திருச்சிற்றம்பலம் (2022)/சுரேஷ் கண்ணன்

*

வாவ்! எவ்வளவு நாளாகி விட்டது, தமிழில் இப்படியொரு ஃபீல் குட் படத்தைப் பார்த்து?! ஏறத்தாழ படம் முழுவதும் இனிமையான மெல்லுணர்ச்சிகள் ததும்பிக் கொண்டேயிருக்கின்றன. ஒவ்வொரு சீனையும் பார்க்க அத்தனை ஆசையாக இருக்கிறது. இயக்குநர் மித்ரன் ரசித்து ரசித்து எடுத்திருக்கிறார்.

*

தனுஷ் – இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களின் வரிசையில் முக்கியமான இடத்தில் கம்பீரமாக அமர வேண்டிய நடிகன். இவர் அடைய வேண்டிய உயரம் இன்னமும் கூட நிறைய இருக்கிறது. இவருக்கு வெற்றி மாறன், செல்வராகவன் போன்றவர்கள் கூட போதாது. தனுஷின் வெவ்வேறு பரிமாணங்களை கையகப்படுத்திக் கொள்ளுமளவிற்கு இயக்குநர்கள் இங்கே நிறைய உருவாக வேண்டியுள்ளது.

ஒரு காட்சியில் தான் விரும்பும் பெண் ‘டிப்ஸ்’ தந்ததும் தனுஷ் ஒரு எக்ஸ்பிரஷன் தருகிறார் பாருங்கள்?! அத்தனை நுட்பமான முகபாவத்தை நான் கமலிடம்தான் அதிகம் கண்டிருக்கிறேன். படம் பூராவும் இப்படி அசத்திக் கொண்டேயிருக்கிறார் தனுஷ். ஆர்ட் சினிமாவிற்கும் கமர்சியல் சினிமாவிற்கும் இடையில் ஒரு நடிப்பிருக்கிறது. அந்த இடத்தில் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டே போகிறார். ஒரு வழக்கமான ஹீரோவிற்கான எவ்வித தடயமும் இல்லாமல் ஹீரோவாக நடித்திருக்கிறார் தனுஷ். (குழப்பமாக இருக்கிறதா? படம் பார்க்கும் போது நான் சொல்வது புரியும்).

*

நித்யா மேனன் – ‘நடிப்பு ராட்சசி’ என்று பிரியத்துடனும் பிரமிப்புடனும் ஆடியோ விழாவில் பாரதிராஜாவும் பிரகாஷ்ராஜீம் நித்யா மேனனனைப் பற்றி குறிப்பிட்டார்கள். அது மிகையில்லை. படம் பூராவும் கவிதைக் கணங்களால் நிரப்பி வைத்திருக்கிறார்.

‘வாடா. போடா..’ என்று உரிமையாக அழைத்து, நம் நலனில் இத்தனை அக்கறை எடுத்துக் கொள்ளும் ஒரு நண்பி நமக்கு இருந்தால் வாழ்க்கை எத்தனை இனிமையாக இருக்கும்?!” என்கிற ஏக்கத்தை நித்யா மேனன் ஒவ்வொரு ஆணுக்கும் தருவார் என்பது நிச்சயம். அப்படியொரு ரகளையான performance.

*

பிரகாஷ்ராஜ் எல்லாம் இத்தனை ஆர்ப்பாட்டமில்லாமல் நடித்திருப்பதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. அவரிடமிருந்து தேவையான நடிப்பை மட்டும் இயக்குநர் வாங்கியிருப்பது ஆச்சரியமும் மகிழ்ச்சியும். சாப்பாட்டுத்தட்டை மீண்டும் மீண்டும் பிரகாஷ்ராஜ் வீசி எறியும் ஒரு காட்சி போதும், அவரின் திறமையைப் பறைசாற்ற. பாரதிராஜாவின் ரோல் ஒன்றும் புதுசு இல்லை என்றால் உணவில் உப்பு போல சுவை சோ்க்கிறார்.

படத்தின் பிரதான பாத்திரங்கள் அனைத்திற்கும் screen space சமமாக பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பது திரைக்கதையின் உன்னதத்தைக் காட்டுகிறது.

*

அனிருத்தின் பின்னணி இசையும் பாடல்களும் (தாய்க்கௌவி போன்ற கொடுமைகளைத் தவிர்த்து) படத்திற்கு உதவியாக நின்றிருக்கின்றன. ரவுடியுடன் சண்டை, பிரகாஷ்ராஜிற்கு திடீரென்று உடல் சரியாவது போன்ற நாடகத் தருணங்கள் இருந்தாலும் அவை பொிதாக உறுத்தவில்லை.

*

ஓகே.. படத்தின் முக்கியமான பிரச்சினைக்கு வருவோம்.

spoilers may be ahead

கிளைமாக்ஸை இயக்குநர் கன்வின்ஸாங்கவே சித்தரித்தாலும் அது ‘நிகழக்கூடாது’ என்று எனக்கு உறுத்திக் கொண்டேயிருந்தது. முடிவு வேறு மாதிரியாக அமைக்கப்பட்டிருக்கலாம்.

விக்ரமனின் முதல் திரைப்படமான ‘புது வசந்தம்’ வந்த போது “பழம் தின்னு கொட்டை போட்ட இயக்குநர்கள் கூட சிந்திக்காத அல்லது படத்தில் வைக்கத் துணியாத விஷயத்தை நீ செஞ்சிருக்கே” என்று பாலசந்தர் பாராட்டினாராம்.

அப்படியாக ஆண் – பெண் நட்பை அப்படியாகவே இயக்குநர் விட்டிருக்கலாமே என்று ஆதங்கமாகவே இருந்தது.

*

படம் குறித்தான நெகட்டிவ் விமர்சனங்களை ஒதுக்கி விடுங்கள். தனுஷ் – நித்யா மேனன் என்கிற இரு நடிப்பு பிசாசுகளுக்காக படத்தைச் சென்று பாருங்கள். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்கிற உத்தரவாதமான நம்பிக்கை எனக்குண்டு.