பாரதியின் குரல்

முகநாலில் ; வேலாயுத முத்துக்குமார்

தமிழ்நாட்டிலே தமிழ் சிறந்திடுக. பாரத தேச முழுவதிலும் எப்போதும் போலவே வடமொழி வாழ்க. இன்னும் நாம் பாரத தேசத்தின் ஐக்கியத்தைப் பரிபூர்ணமாகச் செய்யுமாறு நாடு முழுவதிலும் வடமொழிப் பயிற்சி மேன்மேலும் ஒங்குக. எனினும் தமிழ்நாட்டில் தமிழ்மொழி தலைமைப் பெற்றுத் தழைத்திடுக.

%
தமிழ்நாட்டில் தேசியக் கல்வியென்பதாக ஒன்று தொடங்கி அதில் தமிழ் பாஷையைப் பிரதானமாக நாட்டாமல் பெரும்பான்மைக் கல்வி இங்கிலீஷ் மூலமாகவும், தமிழ் ஒருவித உப பாஷையாகவும் ஏற்படுத்தினால் அது ‘தேசீயம்’ என்ற பதத்தின் பொருளுக்கு முழுதும் விரோதமாக முடியுமென்பதில் ஐயமில்லை.

%
தேச பாசையின் மூலமாகவே இந்தச் சரித்திரப் படிப்பு மட்டுமேயன்றி மற்றெல்லாப் பாடங்களும் கற்பிக்கப்பட வேண்டுமென்பது சொல்லாமலே விளங்கும். தேச பாஷையின் மூலமாகப் பயிற்றப்படாத கல்விக்கு தேசீயக் கல்வி என்று பெயர் சொல்லுதல் சிறிதளவும் பொருந்தாது போய்விடுமென்றோ !

%
வியாபாரத்தில் கூட்டு வியாபாரம் எங்ஙனம் சிறந்ததோ அது போலவே கைத்தொழிலிலும் கூட்டுத் தொழிலே சிறப்பு வாய்ந்ததாம். முதலாளியொருவன் கீழே பல தொழிலாளிகள் கூடி நடத்தும் தொழிலைக் காட்டிலும் தொழிலாளிகள் பலர் கூடிச் செய்யும் தொழிலே அதிக நன்மையைத் தருவதாகும்.

%
விடு என்ற சொல்லுக்கு விடுதலை என்பது பொருள். வெளியில் எத்தனையோ அச்சங்களுக்கு ஹேதுக்கள் உள. அவ்விதமான அச்சங்கள் இல்லாமல் விடுதலைப் பட்டு வாழத் தகுந்த இடத்துக்கு விடு என்று பெயர் கொடுத்தனர் போலும். ‘விடத்தக்கது வீடு’ என்ற பிற்கால உரை ஒப்பத்தக்கதன்று. ‘விடத்தக்கது வீடு’ என்பது கற்றோர் துணிவாயின், அக்கற்றோர் வீட்டில் குடியிருப்பது யோக்கியதையன்று; அவர்கள் காட்டில் சென்று வாழ்தல் தகும்.

%
அனாவசியமான தண்டத்திற்கெல்லாம் தமிழர் பணத்தை வாரி இறைக்கிறார்கள். ‘கான்பரென்ஸ்’ என்றும் ‘மீட்டிங்’ என்றும் கூட்டங்கள் கூடி விடிய விடிய வார்த்தை சொல்லுகிறார்கள். கிராமங்கள் தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போடுவதற்கு யாதொரு வழியும் செய்யாமல் இருக்கிறார்களே ! படிப்பில்லாத ஜனங்கள் மிருகங்களுக்குச் சமானமென்று திருவள்ளுவர் பச்சைத் தமிழிலே சொல்லுகிறார். நமக்குள் எத்தனையோ புத்திமான்கள் இருந்தும் நம்மிலே முக்காற் பங்குக்கு மேலே மிருகங்களாக இருக்கும் அவமானத்தைத் தீர்க்க ஒரு வழி பிறக்கவில்லையே ! ஏன்? எதனாலே ! காரணந்தான் என்ன !

%
ஒரு ஜாதி ஒர் உயிர் ; பாரதநாட்டிலுள்ள முப்பது கோடி ஜனங்களும் ஒரு ஜாதி. வகுப்புகள் இருக்கலாம் ; பிரிவுகள் இருக்கலாகாது ; வெவ்வேறு தொழில் புரியலாம் ; பிறவி மாத்திரத்தாலே உயர்வு தாழ்வு என்ற எண்ணம் கூடாது. மதபேதங்கள் இருக்கலாம் ; மத விரோதங்கள் இருக்கலாகாது. இவ்வுணர்வே நமக்கு ஸவதந்திரமும் அமரத்தன்மையும் கொடுக்கும்.

%

எல்லா உயிர்களும் மரணத்துக்கு அஞ்சுகின்றன. ஆனால் வறுமை மரணத்திலும் பெரிய துன்பமென்றுணர்ந்த ஏழைகள் மாத்திரமே ‘தெய்வமே எனக்கொரு சாவு வராதா’ என்று சில சமயங்களில் வேண்டுவது காண்கிறோம்.

%
சோம்பேறி ! பிச்சைக்காரன் தானா சோம்பேறி ! பணம் வைத்துக் கொண்டு வயிறு நிறையத் தின்று தின்று யாதொரு தொழிலும் செய்யாமல் தூங்குவோரை நாம் சீர்திருத்தி விட்டு அதன் பிறகு ஏழைச் சோபேறிகளைச் சீர்திருத்தப் போவது விஷேசம். பொறாமையும் தன் வயிறு நிரப்பி பிற வயிற்றை கவனியாதிருத்தலும், திருட்டும் கொள்ளையும் அதிகாரமுடையவர்களும் பணக்காரர்களும் அதிகமாகச் செய்கிறார்கள், ஏழைகள் செய்யும் அநியாயம் குறைவு. செல்வர் செய்யும் அநியாயம் அதிகம். இதைக் கருதியே ப்ரூதோம் என்ற பிரஞ்சு தேசத்து வித்துவான் ‘உடைமையாவது களவு’ என்றார். ஏழைகளே இல்லாமற் செய்வது உசிதம். ஒரு வயிற்று ஜீவனத்துக்கு வழியில்லாமல் யாருமே இருக்கலாகாது. அறிவுடையவர்கள் இப்போது பெரும்பாலும் அந்த அறிவை ஏழைகளை நசுக்குவதிலும் கொள்ளையிடுவதிலும் உபயோகப்படுத்துகிறார்கள்.