சகோதரி சூழுலகு_ஆர்க்கே

தின விடியல்கள் கிழக்கெனில்
தினசரிச் சண்டைகள் நமக்குள்.

இன்றுடன் தீர்ந்தாய்
என்கிற உக்கிரப்போர் நடக்கையில்
அதன் இறுதி வெற்றியை மட்டும்
நமக்குள்ளான பாசம் மட்டுமே வைத்திருக்கும் எப்போதும்.

இவனைப் பாரும்மா என
அம்மாவிடமும்
அவனைக் கேளுங்கப்பா என
அப்பாவிடமும்
பஞ்சாயத்துப் போகாத
வழக்கேதும் மிச்சமுண்டா நமக்குள்?

சிறு வயது
தெருச் சண்டையொன்றில்
நானுற்ற நெற்றிக்காயத்தையுன்
தாவணியால் துடைத்துவிட்டு
எவன்டா எங்கண்ணனை
அடிச்சது என சீறியிருக்கிறாய் பெண்புலியாய்
சிங்கங்கண்ட காளைக்கூட்டமாய்
சிதறியோடுவதாய்த்தான்
என் சேக்காளிகள் கூட்டம் .

என் இனிய சண்டைக்கோழியே!
அடுத்த பிறவியிலேனும்
நம் அன்னையின் வயிற்றினுள்
எனக்கு முன் பிறந்து வை!

என் இரண்டாம் அம்மாவாய்
உன் பாசக்கதகதப்பும்
என் வெளிச்சவாழ் கருவறையாய்
உறங்கிட உன் மடியும்
வேண்டும்
தங்கையெனுமென்
தாயின் மாற்றே!

—-அன்புடன் ஆர்க்கே.!