வரலாற்றை எழுதுதல்/சுகிர்தராணி

சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம் ஒன்று, தமிழ்த்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

‘வரலாற்றை எழுதுதல்’ என்னும் அக்கருத்தரங்கத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து நான் உட்பட எழுத்தாளர்கள் சு.வேணுகோபால், ஸ்டாலின் ராஜாங்கம், எச்.ஜி.ரசூல், யாழன் ஆதி ஆகியோர் கலந்து கொண்டோம்.

விவாதத்தின்போது எழுத்தாளர்களிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. என்னிடமும் பெண்ணியம், தலித்தியம் குறித்து சில கேள்விகள் கேட்கப்பட்டன.

உடல் அரசியல் குறித்தும் உடல்மொழி குறித்தும் ஒரு எம் பில் ஆய்வு மாணவர் என்னிடம் வினா எழுப்பினார். அது உடல் அரசியல், ஆபாசம் இரண்டையும் குழப்பி ,புரிதல் இல்லாமல் கேட்கப்பட்ட கேள்வி. கவிதைகளை வாசிக்காமல், யாரோ சொல்வதை வைத்து எழுப்பப்பட்ட கேள்வி. சலிப்பும் கோபமும் ஒருசேர என்னுள் எழுந்தது.இருப்பினும் மாணவர்கள் என்பதால் மீண்டும் சில கவிதைகளோடு பதில் அளித்தேன்.

இன்று காலை பள்ளிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தபோது ,புதிய எண்ணிலிருந்து ஓர் அழைப்பு வந்தது. எடுத்துப் பேசினால், ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த ஆய்வு மாணவர்தான் பேசினார்.அவர் முகம்கூட எனக்கு நினைவிலில்லை.கேரளப் பழங்குடி எழுத்தாளர் புஷ்பம்மாவிடம் என் தொடர்பு எண் பெற்று, என்னிடம் பேசினார்.
இப்போது முனைவர் பட்டமும் பெற்று கேரளக் கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.

‘ அதன் பிறகு நிறைய வாசித்து, ஆய்வு செய்யும்போதுதான் நீங்களெல்லாம் எவ்வளவு தீவிரமாக காத்திரமாக எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது புரிந்தது. இப்போது நான் ஒரு மார்க்ஸியவாதி, பெண்ணியவாதி. உண்மையில் அப்படி ஒரு கேள்வியை அன்று உங்களிடம் கேட்டிருக்கவே கூடாது. அந்தக் கேள்வியைக் அன்று கேட்டதற்காக இன்று உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

ஆண்கள் பெண்ணியவாதிகளாக இருப்பதுதான் , பெண் விடுதலையின் முதல்படி. அன்று  அந்தக் கேள்வியை நீங்கள் கேட்டதன் மூலம்தான் உங்கள் தேடல் உங்களைப் பெண்ணியவாதியாக மாற்றியிருக்கிறது.வாழ்த்துகள் தோழர் என்றேன்.

ஆறு ஆண்டுகள் கழித்து இன்று அம்மாணவரின் ஒரு மன்னிப்பு கோரல்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அன்றே அம்மாணவரை நான் மன்னித்து விட்டது அவருக்குத் தெரியாது. மகிழ்ச்சியான நாள் இன்று. <3