பிரபந்தங்களின் பதம் பிரிப்பது பற்றி : சுஜாதா

அறிவுஜீவி சுஜாதா வாசகர்கள் குழு

Ram Sridhar  

பிரபந்தங்களின் பதம் பிரித்து நண்பர் திரு. சுஜாதா தேசிகன் (Desikan Narayanan) சமீபத்தில் “பதம் பிரித்த பிரபந்தம்” என்று நூல் வெளியிட்டதை நம் குழுவிலும் பகிர்ந்துள்ளார்.

பழைய கல்கி வார இதழ் ஒன்றை நேற்று படிக்க நேர்ந்தது. அதில் பதம் பிரிப்பது பற்றி சுஜாதா அவருடைய பாணியில் அருமையாக ஒரு கட்டுரை எழுதியுள்ளார். இதோ அந்தக் கட்டுரை:

ஆழ்வார் பாசுரங்களை ரசிக்க முதலில் பதம் பிரித்துக் கொள்ள வேண்டும். அது சில சமயம் எளிதாக இருக்கும். சில சமயம் ரொம்ப கடினமாக. தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் பாசுரங்கள் எளிமை ரகத்தைச் சேர்ந்தவை. நம்மாழ்வாரின் பாசுரங்களும் அப்படியே அவரது திருவிருத்தம் மட்டும் படுத்தும். உதாரணத்துக்கு இந்த 31வது பாசுரத்தைப் பாருங்கள்.

இசைமின் கடூதென்றிசைத்தாலிசையிலமென்றலைமே
லசைமின்களென்றாலசையுங்கொலாமம் பொன்மாமணிக
டிசைமின்மிளிருந்திருவேங்கடத்து வன்றாட்சிமய
மிசைமின்மிளிரிய போவான்வழிக்கொண்டமேகங்களே.

தலைகால் புரியவில்லையல்லவா? இதில் ஒளிந்து கொண்டிருக்கும் பாடல் என்ன பார்க்கலாம். முதலில் பதம் பிரித்தால் கொஞ்சம் வெளிச்சம் கிடைக்கும்.

இசைமின்கள் தூது என்று இசைத்தால் இசையிலம் என் தலைமேல்
அசைமின்கள் என்றால் அசையும்கொலோ அம்பொன் மாமணிகள்
திசைமின்மிளிரும் திருவேங்கடத்து வன்தாள் சிமயம்
மிசை மின் மிளிரிய போவான்வழிகொண்ட மேகங்களே

(வன்தாள் சிமயம் – வலிமையான அடிவாரமுள்ள சிகரம்)

இப்படிப் பிரித்தால் இன்னும் கொஞ்சம் தெளிவாகிறது. இந்தப் பாடலில், தலைவி திருவேங்கட மலைக்குச் செல்லும் மேகங்களை தூது போகச் சொல்கிறாள். அவை ‘போ போ அதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை’ என்று மறுத்துவிட, ‘என் தலையையாவது மிதித்துவிட்டுச் செல்லுங்கள்’ என்கிறாள்.

இப்படி ஒரு அழகான ரத்தினத்தை பதம் பிரித்துத் தோண்டியெடுக்க வேண்டும்.

தமிழை ஒரு agglutinative language என்பார்கள். வார்த்தைகளை ஒட்ட வைத்துக்கொண்டே போகலாம். ‘இசைமின்கடூது’ என்பதை ‘இசைமின்கள்தூது’ என்றும், ‘மணிகடிசைமின்மிளிரு’-மணிகள் திசை மின் மிளிரும் என்றும் வெளியே கொண்டு வந்தால் கிடைப்பது ஓர் அற்புதமான அகத்துறைப் பாடல்.

எப்பொழுதும் கைம்மாறு கருதாமல் பிறருக்கு உதவுதலையே இயல்பாக உடைய மேகங்கள் நம் காரியம் செய்யத்தக்கன என்று தலைவி நினைத்து வேங்கட மலைச்சிகரத்தில் மின்னலடிக்கச் செல்லும் மேகங்களிடம் என்னைப்பற்றி பெருமாளிடம் சொல்லுங்கள் என்று கேட்டதில் தூது சொல்ல அவை இசைய(சம்மதிக்க)வில்லை. அதனால் ‘என் தலைமேல் உங்கள் பாதத்தை வைத்துவிட்டாவது செல்லுங்கள்’ என்று கேட்கிறாள்.

**** agglutinative language = a form of synthetic language in which each affix typically represents one unit of meaning

இந்த நாட்களில் திருப்பதிக்கு செல்லும் மேகங்களை லட்டு வாங்கிவர மட்டுமே சொல்வோம்!

May be an image of 1 person and text

52You, Desikan Narayanan, Natarajan Srinivasan and 49 others