ஷன் எவ்வளவு வருது தெரியுமா?
‘அதை நான் சொல்லலை. உங்கம்மாவுக்குத் தாத்தா வழியா ஒரு சொத்து ரொம்ப நாள் லிட்டிகேஷன்ஸ் இருந்தது. என் கஸின் லேட் துரைசாமி. உங்கம்மாவுடைய பிரதர். அவனுடைய சன்ஸ் ரெண்டு பேர். அவர்களையெல்லாம் உனக்குப் பழக்கமில்லை. அவங்க சித்தப்பா ஸ்ரீனிவாசன் மேல கேஸ் போட்டு, சுப்ரீம் கோர்ட்டு வரை போச்சு. அது இப்பத்தான் தீர்ப்பாயிருக்கு. பிதுரார்ஜித சொத்தாயிருக்கிறதாலயும் தாத்தா 1950-ல்தான் இறந்ததாலயும் பென் வாரிசான உங்கம்மாவுக்குப் பங்கு உண்டுன்னு நீர்ப்பாகி யிருக்கு. அதுக்கு டிக்ரி வாங்கிண்டா உங்கம்மாவுக்குப் பணம் குறைந்தபட்சம் எட்டு லட்சமாவது வரும் அக்கடான்று திருச்சிராப் பள்ளியில் ஒரு வீட்டை எடுத்துண்டு வேலைக்காரன் சமையல்காரனை வெச்சுண்டு இரண்டு பிள்ளைகளுக்குத் தொந்தரவில்லாம இருக்கலாம். உங்க பிரச்னை தீர்ந்துபோச்சு திவா, உங்கண்ணன் டெபுட்டேஷன்ல போகலாம். நீயும் நிம்மதியா இருக்கலாம்.”
“இது சுதாகருக்கு தெரியுமா, மாமா?”
“நான் இன்னும் எழுதலை. நேத்திக்குத்தானே தீர்ப்பு ஆகியிருக்கும். ஒருவேளை நரசு சொல்லியிருக்கலாம். அவன் டில்லியிலேதானே இருக்கான்?”
“பக்காவா இது?”
“ஆமாப்பா……. எப்ப வந்தே?” என்றார் உள்னே வந்த சித்ராவைப் பார்த்து.
“அப்பாவே வந்துட்டேன். பேசிண்டு இருக்கேளேன்னு டிஸ்டர்ப பண்ணலை”
“மாமா, நான் இதைப்பத்தி விவரமா சுதாகருக்கு லெட்டர் எழுதிட றேன். நீங்க சொன்னது நல்ல யோசனை “
“என்ன யோசனை?” என்றாள் சித்ரா.
சொன்னான்.
ராத்திரியே மவுண்ட்ரோடு டெலிகிராஃப் ஆபிசுக்குப் போய அண்ணனுக்குத் தந்தி கொடுத்தான்.

“STARTING BY TOMORROW’S GRAND TRUNK TO TAKE MOTHER”

  • DIVAKAR

வீட்டுக்குத் திரும்பி வந்தபோது அவனுக்குத் தந்தி காத்திருந்தது

CHANGED MY PLANS REGARDING DEPUTATION. MOTHER STAYS WITH US – SUDHAKAR.