அறிவுஜீவி சுஜாதா வாசகர்கள் குழு மூலம் பரதன் வெங்கட்
ஒரு கிராமத்துக்கு ஒரு சாமியார் வந்திருந்தார். அதிகம் பேச மாட்டார். ஒரு மாதிரி மௌன சாமியார். ஊர்க்காரர்களுக்கு அவரை ரொம்பப் பிடித்துப் போய்விட்டது.
ஒவ்வொருவரும் அவரைத் தங்கள் வீட்டுக்கு உணவு உட்கொள்ள அழைத்தனர். முதல் நாள் மதியம் சாமியார் ஒரு வீட்டிற்குச் சென்றார். வாழை இலையில் சில பதார்த்தங்களுடன் உணவு பரிமாறப் பட்டிருந்தது. இலையின் ஒரு மூலையில் சமைக்கப்பட்ட, சில பாகற்காய் துண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. சிறுவயதிலிருந்தே பாகற்காய் என்றால் அவருக்குச் சுத்தமாகப் பிடிக்காது. அப்படி ஒரு வெறுப்பு.
ஆனால் துறவிக்கான சில தர்மங்கள் உண்டல்லவா? இது வேண்டும் இது வேண்டாம் என சொல்லமுடியாதே. விருந்தளித்தவர் அன்புடன் கொடுப்பதை ஒதுக்கினால் அவரை அவமானப் படுத்தியது போலாகிவிடுமே! ஆகவே சாமியார் ஒரு யுக்தி செய்தார். முதலிலே கசப்பான எல்லா பாகற்காய்த் துண்டுகளையும் விழுங்கி விட்டு, அந்த கசப்பு சுவையை நீங்குவதற்கு, மற்ற சுவையான பதார்த்தங்களைச் சாப்பிட்டு விடலாம்; கசப்பு தெரியாது என எண்ணினார்.
அதன்படி பாகற்காய் துண்டுகளை எடுத்து உண்ண ஆரம்பித்தார். இதைக் கவனித்த அந்த வீட்டுக்கார அம்மாள், “அடடா! இவருக்கு பாகற்காய் என்றால் மிகவும் இஷ்டம் போல இருக்கின்றதே” என்றெண்ணி மேலும் இரண்டு மூன்று கரண்டி பாகற்காய் துண்டுகளை எடுத்து இலையில் வைத்து விட்டார். அவரும் விதியை நொந்தபடி உண்ண வேண்டியதாயிற்று.
மறுநாள் ‘எப்படியோ முதல் வீட்டிலிருந்து தப்பித்தோம்’ என்று எண்ணியபடி,வேறொரு வீட்டு விருந்துக்கு சென்றபோது, அங்கு உணவு பரிமாறப்பட்ட வாழையிலையைக் கண்டதும் இவருக்குத் தூக்கி வாரிப்போட்டது. இலையில் ஏராளமான பாகற்காய் வகையறாக்கள். “சாமியாருக்கு பாகற்காய் தான் பிடிக்கும்” என்ற தகவலை,முதல் வீட்டுப் பெண்மணி இந்த வீட்டுக்குத் தெரிவித்து விட்டார் போல இருக்கிறது!
பிறகென்ன, கிராமம் முழுக்க ‘சாமியார் பாகற்காய் பிரியர்’ என்ற செய்தி பரவி, “பாவக்காய் சாமியார்” என்ற பெயரும் அமைந்து விட்டது. தினமும் அவருக்கு பாகற்காய் ஜுஸ், பாகற்காய் வறுவல், பொரியல், அவியல், ஊறுகாய், வத்தல் என புதிது புதிதாக பாகற்காயில் தயார் ஆயின. ஒரு மாதம் ஓடிவிட்டது. சாமியார் கிட்டத்தட்ட பாகற்காயிலே அமிழ்ந்து விட்டார்!
ஆனால் அதற்குப்பின் நடந்த அதிசியத்தைப் பாருங்கள்! திடீரென்று சாமியாருக்கு பாகற்காயின் மீது ஓர் அலாதியான அன்பு பிறந்து விட்டது. அதன் சுவை அவருக்கு மிகவும் பிடித்துப் போக ஆரம்பித்து விட்டது. அதுமட்டுமல்ல, பல வருடங்களாக அல்லல் கொடுத்து வந்த அவரது சர்க்கரை வியாதி பெருமளவுக்கு கட்டுப் பாட்டிற்குள் வந்து விட்டிருந்தது! உடலில் ஒரு புது பெருகும், வலுவும் கூறியிருப்பதை உணர ஆரம்பித்தார். பாகற்காய் கசப்பாக இருந்தாலும் அதுவும் ஏதோவொரு காரணத்திற்காகத் தான் படைக்கப் பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார்.
இப்படித்தான், சில சமயங்களில், நமக்குப் பிடிக்காத, கசப்பான, கடுமையான, வேதனையான சில அனுபவங்கள் கூட நமது வாழ்க்கையை சிறப்பாக மாற்றியமைத்து விடுகின்றன!


