கண்ணனும் ஸ்ரீஅரவிந்தரும்/திருப்பூர் கிருஷ்ணன்

ஆன்மிக அமுதம்
……………………………………..
கண்ணனும் ஸ்ரீஅரவிந்தரும்
திருப்பூர் கிருஷ்ணன்
…………………………………….
*இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவர் நான் கண்ணக் கடவுளை நேரில் தரிசித்தேன் என்று சொன்னார் என்றால் ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் அது உண்மை.

அப்படிக் கண்ணனை நேரில் தரிசித்ததாகச் சொன்னவர் அண்மைக் காலத்தில் வாழ்ந்த மகான் ஸ்ரீஅரவிந்தர்.

அதுவும் ஏதோ ஒருவருடனான உரையாடலில் அவர் இதைப் பகிர்ந்துகொள்ளவில்லை. பொது மேடையில் ஓர் அறிவிப்பு போல் இதை அறிவித்தார் என்பதுதான் வியப்பு.

*செய்யாத ஒரு கொலைக் குற்றத்திற்காக அரவிந்தர் மேல் பழி சுமத்தப்பட்டது. அவரது பேச்சாலும் எழுத்தாலும் மக்கள் சுதந்திர ஆவேசம் கொள்கிறார்கள் என்பதால் அதை ஒடுக்க ஆங்கிலேயர்களால் புனையப்பட்ட பொய்க் குற்றச்சாட்டு அது.

அரவிந்தரைக் காவலர்கள் அலிப்பூர் சிறையில் அடைத்தார்கள்.

ஏற்கெனவே மிகுந்த ஆன்மிக நாட்டம் கொண்டிருந்தவர் அரவிந்தர். நாள்தோறும் சிறிது நேரம் ஜப தபங்களில் ஈடுபடுபவர் தான்.

ஆனால் சுதந்திர எழுச்சியை ஊட்டும் பேச்சுகளைப் பேசுதல், சுதந்திர ஆவேசம் ஊட்டும் எழுத்துகளை எழுதுதல் போன்ற பல அலுவல்களில் அவரது பெரும்பகுதி நேரம் செலவாகிக் கொண்டிருந்தது.

முற்றிலும் ஆன்மிகத்திற்கே தன்னை ஒப்புக்கொடுத்து முழுமையாக இறை பக்தியில் தோய்ந்து வாழ அவரால் இயலவில்லை. வெளியுலக வாழ்க்கை அதற்கு இடம் கொடுக்கவில்லை.

சிறைப்பட்டதும் அவரின் ஆழ்மனம் சிந்தனையில் ஆழ்ந்தது. இது கண்ணக் கடவுளின் திட்டம் என்பதாக அவர் புரிந்துகொண்டார்.

தரிசித்ததாகச் சொன்னவர் தரிசித்ததாகச் சொன்னவர் அண்மைக் காலத்தில் வாழ்ந்த மகான் ஸ்ரீஅரவிந்தர் காலத்தில் வாழ்ந்த மகான் ஸ்ரீஅரவிந்தர்

வேறெதிலும் மனத்தைச் செலுத்தாது முழுமையாக கண்ணனைக் குறித்த தவத்தில் ஈடுபடவே கண்ணன் இப்படித் தன்னைச் சிறையில் அடைபடச் செய்திருக்கிறான் என்பதாக உணர்ந்தார்.

சிறைக்குள் கண்ணனை மட்டுமே சிந்தித்தவாறு கடுமையான தனிமைத் தவத்தில் ஆழலானார்.

ராமகிருஷ்ணர், விவேகானந்தர் இருவரும் சூட்சும உருவில் அவர் முன் தோன்றி தவம் நிகழ்த்துவதில் அவருக்கு வழிகாட்டினார்கள்.

தாகம் தாகம் என்று தண்ணீர் குடிக்கும் தவிப்பு ஏற்பட்டது அவருக்கு. தாக உணர்ச்சி என்பதுதான் என்ன என்று மனத்தில் தீவிரமாக ஆராய்ந்து தண்ணீர் குடிக்காமலேயே இருந்து அந்த உணர்ச்சியை வென்றார்.

இப்படி ஒவ்வோர் உணர்ச்சியாகப் படிப்படியாக வெல்லத் தொடங்கினார். மனத்தை முழுமையாக ஆராய்ந்து மனத்தையும் அதன் வழியே உடலையும் தம் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.

சிறையில் யாருக்கும் தலைமுடிக்குத் தடவிக்கொள்ள எண்ணெய் கொடுப்பது கிடையாது. எல்லாக் கைதிகளின் தலைமுடியும் சிக்குப் பிடித்துத்தான் கிடக்கும்.

ஆனால் அரவிந்தரின் முடி மட்டும் சிக்குப் பிடிக்காமல் நாள்தோறும் எண்ணெய் தடவிய முடிபோல மினுமினுவென்றிருக்கும்.

இதைப்பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்தான் உபேந்திரநாத் சட்டோபாத்யாய என்ற சக கைதி. யாராவது அரவிந்தருக்கு ரகசியமாக எண்ணெய் கொண்டு தருகிறார்களா என அவன் விசாரித்தான்.

அப்படியெல்லாம் இல்லையே என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னார் அரவிந்தர். அது உண்மையெனில் உங்கள் முடிமட்டும் எப்படி இத்தனை மினுமினுப்பாக இருக்கிறது என்று கேட்டான் அவன்.

`அன்பனே! நான் கண்ணனைக் குறித்துத் தவம் செய்கிறேன். இடையறாத தவத்தின் காரணமாக என் உடலில் சில மாறுபாடுகள் நேர்கின்றன.

தாவரங்கள் இயற்கையிலிருந்தே தங்களுக்குத் தேவையான சக்தியைப் பெற்றுக் கொள்வதைப் போல என் தலைமுடியும் பெற்றுக் கொள்ளத் தொடங்கிவிட்டதோ என்னவோ?` என்று பதில் சொன்னார் அரவிந்தர்.

அந்த பதிலைக் கேட்டு அவன் மனம் வியப்பில் ஆழ்ந்தது. அந்தக் கைதி தன் சுயசரிதத்தில் இந்த விஷயத்தைப் பதிவு செய்திருக்கிறான்.

சிறை வார்டன் அரவிந்தரின் ஒளிவீசும் புனிதத் திருமுகத்தைப் பார்த்தான். அந்த தெய்வீகப் பொலிவு அவனை பிரமிக்க வைத்தது. அவர் எப்படியும் குற்றம் இழைத்திருக்க வாய்ப்பே இல்லை என்று அவனுக்குத் தோன்றியது.

சிறையில் அவர் இருந்த அறையின் கதவுகளை மட்டும் விரியத் திறந்துவிட்டான் அவன். அரவிந்தர் சிறை வளாகத்தினுள் எப்போது வேண்டுமானாலும் உலாவலாம் என அவரிடம் பணிவோடு தெரிவித்துச் சென்றான்.

அரவிந்தர் செய்த கடும் தவத்தின் பலனாக அவருக்கு ஒருநாள் கிருஷ்ண தரிசனம் கிட்டியது.

அரவிந்தரால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. புல்லாங்குழலைக் கையில் தட்டிக் கொண்டு குறும்புப் பார்வை பார்த்தவாறு கண்ணன் தலையில் மயில்பீலி அசைய அவர் முன் தோன்றினான்.

சிறையில் பிறந்தவன் தானே கண்ணன்? அவனுக்குச் சிறையில் தோன்றுவதென்ன கடினமா?

பக்திப் பரவசத்தோடு தன் முன் நின்ற அரவிந்தருக்கு கீதையை உபதேசம் செய்தான் கண்ணன்.

கண்ணனிடம் கீதையை நேரடியாகக் கேட்டவர்கள் இருவர். ஒருவர் அர்ச்சுனன். இன்னொருவர் அரவிந்தர்.

அர்ச்சுனனுக்கு கீதோபதேசம் செய்த போது நிகழ்ந்தது மகாபாரதப் போர். அரவிந்தருக்கு கீதோபதேசம் செய்தபோது நிகழ்ந்தது சுதந்திர பாரதப் போர்.

அதன்பின் எல்லா இடங்களிலும் கண்ணன் அவருக்குக் காட்சி தரத் தொடங்கினான்.

சிறை வளாகத்தில் மாலை நேரத்தில் உலாவினார் அவர். மரத்தடியில் நின்று அதன் இலைகளை அண்ணாந்து பார்த்தார். ஒவ்வோர் இலையும் குட்டிக் குட்டிக் கிருஷ்ணர்களாக மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த அதிசயத்தைப் பார்த்தார்.

வானத்தை ஏறிட்டு நோக்கினார். அங்கே புறாக்கள் பறந்துகொண்டிருந்தன. ஒவ்வொரு புறாவும் ஒவ்வொரு கிருஷ்ணராகக் காட்சி தந்தன. ஒவ்வொரு புறாவின் தலையிலும் சின்னச் சின்னதாய் ஒவ்வொரு மயில்பீலி.

பிரமித்தவாறு தரையைக் குனிந்து நோக்கினார். அங்கே சின்னஞ்சிறு எறும்புகள் வரிசை வரிசையாக ஊர்ந்து கொண்டிருந்தன. என்ன விந்தை! ஒவ்வொன்றும் ஒரு குட்டிக் கிருஷ்ணர்! ஒவ்வொன்றின் தலையிலும் சிறிய சிறிய மயில் பீலிகள்!

பக்திப் பரவசத்தில் அரவிந்தரின் விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்தது.

மகாபாரத காலத்தில் அர்ச்சுனனுக்கு கண்ணன் தந்தது விஸ்வரூப தரிசனம். இன்று மகான் அரவிந்தருக்குக் கண்ணன் தருவதோ விஸ்வமெல்லாம் தானே என்ற தரிசனம்!

கொடும் கொலைப்பழி சுமத்தப்பட்டுச் சிறைக்கு வந்திருக்கிறீர்களே? நீங்கள் விடுதலை ஆவீர்களா?

சக கைதிகள் அவரிடம் கேட்டார்கள்.

என் கண்ணன் என்னை விடுதலை செய்வான் எனப் பூரண நம்பிக்கையோடு பதிலளித்தார் அரவிந்தர்.

சித்தரஞ்சன் தாஸ் என்ற வழக்கறிஞர் அரவிந்தருக்காக வாதாடினார். இவர் அரவிந்தரின் பெருமையுணர்ந்து பின்னாளில் அவரது சீடராகவே மாறியவர்.

அரவிந்தரை விசாரணைக் கூண்டில் நிறுத்தினார்கள். சுற்றுமுற்றும் பார்த்தார் அரவிந்தர். திகைப்பிலும் பரவசத்திலும் ஆழ்ந்தார். கூடியிருந்த பொதுமக்கள் ஒவ்வொருவரும் கண்ணனாக அவருக்குத் தோற்றமளித்தார்கள்.

வழக்கறிஞர் சித்தரஞ்சன் தாஸ் மறைந்துபோனார். அங்கே சிரித்தவாறே இடுப்பில் கைவைத்துக் கொண்டு கண்ணன் நின்று கொண்டிருந்தான். நீதிபதி நார்ட்டன் துரையும் அவருக்குக் கண்ணனாகவே தோற்றமளித்தார்.

சித்தரஞ்சன்தாசின் வாதத்தைக் கேட்டு நீதிமன்றம் முழுவதுமே வியப்பில் ஆழ்ந்தது.

எதிர்காலத்தில் கடவுள் என்றே மக்களால் தொழப்படப் போகும் ஒரு மனிதரை இன்று நீங்கள் விசாரணைக் கூண்டிலேற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என அறைகூவினார் தாஸ்.

அத்தனை பேரும் அமைதியில் ஆழ்ந்து பொலிவு ததும்பும் அரவிந்தர் திருமுகத்தையே வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அரவிந்தர் மேல் சுமத்தப்பட்ட அத்தனையும் பொய்க் குற்றச்சாட்டு என்பதை நிரூபித்து எதிர்த்தரப்பு வாதங்கள் அனைத்தையும் தவிடுபொடி ஆக்கனார் தாஸ்.

எதிர்பார்த்தவாறே அரவிந்தர் விடுதலையானார். மாபெரும் பேச்சாளரான அவரது சிறை அனுபவத்தைக் கேட்கும் பொருட்டு உத்தர்பாராவிலிருந்த
தர்மரட்சணி சபை அவரைப் பேச அழைத்தது.

பத்தாயிரம் பேருக்கு மேல் அவர் பேச்சைக் கேட்க ஆர்வத்தோடு கூடியிருந்தார்கள். அரவிந்தர் கணீரென்று பேசலானார். புல்லரிக்க வைக்கும் தம் தெய்வீக அனுபவங்களை மக்களிடையே பகிர்ந்துகொண்டார்.

அவரது சொற்பொழிவை கடவுள் பேசுவதாகவே கருதி மக்கள் ஆடாமல் அசையாமல் பிரமிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அவர் பேச்சின் முக்கியமான அம்சம் கண்ணனைக் கண்டதை தனது உள்மனக் காட்சி என்று அவர் கூறவில்லை. சக மனிதரைக் காண்பதுபோல் நேருக்குநேர் கண்ணனைக் கண்டதாகக் கூறினார். மிகுந்த நிச்சயத்துடன் அவர் தெரிவித்த இச்செய்தி அன்றைய நாளிதழ்களில் வெளிவந்தது.

அந்தக் காலகட்டத்தில் பாரதியார் புதுச்சேரியில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார். இந்தச் செய்தியின் உண்மைத் தன்மையை அறிய அவர் இந்தியா பத்திரிகையின் நிருபரைக் கொல்கத்தாவிற்கு அனுப்பினார்.

நிருபர் அரவிந்தரைச் சந்தித்துப் பேசியபின் புதுச்சேரிக்குத் திரும்பி வந்தார். நிருபரை விசாரித்தபின் இந்தியா பத்திரிகையில் பாரதியார் எழுதியது:

“இந்தக் கலியில் பரமாத்ம தரிசனம்
கிடைப்பது துர்லபமாதலால் சிறிது ஐயம்கொண்டு பரமாத்ம தரிசனம் ஒருவேளை கனவிலேற்பட்டிருக்குமோ என்று சங்கிப்பாராயினர். அரவிந்தரின் மறுமொழியைக் கேட்டவுடனே ஐயங்களெல்லாம் தீர்ந்து போயின.

அவர் மறுமொழி கூறும்போது அவர் முகத்திலே தோன்றிய அடக்கத்தையும் அமைதியையும் சிரத்தையையும் நிஷ்கபடத் தன்மையையும் ஒளியையும் கண்டவுடனே அரவிந்தர் மகாசித்தரென்பது தெளிவாய்விட்டது’.

அரவிந்தர்கூறியது: ஆம். நான் நாராயணனைக் காணப்பெற்றேன். எனக்கு நிகழ்ந்த தரிசனங்களெல்லாம் விழிப்பு நிலையில் தோன்றின. கனவுகளல்ல’. (ஆதாரம்: சீனி.விசுவநாதன் தொகுத்த `அரவிந்தர் மகிமை’).

பின்னாளில் அரவிந்தர் முழுமையாக ஆன்மிகத்தில் ஈடுபடும் உத்தேசத்துடன் புதுச்சேரி வந்தபோது பாரதியார் அவரை வரவேற்றார். தம் நண்பர் சங்கரன் செட்டியார் மூலம் அரவிந்தர் தங்குவதற்கு வீடு ஏற்பாடு செய்து கொடுத்தார்.

பின்னர் தொடர்ந்த ஆன்மிகச் சாதனைகள் மூலம் அரவிந்தர் தெய்வமாக உயர்ந்ததை அவரது வரலாறு சொல்கிறது. சுதந்திர தினமான ஆகஸ்ட் பதினைந்து ஸ்ரீஅரவிந்தரின் பிறந்த தினமும் கூட.

கண்ணன் தரிசனம் தந்தது இதிகாச காலமோ ஆழ்வார்கள் காலமோ அல்ல, நம் இந்திய வரலாற்றின் அண்மைக் காலமான சுதந்திரப் போராட்டக் காலம்தான்.

அரவிந்தரின் பக்திக்கு மதிப்பளித்து அவர் விரும்பியபடி இந்தியாவுக்குத் தன் அருள்மூலம் சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த கண்ணன், இனியும் சுதந்திர இந்தியாவைக் காப்பான் என்பதில் சந்தேகமில்லை.
(நன்றி : மாலை மலர்)
……………………………………