நாற்பத்தைந்து வருடங்களுக்கு அதிகம் கூட இருக்கும்/வண்ணதாசன் 

நாற்பத்தைந்து வருடங்களுக்கு அதிகம் கூட இருக்கும். ‘ தீபம்’ இதழில் ‘ வெளியேற்றம்’ என்று ஒரு கதை எழுதினேன். மரத்தை வெட்டும் போது பறவைகள் வெளியேறுவது பற்றிய கதை. ஆனால் அது மட்டுமே அல்ல.

எங்கள் வீட்டில் அப்போது ஒரு தங்கரளி மரத்தை வெட்டினார்கள். அது மிகச் சிறியது. மரம் கூட அல்ல. ஒரு வளர்ந்த செடி. ஆனால் நான் சுவர் மீது உட்கார்ந்து அதன் பூக்களைப் பறித்து உறிஞ்சியபடியே இருப்பேன். என் போலவே, அதன் மதுவைத் துளையிட்டு உறிஞ்சும் தேன் சிட்டுகளை நான் அறிவேன். அதே காரணத்திற்காக சதா கிளைகளில் பிள்ளையார் எறும்பு ஊர்ந்து கொண்டே இருக்கும்.

நான் கூடுதலாக, பராசக்தி பில்டிங்ஸ் அரச மரத்தில் சிட்டுக் குருவிகள் அடைவதையும், அதே போல மணியாச்சி ஸ்டேஷனில் மோர் விற்கும் சிறுமி அந்தக் குருவிகள் கருக்கலில் மொய்த்துக் கலைவதைப் பார்ப்பது பற்றியும் எழுதியிருப்பேன்.

இன்றைக்கு எங்கள் வீட்டில் பத்துப் பன்னிரண்டு வருடங்களாக நெடு நெடு என்று வளர்ந்து, பூத்துக் குலுங்கிப் பூ உதிர்த்த பன்னீர் மரத்தை ‘ஆள் விட்டு’ வெட்டுகிறார்கள். சுற்றுச் சுவர் ஓரம் ஒரே ஒரு தளச் செங்கலை அதன் வேர் முட்டிப் பெயர்த்துவிட்ட ஒரே ஒரு குற்றத்திற்கான பெரும் தண்டனையாக வீட்டில் அப்படித் தீர்மானித்துவிட்டார்கள். எனக்குத் தாங்க முடியவில்லை.

பாலாஜி தோட்டத்தில் இருந்து இரண்டு நாற்றுகள்கொண்டுவந்து வைத்தேன். ஒன்று பட்டுப் போயிற்று. ஒன்றுதான் வேர் பிடித்தது. மிக மெதுவாக வளர்ந்தது. ஆள் உயரம் வளரவே ஐந்து வருடங்கள் ஆகியிருக்கும். அதன் பின் மட மடவென வளர்ந்து மேலே போய்விட்டது..

தண்ணீர் எல்லாம் ஊற்றியதில்லை. அது அனேகமாகத் தானாகவே வளர்ந்தது. தானாகவே பூத்தது. அப்படி எனில் தானாகவே தானே வாட வேண்டும் அல்லது சாய வேண்டும்.

நான் இதுவரையிலான என் வாழ்வில்,, காற்றில் முறிவதை, மின் பராமரிப்புப் பணியாளர்கள் தறித்துவிடுவதைத்

தவிர, ஒரு மரம் தானாக வாடினதையோ தானாகச் சாய்ந்ததையோ பார்த்ததே இல்லை.

கோடரி, ரம்பம் எல்லாம் மனிதன் உண்டாக்கினது தானே. வன தேவதைகள் கூட ஒரு கோடரியைத் தொலைத்தவனிடம், ‘ இதுவா? இதுவா?’ என்று கேட்டு மூன்று கோடரிகள் தருவதாக அல்லவா நாம் கதை சொல்கிறோம்.

மிஞ்சிப் போனால் இன்னும் இரண்டு மணி நேரம். எங்கள் வீட்டில் அந்தப் பன்னீர் மரம் நின்ற தடம் கூடத் தெரியாது.

அது ஏன் பன்னீர் மரங்களில் பறவைகள் எதுவும் கூடு கட்டுவதில்லை? மற்றப் பறவைகள் இருக்கட்டும். ஒரு காகம் கூட அதில் அமர்ந்திருந்து நான் பார்த்த நினைவு இல்லையே.

ஒரு பன்னீர் மரம் பறவைகளுக்கானது இல்லை போல. அது முழுக்க முழுக்க, அதன் பூவைப் பொறுக்கி உதட்டில் வைத்து ‘பீப்பி’ ஊதிக்கொண்டு போகிற, மழைக்காலத்து, ஆரம்பப் பள்ளிச் சிறுமிகளுக்கு மட்டுமானது ஆக இருக்கும்.

மழைக்காலம் இல்லையே. இது காற்றுக் காலம் ஆயிற்றே.