பாரதியாரும் ஸங்கீதமும்/-சக்திதாஸன் சுப்பிரமணியன்

முகநூல் பதிவு : வேலாயுத முத்துக்குமார

(1938இல் வெளிவந்த பாரதி லீலை நூலிலிருந்து)

1899 – 1902 ஆகிய வருஷங்களில் முத்துசாமி தீட்சிதர் அவர்களின் தம்பியார் குமாரர் சுப்பராம தீட்சிதர் என்பார் ‘ஸங்கீத ஸம்பிரதாய ப்ரதர்ஸினி’ என்றதோர் அரிய ஸங்கீத நூலை இயற்றிக் கொண்டிருந்தார். எட்டயபுரம் மன்னர் அதற்கு வேண்டிய பொருளுதவி புரிந்துவந்தார். அந்த சமயத்திலே சென்னை சீப் ஸெக்ரிடேரியட் ஆபீஸ் மானேஜராயிருந்தவரும், ‘பிராசீன கானம்’ (Oriental Music in European Staff Notation) என்ற புத்தகத்தின் ஆசிரியருமான ஏ. எம். சின்னசாமி முதலியார் எம்.ஏ.யும் அங்கே இது சம்பந்தமாக வந்திருந்தார். 72 மேளங்களின் தாரதம்யங்கள் பற்றி அங்கே சர்ச்சை நடைபெறும். சின்னசாமி முதலியாரவர்களின் இடைவிடாத நண்பராயிருந்து அவ்வப்போது அவருக்கு வேண்டிய உதவிகளைப் புரிந்தவர் எட்டயபுரம் குருகுஹதாஸப் பிள்ளை அவர்களாவர். அவர்களுடனே பாரதியாரும் மேற்படி சங்கீத விவாதம் நடக்குமிடத்துக்குச் செல்வார்; சென்று ராக லக்ஷணங்கள் அவற்றின் சஞ்சாரங்கள் முதலியவைகளைத் தெளிந்து அப்யஸிப்பார். இவ்விதமாக பாரதி ஸங்கீதத்தில் விற்பன்னரானார். ஸ்ரீ சுப்பராம தீட்சிதர் பேரிலே பாரதி ஒரு சரம கவிபாடியிருக்கிறார். பின்னே 1908-ல் பாரதி எட்டயபுரம் போயிருந்தார். அப்பொழுது நீ சுப்பராம தீட்சிதர் அவர்களது வீட்டுக்குப் போனார். ‘ஸங்கீத ஜோதி மறைந்ததே’’ என்று வாய்விட்டுக் கூறினார். பாரதியும் தீட்சிதரும் முன்பு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த இடத்தைப் பத்து நிமிஷம் உற்று நோக்கினார்; கலகலவென்று கண்ணீர் உகுத்தார். அவ்விடத்தை வீழ்ந்து சமஸ்கரித்து விட்டுப் போய்விட்டார்.