தோப்பில் முகமது மீரான் / ஆபிதீன் பக்கங்கள்

ஒரு கடலோர கிராமத்தின் கதையிலிருந்து சாய்வு நாற்காலி வரைக்கும் நிறைய எழுதியாச்சு. இப்ப இந்த படைப்புகளிலேர்ந்து ஒரு படைப்பை நீங்கள் தேர்ந்தெடுக்கனும் என்று சொன்னால் நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

நாலு நாவல்கள் வந்திருக்கு. இதுலே எது சிறந்ததுண்டு கேட்டா நாலும் சிறந்ததென்றுதான் சொல்வேன். இருந்தாலும் – வெளிவந்ததிலே – எனக்கு சிறந்ததாகப் படுறது ’சாய்வு நாற்காலி’. எதனாலே எனக்கு விருப்பம்டு சொன்னா அதுல இருநூறு ஆண்டு கால வரலாறு சொல்வேன். அஞ்சு தலைமுறை சொல்லிட்டு வர்றேன். அஞ்சாவது தலைமுறையிலே உள்ள மூதாதையர் ரத்தத்திலே உள்ள சில விஷயங்கள் பின் தலைமுறையிலும் வரும் என்பதைத்தான் சாய்வு நாற்காலிலெ சொல்றேன். அது மட்டுமல்ல; ஒரு காலத்திலே மதம் , அரசு, மக்களாட்சி… இதையெல்லாம் தொகுத்து அப்படியே கொண்டு வர்றேன் – ’சாய்வு நாற்காலி’லெ. ஆனா சாதாரண வாசகர்களுக்கு அது புரியல்லே..அவன் அந்த கதையை ஒரு குடும்ப வாழ்வினுடைய வீழ்ச்சி , குடும்பம் நசிஞ்சி போறதுங்கறதைப் பத்தி பேசுறாங்களேயொழிய அந்த நாவலுடைய spiritஐ யாருமே புரிஞ்சிக்கலே..என்னைப் பொறுத்தவரை அதுல ஒவ்வொரு கதாபாத்திரமும்….மனிதனைவிட கம்பு, பிரம்புலாம் பேசும். சாய்வு நாற்காலி..அது பேசும். அவைகள்தான் கதாபாத்திரம்; மனிதர்களல்ல. இந்த கதாபாத்திரங்கள் பேசுறதுக்காகத்தான் மனிதர்களை படைச்சிருக்கேன். இதுபோல இன்னொன்னு – அதே formலே – என்னாலெ படைக்க முடியாது.