
பக்கத்து வெற்று மனை
சிறு காடாகக் கிடந்தது;
குத்துச் செடிகள்
சில காட்டுப்பூச் செடிகள்
ஓரிரு வேப்ப மரங்கள்
செழித்திருந்தன!
சின்னச் சின்ன குருவிகள்,
ஒரு குயில், சில மைனாக்கள்,
வெண்ணிற மேனியில்
வெளிர்மேக நிறக் கழுத்துடன்
இரு கொக்குகள்
அம்மனையை வாசஸ்தலமாகக்
கொண்டிருந்தன!
ஒருநாள் எங்கிருந்தோ
ஒருவன் வந்தான்!
மனையை வாங்கி விட்டதாகவும்,
அடுக்ககம் கட்டப் போவதாகவும் சொன்னான்!
எல்லாத் தாவரங்களையும்
வேரோடு வெட்டிச் சரித்தது
ஒரு ராட்சச எந்திரம்;
பறவைகள் அச்சத்தில்
ஓரத்தில் ஒடிந்து கிடந்த
வற்றல் மரத்தின்
உயர் கிளையில் சென்று நின்றன;
ஒன்றை ஒன்று பார்த்து
கீச் கீச் என்று
கழறிக் கொண்டன!
சுதந்திரமாகத் திரிந்த
சின்ன உறைவிடம் போயிற்று;
புலம் பெயர
இன்னொரு சுதந்திர நிலத்தைத்
தேட வேண்டுமே
என்று புலம்பினவோ அவை!
