கம்பனைக்காண்போம் 56 /வளவ. துரையன்

கோபுர வாயில்கள்

”எல்லைநின்ற வென்றியானை என்னநின்ற முன்னமால்
ஒல்லைஉம்பர் நாடளந்த தாளின்மீ[து] உயர்ந்தவான்
மல்லல்ஞாலம் யாவுநீதி மாறுறா வழக்கினால்
நல்லஆறு சொல்லும்வேத நான்கும்அன்ன வாயிலே” [115]

[உம்பர்=தேவர்; மல்லல்=பலவளங்கள் நிரம்பிய]

அயோத்தி நகரின் கோபுரங்களின் நுழைவாயில்களைப் பற்றிக் கம்பன் கூற முற்படுகிறான். அந்நகரத்தின் கோபுர வாயில்கள் நான்கு இருக்கின்றன. அவை ஒன்றுக்கு ஒன்று நேராக நிற்பதால் நான்கு திசைகளிலும் நிலையாக இருக்கின்ற வெற்றி பொருந்திய நான்கு திக்கஜங்கள் போல நின்றன. முன்பு திருமால் திரிவிக்ரம அவதாரம் எடுத்தபோது தேவர்கள் இருக்கும் மேல் உலகத்தை அளந்த திருவடியை விட அவை உயர்ந்திருந்தன. பல வளங்கள் நிறைந்த இவ்வுலகத்தில் எல்லா உயிர்களும் தத்தம் நெறியிலிருந்து தவறாமல் நடப்பதால் அவை நல்ல ஒழுக்கங்களைக் கூறும் நான்கு வேதங்களை ஒத்திருந்தனவாம்.

அயோத்தியின் கோபுர வாயில்களுக்குள் நுழைந்தாலே தீயொழுக்கம் அகன்று நல்லொழுக்கம் வந்து விடுவதால் நான்கு கோபுரவாயில்களுக்கும் நான்கு வேதங்களை உவமையாக்கினார். மேலும் முதலில் திக்கஜங்கள் என்று உவமையாகக் கூறியதால் எட்டு வாயில்கள் உள்ளனவோ என்று ஐயம் எழலாம். எனவேதான் நான்கு வேதங்களை மீண்டும் உவமையாகக் கூறுகிறார். அவை எல்லையில் நிறுத்தப்பட்ட வெற்றியானைகள் போல் நின்றனவாம்.