ஹரித்வாரில் மஹா கங்கா புஷ்கர விழா!/ஜெ.பாஸ்கரன்

சுமார் 20 – 25 வருடங்களுக்கு முன்னால் ஹரித்வார் – ரிஷிகேஸ் போயிருக்கிறேன். ஹரித்வாரில் ஆர்பரித்துப் பாய்ந்தோடும் கங்கை, ரிஷிகேஸில் அமைதியாய்ப் புரண்டோடும்! வெளியில் வெயில் சுட்டெரித்தாலும், கங்கையின் தண்ணீர், அப்போது உருகிய பனியைப் போல ‘சில்’லென்றிருக்கும். சுற்றிலும் மலைகளும், இயற்கை அழகும் மனதிற்கு மிகவும் ரம்யமானவை. இந்த வருடம் ஏப்ரல் 25 முதல் 28 வரை, கங்கா புஷ்கர புண்ணிய காலத்தில் கங்கையில் நீராட ஹரித்வார் – ரிஷிகேஸ் சென்று வந்தோம்.

காலை ஐந்தரை மணிக்கு சுறுசுறுப்பாக இருந்தது சென்னை விமான நிலையம். கோயம்பேடு பஸ் நிலையத்தைவிடக் கொஞ்சம் கூட்டம் கூடத்தான்! ஆதார் காண்பித்து, போர்டிங் பாஸ் காண்பித்து, முகத்தை முறைத்து, செக்யூரிடியில் உடமைகளை கொஞ்ச நேரம்துறந்து, டெல்லி ஃப்ளைட்டுக்கான கேட்டில் வந்து அமர்ந்து, பெரு மூச்சு விட்டோம்! விமானத்திற்காகக் காத்திருக்கும் இடத்தைப் ‘பெரிய திமிங்கிலத்தின் வயிறு போல’ இருந்ததாக எழுதுவார் அசோகமித்திரன். அது ஏனோ இப்போது நினைவுக்கு வந்தது. ஹிக்கின்பாதம்ஸில் சுஜாதாவின் ‘நிலா நிழல்’, ‘எழுத்தும் வாழ்க்கையும்’ வாங்கிக்கொண்டேன். எதிர்பார்த்தாற்போல், கலா, “புத்தகமா?” என்று கேட்டாள்….

அந்தப்ரைவேட் ஃப்ளைட் குறுகலாக இருந்தாற்போலத் தோன்றியது. பக்கதிற்கு மூன்று இருக்கைகள், நடுவில் ஒருவர் செல்லத்தக்க பாதை – கொடுத்த காலைச் சிற்றுண்டி, மற்றும் விமானப் பணிப் பெண்கள் பற்றி சொல்லும்படியாக ஒன்றுமில்லை! வாத்தியாரின் கட்டுரைகளில் மூழ்கிப்போனேன் – எழுதுவதற்கும், பேசுவதற்கும் நிறையவே உள்ளன அந்தப் புத்தகத்தில்!

இறக்கி விட்ட இடத்திலிருந்து, லக்கேஜ் எடுக்கும் இடத்திற்கு நடந்தோம் – சென்னையிலிருந்து – டெல்லி தூரத்தில் பாதி இருக்கலாம்! டில்லி ஏர்போர்ட் பன்னாட்டு விமான நிலையங்களுக்குச் சற்றும் குறைவில்லாத வசதிகளுடனும், பள பளப்புடனும் இருந்தது! வந்த உடனே பெட்டிகள் சுழன்று வர, எடுத்துக்கொண்டு வெளியே வந்தோம்.

வெள்ளை யூனிஃபார்மில் சிரித்த முகத்துடன் வந்த டிரைவர் சக்ஸெனா, அருகிலேயே நின்றுகொண்டு, செல் போனில் எங்களுடன் பேசிக்கொண்டிருந்தார். எங்கள் அரைகுறை இந்தியும், அவரின் அரைகுறை ஆங்கிலமும் எங்களுக்குப் போதுமானதாக இருந்தது. அருமையான டிரைவர், நல்ல கார். டில்லியிலிருந்து புறப்பட்டு, மீண்டும் டில்லி ஏர்போர்ட்டில் கொண்டு விடுவது வரை – செவ்வாய் முதல் வெள்ளி வரை – எங்களுடனேயே இருப்பதாக ஏற்பாடு! வழியில் டெரகோடா டம்ளரில் டீ, கரும்பு ஜீஸ், நல்ல ‘தாபா’ என மிகவும் உதவியாக இருந்தார். திட்டம் ஏதுமில்லாமல் சென்ற பயணம் – தடங்கல் ஏதுமின்றி நன்றாக அமைந்ததில், சக்ஸெனாவின் பங்கு குறிப்பிடத்தக்கது!

அருமையான புறவழிச் சாலைகள் – மீரட் போன்ற டவுன்களின் நெரிசலில் சிக்காமல், விரைவாக ஹரித்வார் செல்ல முடிந்தது. ‘ஷிவா டூரிஸ்ட் தாபா’ வில் லஞ்ச் – நீள நீள பாசுமதி அரிசியில் சோறு – பாதி சேமியாவைப்போல நீளம் – ரோட்டி, தால், பன்னீர் போட்ட சப்ஜி, க்ரீன் சாலாட், சட்டியில் கெட்டியான தயிர் என நன்றாகவே இருந்தது. ஏதோ அரட்டை அடித்தவாறு சென்றோம் – மூன்று மணியளவில், எங்கள் இந்தியில் ‘மட் கா பாட்’ சாய் கேட்க, சக்ஸெனா சிரித்தபடியே சரியான இந்தியில் ஒருமுறை திருப்பிச் சொல்லி, நல்லதொரு இடத்தில் டீ வாங்கிக்கொடுத்தார். கொதிக்கும் டீ, டெரகோட்டா டம்ளரில் முதலில் உதட்டினைச் சுட்டாலும், விரைவில் ஆறிவிடுகிறது. சுற்றுச்சூழலைக் கெடுக்காத டம்ளர்கள் – டிஸ்போசபிள் என்பது குறிப்பிடத்தக்கது.

கங்கையைக் கண்ட இடத்தில், காரை நிறுத்தி, வணங்கிய சக்ஸெனா எனக்கு வியப்பளிக்கவில்லை. 25 வருடங்களுக்கு முன்பு எங்களை அழைத்துச்சென்ற டிரைவரும் இதையேதான் செய்தார். நதிகளை வணங்குவது, நமது கலாச்சாரம், பண்பாடு, நாகரீகத்தின், நன்றியறிதலின் வெளிப்பாடு – அது கங்கையானாலும், காவிரியானாலும், சிந்துவானாலும், தாமிரபரணியானாலும் ஒன்றுதான்.

நண்பரின் கெஸ்ட் ஹவுஸில் தங்கினோம் – இரண்டு ஏசி அறைகள், குளியல் அறைகளுடன். ஆனாலும், மூன்று நாட்களும் கங்கையில் தான் குளியல்! சுமார் 2 அல்லது 3 கிமீ தூரத்தில் கங்கை. மாலை கங்கா ஆர்த்திக்குச் செல்லலாம் என முடிவெடுத்து, சிறிது அறையில் ஓய்வெடுத்தோம்!

மாலை கங்கா ஆர்த்திக்குக் கிளம்பினோம்….

அதற்கு முன் கங்கா புஷ்கரம் பற்றி…

குரு பகவான் குருப்பெயற்சி காலங்களில் அந்தந்த ராசிக்குரிய தீர்த்தங்களில் வருடம் முழுவதும் வாசம் செய்வதாக ஐதீகம். முதல் 12 நாட்கள் ‘ஆதி புஷ்கரம்’ என்றும், கடைசீ 12 நாட்கள் ‘அந்திம புஷ்கரம்’ என்றும் (இந்த நாட்களில் குரு பகவான் அந்தந்த தீர்த்தங்களில் முழுவதுமாக பிரவேசித்திருப்பார்) கொண்டாடப்படுகின்றன. மற்ற நாட்களில் மதியம் 12 மணி முதல், 1 மணி வரை வாசம் செய்வதாக ஐதீகம். இந்த புஷ்கர புண்ணிய காலத்தில் மும்மூர்த்திகளும், தேவர்களும், ரிஷிகளும் அந்தந்த தீர்த்தங்களுக்கு வந்து நீராடி மகிழ்வதாக நம்பிக்கை. எனவே புஷ்கர காலங்களில் குறிப்பிட்ட நதிகளில் நீராடுவது மூன்றரை கோடி தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணியத்திற்கு நிகரானது. புஷ்கர காலங்களில் அந்தந்த புண்ணிய நதி தீரங்களில் பித்ரு பூஜைகள், ஆன்மீகச் சொற்பொழிவுகள், பக்தி இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

இந்த வருடம் ஏப்ரல் மாதம் 22 முதல் மே மாதம் 3 வரை ஹரித்வார் கங்கா புஷ்கரம் – ‘ஆதி புஷ்கரம்’ கொண்டாடப்படுகிறது. குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு கங்கா நதியில் பெயர்ச்சி ஆகி, 12 நாட்களுக்கு வாசம் செய்வார். காஞ்சி காமகோடி மடத்து ‘மகரவாகினி கங்கா தேவி’ கோயிலில் ஹோமங்களும், பூஜைகளும், அருகில் இருக்கும் பிர்லா காட் (படித்துறை) டில் கங்கா ஆரத்தியும் நடைபெறுகின்றன.

சித்தாந்த ஸரளி ஸிக்ரந்தம், ஶ்ரீ ஸ்கந்த புராணம், ஶ்ரீ நாரத புராணம் போன்றவற்றில் “மேஷேச கங்கா / விருஷபேச ரேவா / மிதுனேது சரஸ்வதி / கர்கடே யமுனா / ப்ரோக்தா சிம்மே கோதாவரி / ஸ்மிருதா கன்யாயாம் கிருஷ்ணவேணீச / காவேரி தடகே ஸ்மிருதா விருச்சிகே ….. என புண்ணிய நதிகளுக்கான ராசிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

தொடரும்.

One Comment on “ஹரித்வாரில் மஹா கங்கா புஷ்கர விழா!/ஜெ.பாஸ்கரன்”

Comments are closed.