‘ முறிந்த பாலம்’/வண்ணதாசன் 

எனக்குத் தேவதச்சனும் எஸ்.ராமகிருஷ்ணனும் பேசுவதை விடிய விடியக் கேட்டுக் கொண்டு இருக்க வேண்டும். அப்படிக் கேட்பது ஒரு கோவில்பட்டி விடுதியாக இருக்க வேண்டும். யாருடைய வீடாகவும் இருக்கக் கூடாது என்று ஒரு விருப்பம் உண்டு. அதன் ஒரு விள்ளல் நேற்று நிகழ்ந்தது.

குற்றாலம் சாரல் விழாவை ஒட்டி, தென்காசி புத்தகத் திருவிழாவில் பேச வந்திருந்த எஸ்.ராமகிருஷ்ணன் எங்கள் வீட்டிற்கும் மனைவி, மகன்களோடு வந்திருந்தார்.

அவர் சொல்வது. உண்மைதான். குற்றாலத்தைத் திருக்குற்றாலம் என்று மட்டுமே குறிப்பிடும் ரசிக மணி டி.கே.சி க்குக் குற்றாலத்தில் ஒரு சிலை வைக்கலாம். சாரல் விழாக் காலங்களில் , எங்கே திரும்பினாலும் ‘ குற்றாலக் குறவஞ்சி’ இசைப் பாடல்கள் ஒலிக்கச் செய்யலாம்.

அவர் நிறையப் பேசிக்கொண்டு இருந்தார். அவ்வளவு பெரிய மொகலாயப் பேரரசர் பாபர், ஆட்சி செய்தது ஐந்து வருடங்களுக்கும் குறைவே. போர் செய்ததும் பயணம் செய்ததையும் தவிர்த்தால் வெறும் ஒன்றரை ஆண்டுகள் கூட இராது என்று சொன்னது சின்ன வயதுச் சரித்திரப் பாடங்களின் பாபரை வேறு தோற்றத்தில் வரைய வைத்தது.

எழுதுகிறவனின் பேச்சில் எப்போதிருந்து அந்த மாயம் நிகழ ஆரம்பிக்கிறது என்று யார்க்கும் தெரியாது. எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.ராமகிருஷ்ணனோடு மட்டும் பேசுகிற நேரமாக மாறிவிட்டிருந்தது அது. தாண்டர்ன் ஒயில்டரின் ‘ முறிந்த பாலம்’ நாவலுக்குள் வெகு தூரம் போயிருந்தார். அவருடைய 23 ஆம் வயதில் தமிழ் மொழி பெயர்ப்பாகப் படித்த வரிகள் சமீபத்தில் அதை ஆங்கிலத்தில் படிக்கும் போது ஒலித்ததைச் சொன்ன போது எஸ்.ராமகிருஷ்ணன் எங்களை விட்டு முற்றிலும் அகன்றிருந்தார்

பாலம் முறிந்து இறந்து போகும் ஐந்து பேரில் ஒரு தாயின்/ மகளின் கதையை எங்கள் வீட்டுச் சிறிய முன்னறை நிரம்பும் படியாகச். சொன்னார். நாங்கள் எல்லோரும் அந்த முறிந்த பாலத்தில் நின்றோம். நான் ஒருவன் மட்டும் யாரும் அறியாது நதியில் விழுந்து மூழ்கினேன். (தேவனாத்தா புண்ணியத்தில் கிரிக் கவுண்டருக்கு ‘ நொய்யல்’ ஆற்றில் வெள்ளம் வரப் போவதைக் காட்டிக்கொண்டிருக்கிறேன் காரிச்சியாக இப்போது).

நான் ‘ முறிந்த பாலம்’ படித்ததில்லை. சந்தியா பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது. நடராஜன் சாரை அனுப்பச் சொல்ல வேண்டும்.

May be an image of 2 people and beard