பாம்பும் அத்தை மகளும்/வளவ துரையன்

பக்கத்து வீட்டுக்குப்
பாம்பு வந்துவிட்டது

எப்பொழுதாவது வருமாம்
என் அத்தை மகள்
ஆறு மாதத்துக்கொரு முறை
ஆடி ஆடி வருவது போல

என்ன நிறமென்று பார்த்தால்
என்னால் சொல்ல முடியவில்லை

சிவப்பா கருப்பா மாநிறமா
அவள் போல்தான் இதுவும்

நிறத்தை எழுத முடியாததால்தான்
பாம்பின் நிறமொரு குட்டியெனப்
பாரதி பாடினாரோ?

என்னைக் கண்டாலே
எப்பொழுதுமவள் செய்வது போல்
தலையை மறைத்துக் கொள்வது
தானாக வந்த வெட்கமா அச்சமா

நானென்ன அன்னியனா
அடிக்கடிதான் பார்க்கிறோமே

தொட்டாலவள் போலவே
துடித்துப் போகிறது
சினம் கொண்டு சீறுகிறது

எவ்வளவோ சொல்லியும்
இருவருமே அடங்கவில்லை.

பிடாரன் வந்து அதைப்
பிடித்துக் கட்டிவிட்டான்

நான் இனிதான் கட்டவேண்டும்

3 Comments on “பாம்பும் அத்தை மகளும்/வளவ துரையன்”

  1. //பிடாரன் வந்து அதைப்
    பிடித்துக் கட்டிவிட்டான்

    நான் இனிதான் கட்டவேண்டும்// இன்னுமா கட்டாமல் இருக்கிறீர்கள்! அத்தை மகள் வேறு???????

  2. /பிடாரன் வந்து அதைப் பிடித்துக் கட்டிவிட்டான் நான் இனிதான் கட்டவேண்டும்// இன்னுமா கட்டாமல் இருக்கிறீர்கள்! அத்தை மகள் வேறு???????

Comments are closed.