கிணற்றுத் தவளைகள்/முபீன் சாதிகா

பல தவளைகள் சேர்ந்து ஒரு குழுவாக ஒரு கிணற்றில் வாழ்ந்து வந்தன. அதில் ஒரு தவளை பலரும் தன் இனத்தைக் கிணற்றுத் தவளைகள் எனக் குறிப்பதில் பெரும் உளைச்சலுற்று கிணற்றுக்கு வெளியே வந்து பலவற்றையும் கற்றுக் கொண்டு மீண்டும் கிணற்றுக்கு வந்து அங்கிருந்த தவளைகளுக்கும் அதைப் பகிர விரும்பியது. அங்கிருந்த கிணற்றுத் தவளைகள் சொல்வதைத் திருத்துவதும் விமர்சிப்பதுமாக இருந்ததால் படித்த தவளையைக் கண்டால் அங்கிருந்த மற்றத் தவளைகளுக்குப் பிடிக்கவில்லை. படித்த தவளை அந்தக் கிணற்றில் நீர் இறைக்க வந்த ஒரு பெண்ணிடம் ஒரு கதையைச் சொன்னது. அதைக் கேட்ட அந்தப் பெண் எதற்காக இன்னும் கிணற்றில் இருக்கிறாய். வெளியே வந்து வேறு உலகத்தில் வாழ்ந்து பார் என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டாள். படித்த தவளைக்கு இருப்பு கொள்ளவில்லை. அதைக் கண்ட மற்ற தவளைகள் அதனிடம் வந்து இன்னும் தவளைக் கூச்சல் கூட சரியாகப் போடத் தெரியவில்லை. குழந்தைத்தனமாகவே கூச்சல் போட்டுக் கொண்டிருக்கும் படித்த தவளை வெளியே போனால் மிகவும் கொடுமையான சூழலை அனுபவிக்கும் என்று பயமுறுத்தின. ஆனால் அதை ஏற்காத படித்த தவளை அந்தக் கிணற்றை விட்டு வெளியேறுவதாகச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டது. வெளியே வந்த போது ஒரு பச்சோந்தியைப் பார்த்தது. வானில் வட்டமிடும் கழுகைக் காட்டி அந்தப் பச்சோந்தி உடனே நிறத்தை மாற்றச் சொன்னது. தவளையும் மரத்தின் நிறத்திற்கு மாறி அதன் தண்டின் மீது ஒட்டிக் கொண்டது. கழுகினால் வந்த அபாயம் நீங்கியது. அப்படியே காட்டுக்குள் சென்று விட்டது அந்தத் தவளை. அங்கு கீரிகளிடம் பெரிதும் நட்பைப் பாராட்டியது. அப்போது ஒரு பாம்பு வந்துவிட்டது. கிரிகளின் உதவியை நாடியது. அவை பாம்புடன் போராட்டத்தைத் தொடங்கின. தவளை ஒரு குளத்தில் மூழ்கி அடிப்பகுதிக்குச் சென்றுவிட்டது. மீண்டும் வெகு நேரம் கழித்து வெளியே வந்து கீரி-பாம்பு சண்டை முடிந்ததா என்று பார்த்துவிட்டு அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என யோசித்து. அதே நேரத்தில் கிணற்றில் இருந்த தவளைகள் படித்த தவளைப் பெரிதும் பாடுபடும் என்று சொல்லி பெரு மகிழ்ச்சி அடைந்தன. பெருங்கூச்சலிட்டன. அருகிலிருந்து வீட்டிலிருந்து ஒருவர் வந்து அந்தக் கூச்சலைத் தாங்காமல் அந்தக் கிணற்றை இரும்பு தட்டைக் கொண்டு மூடிவிட்டார். கிணற்றில் இருந்த தவளைகளுக்கு ஒளி இல்லாமல் போனது ஏன் எனப் புரியவில்லை. அவை ஒவ்வொன்றும் ஒளி வருவதற்கான நம்பிக்கையைக் கொடுத்துக் கொண்டிருந்தன. அதில் எது ஒன்றும் மேதாவித்தனமாகப் பேசினாலும் மற்றவைகளுக்குப் பிடிக்கவில்லை. அதிலேயே சண்டையிட்டு மடிந்து போயின. படித்த தவளை ஒவ்வொரு சிக்கலையும் எதிர்கொண்டு அதைப் புத்திசாலித்தனமாகத் தாண்டி ஒரு குளத்தில் இனிமையாகக் குரல் எழுப்பி வாழ்ந்திருந்தது.