அன்னையின் தரிசனம்/கர்மயோகி 

முதல் பாகம் முதற் பகுதி

ஸ்ரீ அரவிந்தர்

அன்னை ஆசிரமம்

1. ஸ்ரீ அரவிந்தர்

1872, ஆகஸ்ட், 15-ஆம் தேதி அவதரித்தவர் ஸ்ரீ அரவிந்தர். அவர் தந்தை கிருஷ்ண தன்கோஷ் இந்தியக் கலாச்சாரத்தை அடியோடு வெறுத்தவர். அப்பொழுது ஆட்சி புரிந்த ஆங்கிலேயருடைய பழக்க வழக்கங்களைப் பெரிதும் விரும்பினார். தம் குழந்தைகள் இந்தியப் பழக்க வழக்கங்களைத் தெரிந்து கொள்ளக்கூடாது என்றும், அதனால் அவர்களை இந்தியாவில் வளர்க்கக்கூடாது என்றும் நினைத்த கோஷ், ஸ்ரீ அரவிந்தரையும், அவருடைய சகோதரர்களையும் இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார். அப்பொழுது ஸ்ரீ அரவிந்தருக்கு ஏழு வயது. அந்தச் சிறு வயதிலேயே ஸ்ரீ அரவிந்தர் ஆங்கில, கிரேக்க மொழிகளில் நல்ல தேர்ச்சி பெற்று விளங்கினார். ஸ்ரீ அரவிந்தர். தம் இருபத்தி ஒன்றாவது வயதில் இந்தியாவுக்குத் திரும்பினார்.

இந்திய மண்ணில் கால் வைத்தவுடனேயே ஓர் அரிய அவருக்கு ஏற்பட்டது. எல்லையற்ற ஒரு பரம்பொருள் நீக்கமற நிறைந்திருப்பதைப் போன்ற ஒரு தெளிவான உணர்வு. அது எல்லா உயிர்களிடத்தும், எல்லாப் பொருள்களிடத்தும் ஊடுருவி  இருப்பதையும் உணர்ந்தார். இப் பெளதிக உலகிற்கு அப்பால் உலகின் கண், தாம் புகுந்து செல்வதையும் உணர்ந்தார்.  அவ்வாறு புகுந்து ஊடுருவிச் செல்லும் பொழுது ஏற்படுகின்ற அனுபவங்கள்  எவ்வாறு இந்தப் பெளதிக உலகினைப் பாதிக்கின்றன என்பது கண்டறிந்தார்.

இந்நிலையில் பரோடா சமஸ்தானத்தின் ஆபீசர் பதவி ஸ்ரீ அரவிந்தரைத் தேடி வந்தது. ஆனாலும் பதவிச் சுகத்தில் பற்று வைக்காத அவர் உள்ளம், இந்தியாவைப் பற்றியும், இந்தியக் கலாச்சாரத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள வேட்கை கொண்டது அவை பற்றிய ஏராளமான நூல்களை வரவழைத்து. இரவ பகலாகப் படித்தார். அந்நூல்கள் அவர் விரும்பிய அறிவைக் கொடுத்தன. பழம் பெருமைகள் பல நிறைந்த இந்தியா, வெள்ளையர் ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடந்த காரணத்தால், உலகிற்கே வழி காட்ட வேண்டிய இந்தியக் கலாச்சாரமும் அடிமையுற்றுக் கிடப்பதை எண்ணிக் கவலையுற்றார். இந்தியக் கலாச்சாரம் மீட்கப்பட வேண்டுமானால், முதலில் வெள்ளையர்களிடமிருந்து இந்திய நாடு மீட்கப்பட வேண்டும் என்று தெளிந்தார். அதன் காரணமாக அவர் இந்திய விடுதலை இயக்கத்தில் பெரும்பங்கு வகித்தார். தம் பேச்சாலும், எழுத்தாலும் இந்திய மக்களைச் சுதந்திர வீறு கொண்டு எழச் செய்தார். அதனால் அவர் ஆங்கில அரசாங்கத்தின் வெறுப்பிற்கு ஆளானார். அதன் காரணமாக பொய்யான வழக்கு ஒன்றை அவர் மீது திணித்து, அவரை ஓராண்டுக் காலம் சிறையில் வைத்திருந்தது கும்பினிக் கும்பல். அவ்வழக்கில் போதிய ஆதாரம் இல்லாத தால் அவரை விடுதலை செய்தார் ஒரு வெள்ளை நீதிபதி.  1909 ஆம் ஆண்டு அலிப்பூர் சிறையிலிருந்து விடுதலையான

 ஸ்ரீ அரவிந்தர், 1910. ஏப்ரல் 4ஆம் தேதி பாண்டிச்சேரிக்கு வந்தார். தம் இறுதிக் காலம் வரை அவர் அங்கேயே ஆசிரமம் கொண்டிருந்தார்.

ஓர் அவதார நோக்கம், பிறப்போடேயே பற்றிக் கொண்டு வரும்.

ஸ்ரீ அரவிந்தர் பிறந்தது முதல் என்னதான் மேலை நாட்டுப் பழக்க வழக்கங்களால் அந்நியப்படுத்தப்பட்டிருந்தாலும், சநாதன தர்மத்தின் பாற்பட்ட ஆன்ம அனுபவங்கள் அச்சிறு பிராயத்திலேயே அவருக்கு ஏற்படலாயின. அவர் இங்கிலாந்தில் இருந்தபோது அவருக்கு உபநிடதங்களைப் படித்தறியும் வாய்ப்பு ஏற்பட்டது. அவருக்குக் கிடைத்தது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட ஒரு நூல். ஆன்மாவைப் பற்றிப் பேசுகின்றன உபநிடதங்கள். அவற்றைப் படிக்கின்ற பொழுது ஒரு நூதனமான ஆன்ம அனுபவம் தமக்கு ஏற்படுவதை அவர் அறிந்தார். மேலும் தம்முள் ஒரு தேஜோமயமான வலிமை தோன்றுவதையும் உணர்ந்தார்.

பரோடாவில் பதின்மூன்று ஆண்டுகள் தங்கியிருந்தார் ஸ்ரீ அரவிந்தர். அப்பொழுது அவருக்குப் பல சிறந்த ஆன்ம அனுபவங்கள் ஏற்பட்டன. ஒரு சமயம் ‘கானாலி’ என்ற இடத்துக்குச் சென்றிருந்தார். அது ‘சந்தாத்’ என்னுமிடத்திற்கு அண்மையில் இருக்கிறது. கானாலியில் கோயில்கள் அதிகம். அவற்றுள் ஒன்றான காளியின் கோயிலுக்குப் போயிருந்தார் ஸ்ரீ அரவிந்தர். அந்தக் காளியின் சிலையை நோக்கிய பொழுது அவருக்கு ஒரு புதுமையான அனுபவம் ஏற்பட்டது. அது கற்சிலையாக அவர் கண்களுக்குக் காணப்படவில்லை; உயிர்ப்புடைய தெய்வமாகவே காட்சியளித்தது. இறைவி குடி கொண்டிருப்பதை உணர்ந்தார். ‘இறைவன் உண்மையிலேயே இருக்கிறான்’ என்பதை முதன்முதலாக அவர் உணர்ந்தது இங்குதான்.

ஒரு தடவை ஸ்ரீ அரவிந்தர் ஒரு குதிரை வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது வண்டி ஒரு விபத்துக்குள்ளாக இருந்தது. அந்தக் கணத்தில், ‘இந்த விபத்து எந்த வகையிலும் நேரக்கூடாது’ என்று உறுதியாக நினைத்தார் அவர். அக்கணமே அவருள்ளிருந்து ஒளி நிறைந்த ஓர் உருவம் தோன்றியது. அது குறுக்கிட்டு ஏற்படவிருந்த பயங்கர விபத்தைத் தவிர்த்தது.

மற்றொரு சமயம் காஷ்மீரில் உள்ள சங்கராச்சாரியர் மலைக்குச் சென்றிருந்தார் ஸ்ரீ அரவிந்தர், அங்கு சென்றவுடனேயே விவரிக்க இயலாத ஒரு சூன்ய அனுபவம் அவரை ஆட்கொண்டது. தானாகத் தேடி வந்த அனுபவம் அது. அவரிடத்தில் அது ஆழ்ந்த மனத் தெளிவை ஏற்படுத்தியது.

அவதாரப் புருஷர்கள்  எதையும் தேடிப் போகவேண்டியதில்லை எல்லாமே அவர்களைத் தேடி வந்தடையும். அவ்வாறு  ஸ்ரீ அரவிந்தரைத் தேட வந்தவற்றுள் இன்னும் ஓர் அனுபவம்  விஷ்ணு  பாஸ்கர  லீலி என்னும் மராட்டிய யோகி ஒருவர் அவருக்கு அறிமுகமானார். அப்பொழுது அவர் ஸ்ரீ அரவிந்தருக்க ஒரு யோகப் பயிற்சியைக் கற்றுக் கொடுத்தார். அவர் கொடுத்த பயிற்சியின் விளக்கம் இதுதான் : ‘ கீழே அமர்ந்து உன்னை நன்றாகக் கூர்ந்து  நோக்கு. உன் நெஞ்சிலே அலை மோதும் எண்ணங்கள் யாவும் வெளியிலிருந்து வருகின்றன என்பதை உணர்வாய்.  அவை உன்னை வந்து அடையுமுன் அவற்றைத் தடுத்துத் தூக்கி எறிந்து விடு.

ஸ்ரீ அரவிந்தர் அப்பொழுதே அந்தப் பயிற்சியை ஆரம்பித்தார். அவர் கண்டது அவரே வியக்கும் வகையில் இருந்தது. எண்ணங்கள் யாவும்  வெளியிலிருந்து தன்னுள் புகுவதைக் கண்டார். அது மட்டு மன்று அவற்றைத் தடுத்து நிறுத்தித் தூக்கி எறிந்து விடவும் முடியும் என்பதையும் கண்டார். இடைவிடாது மூன்று நாள்கள் இப்பயிற்சியைச் செய்தார். மூன்றாம் நாள் முடிவில் எண்ணங்கள் அற்றன. ஓர் அழிவற்ற அமைதி ஸ்ரீ அரவிந்தரிடம் குடி  கொண்டது.  இவுலகம் பொருளற்ற உருவங்களின் ஒரு தொகுப்பாகக் காட்சி  அளித்தது. ‘வரையில்லாது வியாபித்துள்ள பிரம்மமே உண்மைப் பொருள்’ என்பது தெளிவாகியது. இது ஒரு சாதாரன அனுபவம் இல்லை. மிகச் சிறப்பாகக் கருதப்படுகின்ற அலுபவங்களில் ஒன்றான அத்வைத் அனுபவம் இது. மூன்றே நாள்களில் எண்ணங்களை அறவே ஒழித்து, பிரம்மச் சொருபத்தில் லயித்து நின்ற ஸ்ரீ அரவிந்தரின் அற்புதச் சாதனையைக் கண்ட அந்த மராட்டிய யோகி, திகைப்பில் ஆழ்ந்து போனார். அதற்குக் காரணம்  பல ஆண்டுகள் உழைத்தாலும் கிடைத்தற்கரிய ஒரு சித்தி, எண்ணங்கள் அற்றிருப்பது.

இதை அடுத்து  ஸ்ரீ  அரவிந்தருக்கு மற்றுமொரு சிறந்த அனுபவம் எற்பட்டது. இது அவரது வாழககையின் திசையையே மாற்றி அமைக்கக் கூடியதாக இருந்தது. இந்த அனுபவம் அவர் அலிப்பூர் சிறையில் இருந்தபொழுது ஏற்பட்டதாகும். அவர் சிறை அறைக்கு வெளியே உலவிக் கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாரா வண்ணம் இறைவனின் வலிமை தம்முள் புகுவதை அவர் உணர்ந்தார். அந்நிலையில் அவர் கண்டவை எல்லாம் கண்ணனாகக் காட்சி அளித்தன. சிறைச்சாலையின் உயர்ந்த மதில்கள், அங்குள்ள மரங்கள், காவல் புரியும் காவலர்கள், சிறையின் கதவுகள் ஆகிய யாவுமே கண்ணனாகத் தோன்றின. அந்தத் திவ்ய தரிசனத்தின் மூலம், ‘கண்ணனே எல்லா உயிர்களிடத்தும், எல்லா நிகழ்ச்சிகளிலும் நீக்கமற நிறைந்துள்ளான்’ என்பதை அவர் தெளிவாக அறிந்து கொண்டார். இதுவே ‘சனாதன தர்மத்தின் உண்மை ‘ என்பதையும் கண்டு கொண்டார். சனாதன தர்மத்தினாலும், சனாதன தர்மத்திற்காகவும் தான் இப்பரத கண்டம் இருக்கிறது என்பதும் அவருக்குத் தெளிவாயிற்று.

அலிப்பூர் சிறையில் இருந்தபொழுது அவருக்கு வேறோர் அனுபவமும் ஏற்பட்டது பற்றிப் பேசு முன், அதோடு தொடர்பு கொண்ட நிகழ்ச்சியைக் குறிப்பிட வேண்டும். அது அவர் பரோடாவில் இருக்கும் பொழுது நிகழ்ந்தது. அப்பொழுது அவர் பிராணாயாமப் பயிற்சிகளைச் செய்வது உண்டு. ஒரு நாள் விவேகானந்தரின் திருவுருவம் தம் அருகில் நின்று கொண்டு தாம் செய்யும் பயிற்சிகளைக் கவனித்துக் கொண்டு இருப்பதை ஸ்ரீ அரவிந்தர் நிதர்சனமாகக் கண்டார். அதற்குப் பிறகு  விவேகானந்தரின் திருவுருவம் அலிப்பூர் சிறையிலும் அவருக்குக்  காட்சி அளித்தது. அலிப்பூர் சிறைக்கு வந்த பொழுது, ஸ்ரீ  அரவிந்தர் அத்வைத

சித்தி பெற்றவராக இருந்தார். ஏனோ தெரியவில்லை அவருக்கு அது முடிந்த அனுபவமாகப்படவில்லை. ஆயினும் அதனைக் கடந்து செல்லும் முயற்சியில் அவர் ஈடுபடவில்லை .

     அத்வைத சித்தி அடைந்த ஒருவர், வேறெந்த ஒன்றையும் நினைக்கவோ அல்லது அடையவோ விரும்பமாட்டார். ஆனால் விவேகானந்தரின் உருவம் அடிக்கடி தோன்றி. அத்வைத நிலைக்கு  அப்பால் உள்ள சுத்த தெய்வ நிலை இது’ எனச் சுட்டிக் காட்டும். ஸ்ரீ அரவிந்தர் அந்த உண்மையை அறிந்து கொள்கிறவரை விவேகானந்தர் திரும்பத் திரும்ப எடுத்துச் சொல்வார். இந்நிகழ்ச்சி தொடர்ந்து பதினைந்து நாள்கள் வரை நடந்து கொண்டு இருந்தது. ஸ்ரீ அரவிந்தரின் யோக நெறியில் மையமான கொள்கையாக விளங்குவது. ‘சுத்த தெய்வ சக்தி’ என்பது. அதன் ரகசியத்தை அவர் அறியுமாறு செய்தவர் விவேகானந்தர் ஆவார்.

ஸ்ரீ அரவிந்தர் இறைவனிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார். அவர் இறைவனிடம் செய்து கொண்ட கோரிக்கை இதுதான். “இறைவா! நான் உன்னிடம் முக்தியைக் கேட்கவில்லை. இதை நீயே அறிவாய். மற்றவர்கள் கேட்கும் எதையும் நான் உன்னிடம் கேட்க வில்லை. இந்த நாட்டை உயர்த்துவதற்கான வலிமையைக் கொடுக்க வேண்டுமென்றுதான் உன்னிடம் வேண்டிக் கொள்கிறேன். எந்த மக்களுக்காக என் வாழ்க்கையை அர்ப்பணிக்க விரும்புகிறேனோ. எந்த மக்களிடம் அன்பு வைத்திருக்கிறேனோ, அவர்களுக்காக ஜீவித்திருக்கவும். சேவை செய்யவும் என்னை அனுமதிக்க வேண்டும்.

அவர் யோகத்தை விரும்பியதற்குக் காரணம் உலகத்தைத் துறந்து இறைவனை அடைய வேண்டும்’ என்பதன்று. யோகத்தினால் கிடைக்கும் வலிமையைக் கொண்டு நாட்டு மக்களை விடுவிக்க வேண்டும்’ என்பதுதான்.

இந்தியா 1947, ஆகஸ்ட், 15ஆம் தேதி பூரணச் சுதந்திரம் அடைந்தது. இந்தத் தேதி ஸ்ரீ அரவிந்தரின் பிறந்த தினமாக அமைந்துள்ளது. இது எதிர்பாராதவிதமாக அமைந்தது என்று நினைப்பதற்கில்லை. ஏதோ ஒரு வகையில் அவருடைய தியாகத்தையும், தன்னலமற்ற சேவையையும் பாராட்டுவது போலத்தான் ஆகஸ்ட், 15இல் இந்தியா விடுதலை பெற்றதாக நாம் கருத வேண்டியுள்ளது. அது மட்டுமன்று; ஸ்ரீ அரவிந்தர் மனித சமுதாயத்திற்கு ஒரு பொன்னான எதிர்காலத்தை உருவாக்கியுள்ளார். இது போலவே இந்தியாவும் உலகத்திற்கு ஒரு முக்கியமான எதிர்காலத்தை உருவாக்குகின்ற பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளப் போகிறது என்பதற்கு அடையாளமாக அத்தேதி அமைந்துள்ளதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஸ்ரீ அரவிந்தருடைய யோகத்தில் ஒரு முக்கியமான திருப்பம் 1926, நவம்பர், 24ஆம் தேதி ஏற்பட்டது. இந்த நாளை வெற்றித் திருநாள்’ என்று குறிப்பிடுவார்கள். சுத்த தெய்வீக சக்தி மனித உடலில் புகுமாறு செய்து, அதில் பொதிந்துள்ள இறைத் தன்மையை வெளிப்படுத்த வேண்டும்’ என்பதுதான் அவருடைய கொள்கை யாகும். இந்தச் சக்தியை மனித உடலில் புகுமாறு செய்ய வேண்டுமானால், முதலில் அந்த மனோசக்தியானது புகுந்து மனித உடலைப் பக்குவப்படுத்த வேண்டும். பக்குவப்படுத்தப்பட்டு விட்டால், சுத்த தெய்வீக சக்தி அவ்வுடலில் புகுந்து செயல்படுவது உறுதியாகி விடுகிறது. சுத்த மனோசக்தி ஸ்ரீ அரவிந்தரின் உடலில் புகுந்தது நவம்பர் 24ஆம் தேதி. இத்தேதி சுத்த தெய்வீக சக்தி உடலில், புகுந்து செயல்படுவதை உறுதி செய்வதால், இது வெற்றித் திருநாள் என்றழைக்கப்படுகிறது.

சுத்த தெய்வ சக்தியானது மனித உடலில் புகுந்து செயல்படும் பொருட்டு 1926 முதல் 1950 வரை ஸ்ரீ அரவிந்தர் ஒரு தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்தார். உடலை விட்டு விடுவதன் மூலம் அச்சக்தியின் செயல்பாட்டைத் துரிதப்படுத்தி வெற்றிகரமாக அதனைத் தம்முடலில் புகுமாறு செய்ய வேண்டிய ஒரு சந்தர்ப்பம் ஸ்ரீ அரவிந்தருக்கு ஏற்பட்டது. அம்பெருந்தியாகத்தைச் செய்து அச்சக்தி தம்முடலில் புகுமாறு செய்தார் மகான் ஸ்ரீ அரவிந்தர். அத்தினம் 1950, டிசம்பர் 5ஆம் தேதியாகும். அன்று முதல் மூன்று நாள்கள் (அதாவது அவர் உடல் அடக்கம் செய்யப்படுகிற) வரை அவருடைய திவ்யமான சரீரம் பொன் மயமாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தது.

One Comment on “அன்னையின் தரிசனம்/கர்மயோகி ”

Comments are closed.