வாரிசு/அழகியசிங்கர்

ஒரு நாட்டில் ஒரு ராஜா வசித்து வந்தான். தமிழ் நாட்டின் பெரும்பகுதி அவன் வசம் இருந்தது. ஒருநாள் ஒரு சிவனடியார் அரசனைப் பார்க்க வந்தார்.
அரசன் எழுந்து நின்று அவரை வரவேற்கவில்லை. சிவனடியாருக்குக் கோபம் ஏற்பட்டு அவனுக்குச் சாபம் கொடுத்தார்.
‘ உன் கண் முன்னாலே
உன் நாடு இரண்டு துண்டுகளாகப் போகும்,’ என்பதுதான் சாபம்.

சிவனடியார் காலில் விழுந்து தன்னை மன்னித்து விடும்படி கேட்டுக்கொண்டு விருந்துக்கு அழைத்தான் அரசன். சிவனடியார் மறுத்தத்தோடல்லாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார்.
அரசனுக்கு இரண்டு வாரிசுகள். ஒரு பெண்.ஒர் ஆண். உரிய வயது வந்ததால் தன் பையனுக்கு இளவரசன் பட்டம் சூட்ட நினைத்தான் அரசன். உடனே அவன் பெண், ‘ இது என்ன நியாயம்?’ என்று கேட்டாள். அரசன் குழம்பிப் போனான். எல்லோரிடமும் கலந்தாலோசித்து நாட்டை இரண்டாகப் பிரிப்பது என்று முடிவெடுத்தான். கிழக்குப் பகுதியில் உள்ள இடங்களைப் பெண்ணிற்கும், மேற்குப் பகுதியில் உள்ள இடங்களைப் பையனுக்கும் பிரித்துக் கொடுத்தான்.
அரசனும், அரசியும் யாரிடம் வசிப்பது என்று பிரச்சினை உருவானது.
அவர்கள் வாரிசுகள் இரு நாட்டிற்கும் உள்ள எல்லையில் மாளிகையைக் கட்டி அவர்களைத் தங்க வைக்க முடிவு செய்து அப்படியே ஏற்பாடு செய்தார்கள்.
வாரிசுகள் இருவரும் அதன்பின் அரசனையும்,
அரசியையும் ஒரு முறைகூடப் பார்க்க வரவில்லை.