என் பால்யகாலத் தோழி ‘ லட்சும்பா’?/தமிழச்சி தங்கபாண்டியன்

என் பால்யகாலத் தோழி ‘ லட்சும்பா’ என்கின்ற லட்சுமிபிரபா மறைந்த செய்தியைச் சற்றுத் தாமதமாக அறிந்தேன்.
‘அத்தை போயிட்டாங்க பெத்தா’ எனும் ந ந்துவின் மின்னஞ்சலில் புகைப்படத்தில் சிரித்துக்கொண்டு இருந்தாள் லட்சும்பா. ‘கல கல’ வெனச் சிரித்தபடி அவளது மூத்த மகன் திருமணத்தில் என்னோடு வளைய வந்தது தான் அவளை நான் இறுதியாகப் பார்த்த து. ‘ வெடு வெடு’வெனப் பேசிக்கொண்டே ‘துறு துறு’வெனச் சுற்றிவரும் லட்சும்பா சோம்பியோ ஓரிடத்தில் அதிக நேரம் அமர்ந்தோ நான் பள்ளிப் பருவத்தில் பார்த்ததேயில்லை.
மல்லாங்கிணறில் கழிந்த என் பால்யத்தின் சித்திரத்தை அவளில்லாமல் தீட்டமுடியாது.
அவளது அம்மா- எங்களுக்கெல்லாம் ராஜலட்சுமி அத்தை -சுடுகின்ற பேப்பர் ரோஸ்ட் தோசை எனக்கு மிகப் பிடித்தமென்பதால், பள்ளியின் காலை இடைவேளைகளில் ‘ சுமதி வர்றயா’ எனச் சத்தமின்றி கூட்டிக்கொண்டு போய் சுடச் சுடபோடச் சொல்லி தருவாள்.
‘போதுமா’வென கண்ணைச் சுருக்கிக் கொண்டுஅவள் நேற்று கேட்டது போலிருக்கிறது..
இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ விதமான தோசைகள் ருசித்ததுண்டு . ஆனால் அவளது வீட்டில் காய்ச்சிய பசுநெய்யில் சுட்ட ரோஸ்ட் போல எதுவுமில்லை. அந்த பேப்பர் ரோஸ்டை ருசித்த பின்னான என் சந்தோசத்தைக் கண் சுறுக்கிப் பார்த்து மகிழும் லட்சும்பாவின் சிரிப்புத்தான் அதன் ருசிமணமென இப்போது தோன்றுகிறது.
நோயுற்றதாய் என்னிடத்தில் அவள் பெரிதாய்க் காட்டிக் கொண்டதில்லை. இரண்டாவது மகன் திருமணத்திற்கு என்னால் வர இயலாத தைத் தொலைபேசியில் சொன்னேன்.
‘பரவாயில்லப்பா .. ஊர்ல பாப்ப்போம் ல’ என்றாள்.
அடிக்கடி சந்திப்பதில்லைதான்- ஆனாலும்
இராஜபாளையத்திலிருந்த அவளைஇனி எப்போதும் பார்க்கமுடியாதென்கையில் …மல்லாங்கிணற்றின் வீதிகளிலும், தேர்த்திருவிழாவிலும் அவள் கைபற்றியபடி நான் நின்ற நாட்களை நினைத்துக் கொள்கிறேன்…
இப்பதைய என் சுடு நினைவிற்கு
‘பேப்பர் ரோஸ்ட் ‘மணம்!

One Comment on “என் பால்யகாலத் தோழி ‘ லட்சும்பா’?/தமிழச்சி தங்கபாண்டியன்”

  1. மறக்க முடியாத அனுபவம் இளமை காலம். அதிலும் நண்பர்கள், தோழிகள் புடை சூழ அளவளாவிய,மறக்க விரும்பாத காலம் அது.
    பழைய நினைவு அலைகள் பொங்கி ஓடி வரும் சுகமே சுகம்.

Comments are closed.