ஹரித்வாரில் மஹா கங்கா புஷ்கர விழா! (4)/ஜெ.பாஸ்கரன்

மூன்றாம் நாள் கங்கா ஆரத்தி பார்த்து, கங்கைக் கரையில் மனம் கரைந்து, நெகிழ்ந்து, மனமில்லாமல் கெஸ்ட் ஹவுஸ் திரும்பினோம். வழியில், ஓர் அருமையான ஓட்டலில் சுவையான டின்னர் சாப்பிட்டோம்; பொதுவாகவே இதுவரை நல்ல சுவையான உணவே கிடைத்தது மகிழ்ச்சிக்குரிய விஷயம்! கெஸ்ட் ஹவுஸில் சமையல் செய்து கவனித்துக்கொள்பவர் ஏதோ சொந்த விஷயமாக ஊருக்குச் சென்று விட்டதால், காலை காபி எல்லாம் வெளியில்தான்.

South Indian Upahar ஒரு சிறிய சிற்றுண்டி சாலை, கெஸ்ட் ஹவுஸிலிருந்து சுமார் அரை கிமீ தூரத்தில் உள்ளது. இரண்டு முறை சென்றபோதும், மூடியே கிடந்தது. இட்லி சாம்பார், மசாலா தோசை, பட்டு (Paddu) என்கிற தோசை உருண்டைகள், கோபி மஞ்சூர்யன் எல்லாம் போர்டில் இருந்தன. அங்கு வரும் மாத்துவர்களும் (அருகிலேயே அவர்களது மடம் உள்ளது), தெலுங்கர்களும் உணவு உண்ணும் இடம் அது என்று தெரிந்துகொண்டோம். அன்று காலை அதிசயமாகத் திறந்திருந்தது – செல்ஃப் சர்வீஸ். தோசை, வடை, பொங்கல் இட்லி என கைகளில் ஏந்திய வண்ணம் மராட்டியும், தெலுங்கும் பேசும் யாத்ரீகர்கள். பதினைந்து நிமிடம் காத்திருந்து ஃபில்டர் காபி (கொஞ்சம் ப்ரூ கலந்தாற்போன்ற சுவையுடன்!) வாங்கிக் குடித்தோம் – வடக்கில் ‘டீ’தான் சுகம் என அடிநாக்கு சொன்னது!

நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து இரண்டு கிமீ துரத்தில் கங்கைப் படித்துறை ஒன்று இருப்பதாகச் சொன்னார்கள். அன்று காலையும் கங்கையில் குளிக்க விரும்பி, அந்தப் படித்துறை பற்றி விசாரித்தோம். ஏதும் சரியாகத் தெரியாததால், மீண்டும் சங்கர மடத்திற்கே சென்றோம். மனங்குளிர மீண்டும் கங்கா ஸ்நானம்! மானசா தேவி கோயில்களுக்கு நாங்கள் செல்லமுடியவில்லை என்பதை அறிந்த புஷ்கர் ஏற்பாட்டாளர், தங்களிடம் சொல்லியிருந்தால், கோயிலுக்குச் செல்ல ஸ்பெஷல் பாஸ் கொடுத்திருப்பேனே என்றார். அன்று ரிஷிகேஸ் செல்ல திட்டமிருந்ததால், மானசா தேவி கோயிலுக்குச் செல்லவில்லை. ஒரு பத்தியமான காலை டிபனை முடித்துக்கொண்டு (அரிசி உப்புமா, சட்னி, சாம்பார், இட்லி, பொங்கல் – சரியாக ந்னைவில்லை!) ரிஷிகேஸ் புறப்பட்டோம். 21 கிமி மலைவழிச் சாலை முக்கால் மணி நேரத்தில் போய்விடலாம் என்றார் சேக்ஸ்னா!

இமயமலை அடிவாரத்தில் கங்கைக் கரையில் அமைந்துள்ள அழகிய இடம் ரிஷிகேஸ். கங்கையின் கிழக்குக் கரையில் ஆசிரமங்கள், கோயில்கள், யோகா, மெடிடேஷன், ஆன்மீக செண்டர்கள் என அமைந்துள்ளன. டேராடூனுக்கு அருகில் அமைந்துள்ளது. ‘யோகாநகரி’ என்ற பெயரும் உண்டு. கடல் மட்டத்திலிருந்து 1120 அடி உயரத்தில், 11.5 சதுர கிமீ பரப்பளவில் உள்ளது. கர்வால் இமயமலையின் நுழைவாயில், உலகின் யோகா தலைநகரம் என்றும் குறிப்பிடப்படுகிறது.

கந்தபுராணத்தில் ரிஷிகேஸ் குறிப்பிடப்பட்டுள்ளது. இராவணனைக் கொன்றதற்காக இராமன் இங்கு தவம் இருந்ததாக ஒரு புராணக் கதை உண்டு. இலட்சுமணன், இரண்டு கயிறுகளைக் கட்டி, இங்கு கங்கையைக் கடந்ததாகக் கூறப்படுகிறது. அதன் நினைவாக இங்குள்ள தொங்கும் பாலம் ‘லட்சுமன் ஜூலா’ என அழைக்கப்படுகின்றது. ஐக்கிய மாகாணத்தின் பொதுப்பணித் துறையால் 1927 ஆம் ஆண்டு லட்சுமன் ஜூலா கட்டப்படது. 1986 ல் அருகிலுள்ள சிவானந்தா நகரில் ராம் ஜூலா என்ற தொங்கும் பாலம் கட்டப்பட்டது. ஆதிசங்கரர் நிறுவிய பழமையான கோயில்கள், இங்கு கங்கைக் கரையில் உள்ளன. வெளிநாட்டினர் யோகா பயிற்சிக்கெனெ ரிஷிகேஸ் வருகின்றனர். நீலகண்ட மஹாதேவ கோயில், வசிஷ்ட முனிவரின் வசிஷ்ட குகை போன்றவை 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளன.

வைஷ்ணவி மாதா பீடம், சூலம் வைத்த பெரிய ஸ்தூபி, சுற்றிலும் மலைகள், கூடவே வரும் கங்கா தேவி, யோக நிகேதன், என ஆன்மீகமும் இயற்கையும் கலந்த சூழல். ரிஷிகேஸ் நெருங்க நெருங்க, கடைகளும், ஓட்டல்களும், தெருக்களும், அரை நிஜார் இளைஞர்களும், இளைஞிகளும், புதிதாய் மணமுடித்த ஜோடிகளும், பழம் தின்றபடி தாவும் குரங்குகளும், ஜீப் மேல் கட்டிய படகுகளும் என ஒரு சுற்றுலாத் தலமாக மாறுவதைக் காணலாம்!

The Classio ஓட்டலில் அறை எடுத்திருந்தோம். அங்கு பணி புரிபவர்கள் மிகச் சிறப்பாகத் தங்கள் விருந்தினர்களைக் கவனித்துக்கொண்டார்கள்! வரவேற்பு ஹாலில் கண்ணைக்கவரும் ஓவியங்கள்! காலை காம்ப்ளிமெண்டரி சிற்றுண்டி. தங்கிய 24 மணி நேரமும் அவர்கள் சேவை சிறப்பாக இருந்தது!

மாலை ரிஷிகேஸ் கங்கையில் (திரிவேணி படித்துறை) ஆர்த்தி பார்த்தோம். இது ‘மகா ஆரத்தி’ எனக் குறிப்பிடப்படுகின்றது. போகின்ற வழியில் பகவத் கீதை, சிவன் சக்தி நடனம், செப்புக் கலர் சுவற்றில் சூரியன், கையில் தாமரை, அன்னப் பறவை, தீபம் போன்றவை சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. ஆர்த்திக்கென தனியான ஓர் இடத்தில் எல்லோரும் பார்க்கும்படியாக காலரி போல படிகள், மேற்கூரை, 13 ஆரத்தி மேடைகள், நடுவில் கங்கா மாதாவின் சன்னதி என சிறப்பாக இருந்தது. 500 ரூபாய் நன்கொடை (ரசீதுடன்!) கொடுத்தவர்கள் பெயருக்கு கங்கா பூஜா செய்து, கங்கை ஜலத்துடன் பிளாஸ்டிக் கூஜா, தேங்காய், பூ பிரசாதம் கொடுக்கிறார்கள். கங்கையில் தீபமும் மிதக்க விடலாம். நாங்களும் கங்கை பூஜை செய்தோம். மிக அருகில் கங்கா ஆரத்தி பார்த்தோம். மேடைகளில் சிவப்பு உடைகளில் நின்றுகொண்டு, கையில் பெரிய தீபங்களை நான்கு திசைகளுக்கும் காட்டி பாடியபடி கங்கைக்கு ஆரத்தி எடுப்பது கண்கொள்ளாக் காட்சி. எங்கள் கைகளிலும் தீபத்தட்டினைக் கொடுத்து, ஆரத்தி எடுக்கச் சொன்னர்கள்! ஆரத்தி முடிந்த பிறகு, பஜன் ஒலிக்க ஹர ஹர மஹாதேவ் எனக் கூவியவாறு, பக்திப் பெருக்கில் எல்லோரும் ஆடினார்கள். ரிஷிகேஸ் கங்கா ஆரத்தி தவறவிடக் கூடாத ஓர் பரவச அனுபவம்!

மறுநாள் காலை சூடான டீ முடித்து, லட்சுமன் ஜூலா சென்று, கங்கையில் ஸ்நானம் செய்ய விரும்பினோம். ஏதோ காரணங்களுக்காக, லட்சுமன் ஜூலா ‘மூடியிருப்பதாக’ச் (!) சொன்னார்கள். அதனால், சற்று தள்ளி இருந்த ராமன் ஜூலா சென்றோம். காரிலிருந்து இறங்கி, ஒரு கிமீ நடந்து, அந்த அழகிய ராமன் ஜூலாவில் நடந்து சென்றோம். கையிலிருக்கும் செல்போன் பறந்துவிடும் போல் அப்படி ஒரு காற்று. கீழே அமைதியாய் ஓடிக்கொண்டிருக்கும் கங்கை. சுற்றிலும் பச்சை பசேலென்ற மலைகள். கங்கைக் கரையில் அங்கங்கே கோயில்களும், படித்துறைகளும், ‘அறிவிக்காமல் வந்துவிட்டேன்’ என்று இதமான சூட்டுடன் எட்டிப்பார்க்கும் ஆதவனும் – ரம்யமான காலை! ஜூலாவில் நடப்பவர்களும், ஸ்கூட்டர், சைக்கிள் வாகனங்களும் எதையும் நின்று ரசிக்கும் மன நிலையில் இல்லையென்று தோன்றியது – அவரவர்க்கு அவசரமான வாழ்க்கை!

ஜூலாவில் (தொங்கும் பாலம்தான்) கங்கையின் அக்கரைக்குச் சென்று, கங்கையில் குளித்தோம்! ஹரித்வார் போன்ற பாதுகாப்பு சங்கிலிகள், ஸ்டீல் கம்பிகள் கிடையாது. அக்கரைக்குச் செல்லும் படகுகள் ஆடியபடி நின்றுகொண்டிருந்தன! படித்துறைகள் சுத்தமாக இருந்தன. சூரிய பகவானைப் பார்த்தபடி, கங்கையின் ஓட்டத்திற்கு எதிர்த் திசையில் பார்த்தபடி, முங்கி எழுந்தோம் – கரையில் முதியவர் ஒருவர் பிளாஸ்டிக் கேன், மற்றும் சின்னச் சின்ன சொவனீர்கள் விற்றுக்கொண்டிருந்தார். சோம்பலாய்ச் சில மாடுகள், கன்றுகள், நாய்கள்… திரும்பி வரும் வழியில் சில கடைகள், ருத்ராட்சம், ஸ்படிக மாலைகள், சிறு சுவாமி விக்ரஹங்கள், ‘ஓம்’ போட்ட சட்டைகள், சங்கு, பட்டு நூல் மாலைகள், தொப்பிகள், கூலிங் கிளாஸ்கள், கைப்பைகள், இன்னும் திறக்கப்படாத ஜூஸ், பழ வண்டிகள், சாமியார்கள், அலங்கரிக்கப்பட்ட ஒட்டகம் ….. சுவாமி சிவானந்தா கோயில், சிவானந்தா மெமோரியல் அரசு பள்லிக்கூடம், சீருடையில் குழந்தகள் – காலை 8 மனியளவில் ரிஷிகேஸ் சுறுசுறுப்பாகத்தான் இருந்தது!

ஓட்டலில் சிற்றுண்டி முடித்து, லக்கேஜ் பேக்கிங் முடித்து, ஓட்டல் சிப்பந்திகள், சுவர் ஓவியங்களுடன் நிழற்படங்கள் எடுத்துக்கொண்டு, சேக்ஸ்னாவிடம் ‘டெல்லி சலோ’ என்றோம்! சிரித்தபடியே ’பாட் கா சாய் நஹீ சாஹியே?’ என்று எங்கள் இந்தியில் பேசினார்! வழியில் சாலையோரத்தில் கரும்பு ஜூஸ் (எலுமிச்சை, இஞ்சி எல்லாம் சேர்த்தது!), தாபாவில் சிறியதாக ஒரு லஞ்ச் முடித்து, மாலை ஐந்து மணியளவில் டெல்லி விமான நிலையம் வந்து சேர்ந்தோம். சேக்ஸ்னாவிடமிருந்து பிரியா விடை பெற்றோம். உழைப்பாளி, கவனமாகப் பணத்தை சேமிப்பவர் – இன்னும் ஒரு மாதத்தில் சொந்தமாக ஒரு ‘இன்னோவா’ வாங்கப் போகிறவர்! நல்ல மனிதர்.

டில்லியில் சிறிது நேரம் இருந்தது – WH Smith புத்தகக் கடையில் எப்போதும் ஏதாவது புத்தகம் வாங்குவது வழக்கம் – இம்முறை சசி தாரூரின் ’The Hindu Way’ வாங்கினேன்! ‘ஸ்டார் பக்ஸ்’ ல் ஃபில்டர் காபி என்று வாங்கினேன் – ‘பரவாயில்லை’ ரகம், விலையோ … வேண்டாம் மீண்டும் மனது சங்கடப்படும்!

ஏர் இண்டியா விமானம் சரியாகக் கிளம்பி, நேரத்திற்கு சென்னையில் இறக்கி விட்டது. கலாவின் பெட்டியின் சக்கரங்கள் உடைந்து, பெட்டியில் விரிசலுடன் தனியாக ஒரு ட்ரேயில் ஸ்பெஷலாகக் கடைசியில் வந்தது! அரைமணி நேரம் யார் யாரோ ஏர் இண்டியா சிப்பந்திகள் போனிலும், நேரிலும் பேசி, காம்பன்சேஷன் அடுத்த விமான டிக்கட்டில் தருவதாக எழுதிக்கொடுத்தார்கள்! அப்போது மணி நள்ளிரவு 12க்கு மேல்! உடைந்த பெட்டியையும் அள்ளிக்கொண்டு, வீடு வந்து சேர்ந்தோம்.

வீடு வந்த பிறகும், ஹரித்வாரும், ரிஷிகேஸும், கங்கையும், புஷ்கரமும் மனதை முழுமையாக ஆக்கிரமித்திருந்தன!