பகவான் காட்டிய சித்து விளையாட்டு/சிவ.தீனநாதன்

(ரமண விருந்து பாகம் 3 என்ற புத்தகத்திலிருந்து எடுத்தது)

பகவான் ரமணரிடம் சித்தி சக்திகள் உண்டா என்றால் உண்டா என்றால், ஆகா நிறைய உண்டு எனலாம். இதோ! பகவான் ஆற்றிய ஒரு மாபெரும் சித்து விளையாட்டு.

பகவான் பவளக் குன்றில் வாசம் செய்த காலம். அவர் பல மணிநேரம் ஆழ்ந்த சமாதியில் கிடப்பார். அப்போது உடன் இருந்த ஒரு சில அடியார்கள் பிற்பகல் பிக்ஷைக்காக டவுனுக்குப் போவார்கள். பகவான் சமாதி கலைய பல மணி நேரம் ஆகும். பகவானே எப்படித் தனியே விட்டு விட்டுச் செல்வது ? எனவே, குகைக் கதவை மூடி வெளியில் பூட்டு பூட்டி விட்டுச் செல்வார்கள் பூட்டி விட்டு செல்வார்கள்.

இப்படி ஒரு நாள் பகவானைக் குகையில் பூட்டிவிட்டு பிக்ஷைக்குச் சென்ற அடியார்கள் வெகு நேரம் கழித்து வந்தனர். பூட்டைத் திறந்தார்கள் உள்ளே பகவானைக் காணவில்லை. அடியார்கள் திகைத்து நின்று விட்டனர். பகவான் மாபெரும் சித்தர்! பூட்டிய குகையிலிருந்து சூட்சுமமாக வெளியேறி விட்டார் ! இந்த அதிசய செய்தி எங்கும் பரவியது.

இதில் உள்ள சித்து ரகசியத்தைப் பகவான் பல நாட்கள் கழித்து அடியார்களிடம் விவரித்தார். அது என்ன அப்படிப்பட்ட சித்து!

குகைக் கதவும் பூட்டும் பூட்டியபடியேதான் இருக்கும். ஆனால் பகவான் கதவை லாவகமாகத் தூக்கி, வெளியில் வந்து கதவை பழையபடி மாட்டி விடுவாராம்.

இந்த ரகசியத்தைப் பகவான் கூற அடியார்கள் அனைவரும் பலத்த சிரிப்பில் ஆழ்ந்தனர்.

சித்து சக்தி மோட்சத்தை தராது. அது வெறும் விளையாட்டு! சித்து சத்திகளைக் காட்டாத மகா ஞானியாவர் பகவான்.