கிருஷ்ண ஜெயந்தி/ரேவதி பாலு

கிருஷ்ண ஜெயந்தி என்றாலே ஒரு வரிசை கிரமமாக வேலைகள் நடக்கும். அன்று அலுவலகம் விடுமுறை ஆனதால் முதலில் சமையலை கவனித்து விட்டு பிறகு மாவு மில்லுக்கு செல்ல வேண்டும். மாவரைத்து வீட்டுக்கு வந்த உடன் வேலைகள் ஆரம்பித்து விடும் . சீடை முறுக்கு தட்டை என்று ஒவ்வொன்றாக செய்து முடித்துவிட்டு நிமிரும் போதே மாலை 4 மணி ஆகிவிடும். சூடாக ஒரு காபியை குடித்துவிட்டு கோலம் போடும் வேலைக்கு போக வேண்டும். வாசல் கோலத்தில் இருந்து ஆரம்பித்து பூஜை அறை வரை சின்ன சின்ன பாதங்கள். குனிந்து நிமிர்ந்து போட்டுவிட்டு இடுப்பு வலியையும் முதுகு வலியையும் பொருட்படுத்தாமல் குளிக்க சென்றால் மணி 6 ஆகிவிடும். பிறகு பூஜை. கிருஷ்ணர் பாடல்களை பாடி ஆரத்தி எடுப்பது என்று கோலாகலமாக எல்லாம் முடிந்து ராத்திரி சாப்பாட்டுக்கடையை பார்க்க வரும்போதே உடம்பு கெஞ்ச ஆரம்பித்து விடும்.
‘எப்ப உடம்ப கொஞ்சம் கீழ சாய்க்கலாம்னு’ இருக்கும்.
, ” குழந்தைகள் இருக்கும் வீடுன்னு நீயும் எத்தனையோ வருஷங்கள் ஓடி ஓடி செஞ்சுட்டே. குழந்தைகளும் கல்யாணம் ஆகி போயாச்சு . இந்த வருஷம் வெறும் பால் தயிர் வெண்ண அவல் போதும் கிருஷ்ணருக்கு. பட்சிணங்கள் செய்து சிரமப்படாதே ” என்றார் கணவர் கரிசனமாக. உடம்பு சரி இல்லாமல் அவ்வப்போது படுத்து படுத்து எழுந்ததால் நானும் அவர் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டேன்.

வாசல் கோலத்தில் கிருஷ்ணர் பாதம் அத்துடன் நேரே பூஜை அறையில் கிருஷ்ணர் பாதம் என்று பார்த்ததும் கணவர் என்னை
விய ப்புடன் நோக்கினார்.
” குட்டி கிருஷ்ணர நடக்க விட வேண்டாம் அப்படின்னு வாசல்ல அவர்பாதம் பதித்ததுமே அவரை இடுப்புல தூக்கிட்டு வந்து பூஜை அறையில் விட்டுட்டேன் பாத்தீங்களா? ” வீடு முழுதும் குனிந்து நிமிர்ந்து கிருஷ்ணர் பாதங்களை போடும் நான் சிரித்துக் கொண்டே அழகாக சமாளித்தேன்.

One Comment on “கிருஷ்ண ஜெயந்தி/ரேவதி பாலு”

  1. கதை ஆரம்பம் ஒரு க்ருஷ்ணஜெயந்தியை கண் முன்னே கொண்டுவருகிறது.பின்னர் யதார்த்தமான கணவர் மனைவி கஷ்டப்படக்கூடாது எனபதற்க்காக கண்ணனுக்கு தயிரும் வெண்ணையும் தான் மிக விருப்பமென்று சமாளிக்க மனைவி கண்ணனை இடுப்பில் சுமந்ததாக கமாளிக்க , கிருஷ்ண ஜெயந்தியை ஒரு மாதிரி சமாளிச்சிட்டீங்க. பேஷ்.

Comments are closed.