இன்று யானைகள் தினம்/லக்ஷ்மணசாமி ரங்கசாமி

இன்று யானைகள் தினம். எல்லோரும் எழுதுவதை பார்க்கிறேன்.எனக்கு நேரடியான நிறைய அனுபவங்கள் இருக்கிறது…ஆனால் இரு சம்பவத்தைமட்டும் பகிர்ந்துகொள்ளும் ஒரு வாய்ப்பாக இந்த நாளை எடுத்துக்கொள்கிறேன்

ஒன்று

ஒரு ஆதிகுடியின் காடு அது.கொள் விளைந்து காய்த்திருக்கிறது. முதிர்ந்து வெடித்த வாசம் அதை ஈர்த்திருக்கிறது மலையைவிட்டு இறங்கி சமதளத்துக்கு வந்துவிட்டது. முள்வேலியைதாண்டி ஒரு காலை எடுத்து உள்ளேயும் வைத்துவிட்டது.

கூரையிலிருந்த சிவம்மா பார்த்துவிட்டாள்.எழுந்துபோய் ஒரு காலில் மண்டியிட்டு..ஒரு கரத்தை தும்பிக்கைபோல் உயர்த்தி ‘இது மூணுகுடும்பத்து புட்டு..போய்க்கோ ராஜா’ என்று ஓங்கிக்குரலெடுத்து வேண்டிக்கொண்டு முனுமுனுத்தபடி அப்படியே அமர்ந்துவிட்டாள்.

அது சிவம்மாளையே பார்த்துக்கொண்டிருந்தது.பின் என்ன நினைத்ததோ தெரியவில்லை.திரும்பி பிளிரிக்கொண்டே அதன் கூட்டத்துக்குள் போய் சேர்ந்துகொண்டது.

இப்போது நினைத்தாலும் சிலிர்த்துக்கொள்ளும் நிகழ்வு அது.

அந்த வருடம் அறுவடைமுடியும்போது ஒரு வெளாவை அதற்கென விட்டுவிட்டு அறுவடை செய்தாள்.

சில நாட்கள் கழித்து மூன்று யானைகள் வந்து அதை மேய்ந்துபோன பின்புதான் நிம்மதியானாள் சிவம்மா.

இரண்டு

2011 ஆம் ஆண்டு என நினைக்கிறேன். இருளத்தொடங்கும் ஒரு மாலையில், நகரை நோக்கி திரும்பிவந்துகொண்டிருந்தேன். பாதையெங்கும் செடிகள் முறிந்து கிடக்கிறது.மான்கள் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருக்கிறது..அதை ரசித்தபடியே ஒரு திருப்பத்தை கடக்கிறேன். 10 அடி இடைவெளியில் நேருக்கு நேராய் ஒற்றை யானை நின்றுகொண்டிருக்கிறது.வண்டி அனிச்சையாக நின்றுவிட்டது.

நானும் பார்த்துக்கொண்டிருக்கிறேன் அதுவும் பார்த்துக்கொண்டிருக்கிறது.

மனதில் எந்த சலனமும் எனக்கு இல்லை.அதற்கும் இல்லை என நினைக்கிறேன்
அது ஏனென்று இதுவரை அறிந்துணரமுடியவில்லை.

ஒரு அடி முன்னோக்கி நகர்ந்து தும்பிக்கையை நீட்டினால் என்னை வளைத்து பிடித்துவிடலாம்..பிடித்து சுழட்டி ஓங்கி அடித்து ரத்தக்கூழமாக ஆக்கிவிடலாம்.

ஆனால் தும்பிக்கையை லேசாகத்தூக்கி காற்றை முகர்ந்து கீழேபோட்டுக்கொண்டு தலையை ஆட்டி ஆட்டி லேசாக பிளிரியபடியே ஒப்பமரசோலைக்குள் நுழைந்து மறைந்துபோய்விட்டது..

இந்த உயிரை அது எதற்கோ விட்டுவைத்திருக்கிறது. அதற்கு நன்றியறிவிக்க இந்த நாளை உபயோகிப்படுத்திக்கொள்கிறேன்.