ஊயர்ந்த மனிதர்/சீவ.தீனநாதன்

(ரமண விருந்து)

பகவான் மலைமீது வாசம் செய்த காலம். அவர் ஓர் உயர்ந்த பாறையின் மேல் உட்கார்ந்திருக்க, அடியார்கள் அவரைச் சுற்றிச் சமதரையில் உட்கார்ந்து கொண்டு, அவரது உபதேசத்தைக் கேட்பார்கள்.

அப்படி பகவானைக் காண வரும் சாதுக்களில் ஒருவர் நிறையப் படித்தவர் அவர்தான் மற்ற சாதுக்களை விட மிக உயர்ந்தவன் என்ற எண்ணம் உள்ளவர்.

ஆகையால் அவர் என்ன செய்வார், பகவானைக் காண வந்தால் மற்ற சாதுகளைப் போலத் தரையில் உட்கார மாட்டார். பகவானுக்கு அருகில் மற்றொரு பாறையின்மீது பகவானுக்குச் சமமாக உட்காருவார். அதாவது தான் பகவானை விடக் குறைந்தவன் அல்ல என்ற மற்ற சாதுக்கள் நினைக்கும்படி நடந்து கொள்வார். இந்தப் பெரிய சாதுவின் இச்செயலைப் பற்றி சாதுக்கள் தங்களுக்குள் பரிகாசமாகப் பேசிக்கொள்வார்கள்.

இந்த நாடகத்தையெலலாம் கண்டும் காணாதவர் போல பகவான் உக்காந்திருப்பார்.

ஒருநாள் இந்த அடியார்கள் பகவான் உட்காரும் ஒரு பாறையை த் தவிர மற்ற பாறைகளை வெகு தூரத்திற்கு உருட்டி விட்டார்கள்.

என்றைக்கும் போல் அன்றும் அங்கிருந்த ஒரே ஒரு பாறையின் மீது உட்கார்ந்தி ருந்தவாறு பகவான் உறையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்தப் பெரிய சாது வந்தார். சுற்று முற்றும் பார்த்தார் பகவான் அருகில் தான் உட்கார வேறு ஒரு பாறையும் இல்லாததைக் கண்டார். சமதரையில் மற்ற சாதுக்களுடன் தான் உட்காருவது மிகவும் கௌரவக்குறைவு என்று நினைத்தார்; அவருக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது . க்ஷமிகவும் படபடப்புடன் விருட்டெனத் திரும்பி அவ்விடத்தை விட்டு மலையிறங்கிச் சென்று விட்டார்.

இந்த வேடிக்கையைப் பார்த்து மற்ற சாத்துக்கள் நகைத்தனர்.

பகவான் கூறினார், நீங்கள் எல்லாருமாகச் சேர்ந்து எனக்கு ஒரு உயரமான ஆசனத்தைக் கொடுத்துவிட்டு, அந்தப் பெரிய சாதுவிற்கு ஒரு ஆசனம் தராமல் விரட்டி விட்டீர்கள்.

‘பகவான் பெரியவர்.
அவர் மட்டும் உயரமான இடத்தில் உட்கார வேண்டுமென்பது உங்கள் நினைப்பு போல இருக்கு.’

‘ஆனால் இதோ! இவனைப் பாருங்கள்; இதற்கு என்ன செய்வீர்கள்? என்று கேட்டவாறு, தனக்குப் பின்னால் ஒரு மரத்தின் உச்சியில் சொகுசாக உட்கார்ந்திருந்த ஒரு குரங்கை காட்டிச் சிரித்தார்

பகவானுக்கு மேல் -கீழ் உயர்வு -தாழ்வு என்ற. பேத பாவனை எது. பாவனை ஏது? அவர்தான் சம திருஷ்டி உள்ளவராயிற்றே!