வாள்/முபீன் சாதிகா

தன் பரம்பரை வாளைத் தினமும் துடைத்து சுவரில் மாட்டுவது அவன் வழக்கம். தன் ராஜ பரம்பரையின் நினைவுச் சின்னமாக இருக்கும் அந்த வாளை தினமும் பெருமையும் பூரிப்பும் கலந்து தொட்டுப் பார்ப்பான் அவன். அந்த வாள் எத்தனைப் போரைப் பார்த்திருக்கும் என எண்ணிச் சிலிர்த்துப் போவான். அந்த வாளைக் குறித்த வரலாற்றைத் தான் இதுவரை சரியாகத் தேடவில்லையே என நினைத்தபடி ஒரு நாள் இரவு உறங்கிப் போனான். அந்த வாளை இடுப்பில் வைத்துக் கொண்டு ஒரு காட்டில் குதிரையில் அவன் பயணித்துக் கொண்டிருந்தான். எதிரில் ஒருவன் மிகவேகமாக ஈட்டியை வைத்துக் கொண்டு குதிரையில் வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்தவுடன் குதிரையை நிறுத்திவிட்டு மரத்தடியில் இவன் நின்றான். அவன் இவனை நோக்கி ஈட்டியை வீசி எறிந்தான். இவன் வாளால் அதைத் தடுத்து அப்புறப்படுத்தினான். அவன் இவன் முன்பு வந்து நின்றான். இருவருக்கும் வாள் சண்டைத் தொடங்கியது. இவன் கற்ற வாள் சண்டையில் யாரையும் கொல்லக் கூடாது; ஆனால் அவர்களை நிராயுதபாணிகளாக்கி அந்த வெட்கத்தில் அவர்களாகவே இனி எந்தச் சண்டைக்கும் போக முடியாத உறுதி பூண வைக்கவேண்டும் என்பதுதான் இவன் கற்ற பாடம். அதே போல் எதிரில் இருந்தவனை வீழ்த்தி அவனுடைய வாளை உடைத்து அவனை மண்டியிட வைத்தான். இனி எப்போதும் அவன் எந்தச் சண்டைக்கும் போகக்கூடாது என்று உறுதி மொழி பெற்றுக் கொண்டு அனுப்பிவைத்தான். குதிரையை ஓட்டிக் கொண்டு நாட்டுக்கு வந்தான். அப்போது அங்கு வாள் சண்டை நடக்கவிருப்பதாகவும் அதில் கலந்துகொள்பவர்களுக்குப் பெரும் பரிசு தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இவன் உடனடியாக அதில் கலந்துகொண்டான். அதிலும் இதே போல் யாரையும் கொல்லாமல் நிராயுதபாணிகளாக்கி அனுப்பிவைத்துக் கொண்டிருந்தான். இதைக் கண்ட அந்த வாள் சண்டை நடத்திய அரசனுக்கு ஆச்சரியமும் கவலையும் ஏற்பட்டது. இவனை அழைத்து வாள் சண்டை மூலம் அமைதியைப் போதிப்பது நாட்டுக்கு நல்லதல்ல என்றான். இவன் கற்ற பாடம் அமைதிக்காக மட்டுமே ஆயுதம் எடுக்கவேண்டும் என்பதுதான் என்று கூறினான். அப்போது இவன் எதிர்பார்க்காத வகையில் இவன் மீது அரசன் வாளை எடுத்துப் பாய்ச்சப் போனான். இவன் தன் வாளை எடுத்து அதைத் தடுத்து அரசனை நிராயுதபாணியாக்கினான். வெட்கத்தால் முகம் சிவந்த அரசன் தன் அரசப் பதவியை இவனுக்கு விட்டுக் கொடுத்தான். அரியணை ஏறிய இவன் எல்லாப் போர்வீரர்களுக்கும் தன் வாள் சண்டையின் பாடத்தைக் கற்றுக் கொடுத்து உயிரைக் கொல்வதிலிருந்து தடுத்துவிட்டான். ஒரு வீரன் இவனிடம் வந்து ஓர் உயிரைக் கூடக் கொல்லாமல் இவனால் தொடர்ந்து இருக்க முடியுமா என்று கேட்டான். அப்படி ஓர் உயிரைக் கொல்லும் நிலை ஏற்பட்டால் தான் அரச பதவியைத் துறந்து அந்த வாளை இனித் தொடப் போவதில்லை என்று கூறினான். அப்போது அவன் எதிர்பார்க்காத நேரத்தில் அந்த வீரன் வாளை எடுத்து இவன் மீது பாய்ச்ச வந்த போது இவன் தடுக்கப் போய் அது அவனுடைய தலையைக் கொய்துவிட்டது. இவன் திடுக்கிட்டு விழித்து ஓடிப் போய் தன் அறையில் இருந்த வாளைப் பார்த்தான். அதில் ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது.

One Comment on “வாள்/முபீன் சாதிகா”

Comments are closed.