அசோகமித்திரனைப் போன்று../சுரேஷ் கண்ணன்

அசோகமித்திரனைப் போன்று நகைச்சுவையை இத்தனை நுட்பமாக, அற்புதமாக பயன்படுத்தும் வேறெந்த தமிழ் எழுத்தாளர்களாவது இருக்கிறார்களா என அறியேன். மேற்பார்வைக்கு மிக அடக்கமாக, சாதாரணமாகத் தெரியும் ஒரு வாக்கியத்திற்குள் ஓர் அபாரமான நகைச்சுவை வெடிகுண்டை புதைத்து வைத்திருக்கிறார். பிற்பாடு நினைத்து நினைத்து சிரிக்க வேண்டியதாயிரு்க்கிறது. அவரை தொடர்ச்சியாக வாசிப்பவர்களுக்கு மட்டுமே அது கச்சிதமாக புரியுமோ என்று கூட தோன்றுகிறது.

அவருடைய கட்டுரைகளின் தொகுப்பு நூலில் (கிழக்கு பதிப்பகம்) நுண்கலை என்கிற தலைப்பில் சினிமா பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் அனைத்துமே அற்புதம். குறிப்பாக அவருடைய பழைய முதலாளி எஸ்.எஸ்.வாசன் பற்றிய கட்டுரை சிறந்ததொன்று. முதலாளியுடனான தம்முடைய நெருடலைக் கூட சந்தடி சாக்கில் நுழைத்து விடும் சாமர்த்தியம் அ.மி.க்கே உரித்தானது.

ஆனால் நான் குறிப்பிட வந்தது வேறொன்றைப் பற்றி. உதிரிப்பூக்கள், பசி, அழியாத கோலங்கள் ஆகிய திரைப்படங்களைப் பற்றி சிறு குறிப்புகள் எழுதியிருக்கிறார். இதில் உதிரிப்பூக்களை பாராட்டத் தவறவில்லையென்றாலும் கூட எதிர்நாயகனாக சித்தரிக்கப்படும் விஜயனின் குணாதிசயங்கள் அசாதாரணமானவையா என்ன என்று அவர் அடுக்கும் கேள்விகளை வாசித்தவுடன் ஒரு கணம் எனக்கு கூட ‘அதானே.. பாவிகளா…இதற்காகவாவா அவரை குளத்தில் தள்ளி கொன்றீர்கள்?’ என்று தோன்றி கண்கலங்கி விட்டது. படம் குறித்து நான் இத்தனை வருடங்கள் காத்து வந்து புனிதத் தன்மையை ஒரு நொடியில் கலைத்துச் செல்ல முயன்ற அ.மியை என்னவென்பது?

இத்தனைக்கும் இவைகளை படம் வெளிவந்த புதிதிலேயே அதாவது 80களிலேயே எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமயம் வாய்த்தால் உ.பூ. பற்றிய குறுங்கட்டுரையையாவது தட்டச்சி போடுகிறேன்.

One Comment on “அசோகமித்திரனைப் போன்று../சுரேஷ் கண்ணன்”

  1. ஒருத்தருக்கு நகைச்சுவை உணர்வு அதிகரித்துக் கொள்ள வேண்டியிருந்தால் அசோகமித்திரன் படித்தால் போதுமானது.
    பதினெட்டாவது அட்சக்கோடு படித்த பிற்பாடு யாருக்கும் நகைச்சுவை உணர்வு பன்மடங்கு அதிகரிக்கும்‌ என்பது கண்கூடு.
    ” மனிதக்குரலில் சாத்தியமான‌ எல்லா ஒலிகளையும் எழுப்பித் தீர்த்தோம்” என்ற வரிகளெல்லாம் அவராலேயே சாத்தியம்.

Comments are closed.