ஒரு என்.ஆர்.ஐ. திருமண ஏற்பாடு – சுஜாதா

அறிவுஜீவி சுஜாதா வாசகர்கள் குழு மூலம் ராம்  ஸ்ரீதர் 

கே.கே. செப்டம்பரில் ஒரு வாரத்துக்கு அவன் கம்பெனியின் ஏதோ சாஃப்ட்வேர் விஷயமாக இந்தியா வரும்போது ப்ரேமாவை ஓரிரண்டு பெண்களைப் பார்த்து வைக்கச் சொல்லி போன் பண்ணியிருந்தான்.

ப்ரேமாவும் மும்முரமாக மகனுக்கேற்ற மணப்பெண் வேட்டையில் ஈடுபட்டாள். சேஷாத்ரியிடம் சொல்லி வைத்திருந்தாள். “இவன் சுத்த சைவம். இப்பவே பகவத் கீதை, யோகா எல்லாம் பேசறான். இந்த வருஷம் பண்ணியே ஆகணும் மாமா. இல்லைன்னா சாமியாராப் போய்டுவான்.”

“பையனுக்கு என்ன வயசு?”

“ஆகஸ்ட்டுக்கு முப்பத்து நாலு ஆய்டுத்து”

“என்ன வயசில பெண் வேணும் உங்களுக்கு? இப்பல்லாம் பெண்கள் அதிக வயசு வித்யாசம் கூடாதுங்கறா”

“இருபத்தாறிலருந்து பாருங்களேன்! கொஞ்சம் பார்க்க சுமாரா இருக்கணும்ங்கறான். வேற எதிர்பார்ப்பு இல்ல”

சேஷாத்ரி மூன்று ஜாதகம் சொன்னார். அதில் ஒன்று பொருத்தமாய் இருந்தது. கிருஷ்ணகுமார் வந்த உடன் அவளைத்தான் முதலில் காட்டப்போவதாகச் சொன்னாள். பெண்ணின் தகப்பனாருக்கு போன் பண்ணபோது “இண்டிபெண்டன்ட்டா வளர்த்துட்டோம்” என்று மட்டும் சொன்னார். அவள் வேலை பார்க்கும் கம்பெனி பேர் சொன்னார். அதில் பெரிய பதவியாம்.

கே.கே. பிரிட்டிஷ் ஏர்வேஸ் – சென்னை ப்ளைட் கிடைக்காமல் மும்பை வந்து காலைதான் ஜெட் ஏர்வேஸ் ப்ளைட்டில் வந்தான். தூக்கமிழந்த கண்களுடன் வந்தவுடனே ‘ஜெட்லா’கினால் படுத்து விட்டான். நடுநிசியில் எழுந்து உருட்டிக்கொண்டிருந்தான். அம்மாவும் எழுந்துவிட்டாள் டைனிங் டேபிளில் உட்கார்ந்து “கார்ன்ப்ளேக்ஸ் மிக்ஸர் மாதிரி நொறுக்குத் தீனி எதும் இல்லையா?” என்று கேட்டபோதுதான் சுசரிதாவைப் பற்றி அம்மா சொல்லுமுன், “சாண்டாமோனிக்காவிலேயே ஒரு பெண் இருக்கா என்றாள்.

“மெட்ராஸ் பொண்ணுதான்மா வேணும்” என்றான் தீர்மானமாக

“அந்த ஊர் பெண்களெல்லாம் ரொம்ப பிற்காலத்தில் பிரச்சினை வர்ற பொண்ணுகள்*

“சுசரிதாவை பாரு அருமையான பெண் உனக்கேற்ற பெண்”

“சமைப்பாளா?”

“சமைக்கிறது பெரிய பிரம்ம வித்தையில்லை. எட்டு ஊருக்கு சமைக்கலாம். அதுவும் உங்க ஊர்ல ரொம்ப சுலபம்”

“எப்படித் தெரியும்?”

“நல்லா வளர்த்திருக்கா. ஒரே பொண்ணுன்னு சேஷாத்ரி மாமா சொன்னார். பெரிய வேலைல இருக்காளாம்.”

“எனக்கு வேலைல இருக்கற பொண்ணு தேவையில்லைம்மா, இதை விட்டுட்டு அமெரிக்கா வருவாளா?”

“அதெல்லாம்தான் கேட்டு வச்சுக்கயேன் தெய்வ சங்கல்பம் இருந்தா எது வேணா சாத்தியம்.”

“நான் அகமதாபாத் போறேன் சாயங்காலம்”

“எப்ப திரும்பி வரே?”

“எட்டு நாளாகும்” என்றான் டிஜிட்டல் டயரியைப் பார்த்து,

“போறதுக்குள்ள ஒருமுறை பார்த்து பேசிடேன்.”

எட்டு மணிக்கே போன் பண்ணியபோது சுசரிதா ஆபீஸ் பிளம்பிச் சென்றுவிட்டாள் என்று தெரிந்தது.

“எந்த ஆபீஸ்னு கேளும்மா. தானே ஏர்போர்ட் போதுக்கு முன்னால் பார்த்துடறேன்” என்றான்.

எந்த ஆபீஸ் என்று கேட்டபோது, “என்னவோ ஆபீஸ் சொன்னாளே. போன் நம்பர் இருக்கு தரேன்” என்ற பதில் ப்ரேமாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“பெண்ணை பெத்தவா இப்படியா விட்ட குறையா பேசுவா. எனக்கென்னவோ இது சரிப்படும்னு தோணலை கிருஷ்ணா” என்றாள்.

“இப்பதான் அருமையான பொண்ணுன்னே. அவசரமா யாரையும் ஜட்ஜ் பண்ணாதம்மா…”

“நான் இன்னும் நேர்ல பார்க்கலைப்பா. அவ மனுஷாளோட பேசிருக்கேன் நன்னாதான் பேசினா….”

====================

வெங்கட நாராயணா ரோடில் புதிய கட்டடம் ஒன்றில் சுசரிதாவின் நவீன அலுவலகம் இருந்தது ரிசப்ஷனில் நிறைய பேர் காத்திருந்தார்கள்.

‘அப்பாயிண்ட்மென்ட் இருக்கிறதா ” என்று கேட்டார்கள்,

“இட் இஸ் நாட் அபிஷியல் கேன் ஐ டாக் டு ஹர்”

‘ஷி இஸ் இன் எ மீட்டிங். “

“ஐ கன் வெய்ட்”

ஒரு ரிஜஸ்டரில் எழுதச் சொன்னார்கள். செல்ஃபோனை விட்டுச் செல்லச் சொன்னார்கள்.

“உங்க பேரு”

“கிருஷ்ணகுமார்”

“சைன் ஹியர்”

அந்த ரிசப்ஷன் பெண் தாழ்வாக யாருடனோ பேசினபின் “நீங்க மத்யானம் மூணு மணிக்கு வரலாம்” என்றாள்.

“லுக்? நான் ப்ளைட் பிடித்து அகமதாபாத் போறேன். லெட் மி ஜஸ்ட் டாக் டு ஹர்.”

மறுபடி தாழ்வாக பேசியபோது, “மேடம் வெய்ட் பண்ணச் சொன்னாங்க”

மேடம்!

அரைமணி காத்திருந்தான். பத்துமுறை கடிகாரத்தைப் பார்த்தான்.

ப்ளைட் பிடிக்க நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் கோபம் கொப்பளித்து தன் கார்டை கொடுத்துவிட்டுப் புறப்பட இருந்தபோது, “ரோஸ்! என்னை பார்க்க விசிட்டர் யார் வந்திருக்காங்க” என்ற குரல் கேட்டது. அவளை முதலில் பார்த்தபோதே அத்தனை ஆயாசமும் நீங்கியது.

“வாங்க உக்காருங்க” என்று வரவேற்பு அறையில் மெத்தை இருக்கையில் உட்காரச் சொன்னாள். அருகிலிருந்த இருக்கையை விட்டு எதிரே உட்கார்த்தாள்.

“ஸாரி, உங்களை காக்க வெச்சுட்டேன்.”

சாந்தமான முகம், மாநிறம்தான், எல்லாம் அமெரிக்கா போனால் கலர் வந்துவிடும் என்று எண்ணினான்.

“பரவால்லை. காத்திருந்ததுக்கு பலன் கிடைச்சிருச்சு”

“புரியல” என்றாள் பேச்சில் நேர்மையும் பாசாங்கற்ற தன்மையும் தெரிந்தது. இதற்குள் யாரோ வந்து ஏதோ ஒரு கடிதத்தில் அவளிடத்தில் கையெழுத்து வாங்கிச் சென்றார்.

“ரொம்ப பிசியா இருக்கீங்க” என்றான்.

கையெழுத்து போட்டுவிட்டு, “என்ன சொல்ல வந்தீங்க?” என்றாள்.

“நத்திங்”

ஒரு நிமிஷ மெளனத்திற்கு பிறகு “என் போ கிருஷ்ணகுமார். அமெரிக்காவில் பே ஏரியாவில் சாஃப்ட்வேர் கம்பெனியில் வைஸ் ப்ரசிடெண்டா இருக்கேன்”

“அம்மா சொன்னா.. ஆபிஸ் விஷயமா வந்திருக்கறதாகவும் மேரேஜ் விஷயத்தையும் தீர்மானிச்சுட்டு….. “

“ரெண்டு வாரம். நடுவில் அகமதாபாத் போயிட்டு வந்துருவேன்”

“ஐஸீ, ‘ எத்தனை நாள் இருப்பீங்க?”

“ரெண்டு வாரம்… நடுவில அகமதாபாத் போயிட்டு வந்துருவேன். அதுக்கு முன்னாடி…..”

அவள் நிறுத்தி நிதானமாகப் பேசினாள். “உங்களை எனக்குத் தெரியாது என்னை உங்களுக்குத் தெரியாது. ஒரு ரிசப்ஷன் ரூம்ல பதினைந்து நிமிஷம் பேசி நம்முடைய எதிர்காலத்தை சாஸனம் பண்ணிக் கொடுக்க சம்மதம் தெரிவிக்கணும்கறீங்களா? இஸ் இட் பாஸிபிள்?”

“சேச்சே! அப்படி இல்லை.”

“பின்ன எப்படி மிஸ்டர் கிருஷ்ணமூர்த்தி?”

“கிருஷ்ணகுமார்.”

“குமார்! பாருங்க. நான் இருக்கறது ஒரு பொறுப்புள்ள உத்யோகத்தில் நானும் உங்களைப்போல ஒரு விபி. 200 கோடி டர்ன் ஓவர் உள்ள கம்பெனி, அதை விட்டுட்டு அமெரிக்காவில் ஒரு பரிபூர்ண அந்நியனை நம்பி என் எதிர்காலத்தை ஒப்படைக்கறதில எவ்வளவு ரிஸ்க்குனு உங்களுக்கு தெரிகிறதா? உங்களுக்கும் அது ரிஸ்க் இல்லையா?”

“நான் என்ன சொன்னேன்? ஒருத்தரை ஒருத்தர் முதல்ல தெரிஞ்சக்கலாம். அதற்கு அப்புறம் பரஸ்பரம் இஷ்டம் பொருத்தமிருந்தா தொடரலாம்.”

“ஃபேர் இனஃப். சரி தெரிஞ்சுக்கலாம். உங்களைப் பத்தி எல்லா விவரமும் சேஷாத்ரிங்கறவர் சொல்லியிருக்கார். அதுக்கு மேல ஏதாவது சொல்ல விரும்பறிங்களா?”

அவன் சற்று யோசித்தான், சொல்லலாமா வேண்டாமா என்கிற சங்கடம் மனதில் ஓடியது போலத் தோன்றியது.

தீர்மானித்துவிட்டான்…

“உங்ககிட்டருந்து எதையும் மறைக்க விரும்பலை… மறைக்க முடியாதுன்னுதான் தோணுது.”

“சேஷாத்ரிக்கு எல்லாம் தெரியாது” என்றான்.

“ஏற்கெனவே எனக்கு ஒரு கல்யாணமாகி டிவோர்ஸ் ஆகியிருக்கிற விஷயத்தை அவர்கிட்ட சொல்லலை!”

“உங்களுக்குமா?” என்றாள்.

=================

அவர்கள் திருமணம் அடுத்த முகூர்த்தத்தில் லாயிட்ஸ் சாலையில் இருந்த பெரிய கல்யாண மண்டபத்தில் சம்பிரதாயமாக நடந்தேறியது. இருவரும் இரண்டாம் முறையாக அம்மி மிதித்து அருந்ததி பார்த்தார்கள்.

May be an image of 1 person

s

One Comment on “ஒரு என்.ஆர்.ஐ. திருமண ஏற்பாடு – சுஜாதா”

Comments are closed.