ஐயப்பன் மாதவன் கவிதை

ஒரு பூவைப் படம் பிடிக்கும்போது நிச்சலனத்தைக் காட்டுகிறது
ஒரு நிலவைப் படம்
பிடிக்கும்போது
ஆழ்ந்த மெளனத்தை
வெளிப்படுத்துகிறது
நட்சத்திரங்களைப் படம் பிடிக்கும்போது
கண் சிமிட்டுகின்றன
ஒரு மீனைப் படம் பிடிக்கிறபோது
அது துள்ளி மறைகிறது
ஒரு வாத்தைப் படம் பிடிக்கிற போது
அது தன் நிழலோடு நீந்துகிறது
ஓர் உதிர்ந்த இலையை படம் பிடிக்கிறபோது
அது இறப்பைச் சொல்கிறது
ஒரு நதியைப் படம் பிடிக்கிறபோது
அது துரித வேகத்தை இயம்புகிறது
ஒரு கடலைப் படம் பிடிக்கிறபோது
அலைகளின் வீர்யத்தை வரைகிறது
ஒரு படகைப் படம் பிடிக்கிறபோது
மீனவனின் பசியை நினைவூட்டுகிறது
ஒரு மரத்தைப் படம்பிடிக்கிறபோது
அது காற்றில் நடனமிடுவதை உணர்த்துகிறது
ஒரு பறவையை படம் பிடிக்கிறபோது
ஆகாயத்தினை திறந்துவிடுகிறது
ஒரு மழையை படம் பிடிக்கிறபோது
மனதில் ஆனந்தத்தை வெளிக்கொணர்கிறது
ஒரு மனிதனைப் படம் பிடிக்கிறபோது
செயற்கையான சிரிப்பை ஜோடிக்கிறது
என் காமிரா என் கண்களை மறைத்து வைத்திருக்கிறது.