சூடாமணி/கே.பாரதி

ஆரம்பம் முதலே தன் மீது விழுந்த செல்வத்தின் செழுமையை மிக சாதாரணமாக தள்ளி வைத்திருக்கிறார் சூடாமணி. எளிய தோற்றம், எளிய உடை, எளிய உணவு, எளிய வாழ்க்கை அவருடைய தேர்வாக இருந்தது. தன் காலத்திற்குப் பிறகு தனது சொத்துகளை ஏழை மக்களுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று அவர் தீர்மானித்திருக்கிறார்.

குளிரூட்டும் சாதனம் போன்ற எந்த வசதிகளும் இல்லாமல் எளிமையாக வாழ்ந்தார். கொசுத்தொல்லையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் நவீன ஏற்பாடுகள்கூட எதுவும் இல்லை.

சூடாமணி உறங்கும் நேரத்தில் வீட்டில் இருக்கும் பணமும், பொருட்களும் களவு போயின. வேலையாட்களைக் கண்டிப்பதையோ அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதையோ விரும்ப மாட்டார். “பணம்தானே போனால் போகிறது. இல்லாத குறைக்குதானே எடுத்துக் கொள்கிறார்கள்” என்பார்.

சூடாமணியின் புத்தக சேகரிப்பு அபாரமானது. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற புத்தகங்கள் அவரது சேகரிப்பில் இருந்தன. மிகமிக அபூர்வமான, வேறு பிரதி எங்குமே காணக் கிடைக்காத புத்தகங்கள் சில இருந்தன. இவற்றில் பெரும்பகுதி ரோஜா முத்தையா நூலகத்திற்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது.

சூடாமணியின் உயிலின்படி சுமார் இருபதுக்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகள் வழங்கப்பட்டன. சுமார் பதினோரு கோடிக்கும் மேலான தொகை மூன்று பெரிய நிறுவனங்களுக்குச் சமமாகப் பிரித்து வழங்கப்பட்டது.

முக நூலில் முழங்கியவர் : ஆர.கந்தசாமி